வியாழன், 14 நவம்பர், 2019

ஆதித்ய விக்ரம் பிர்லா - நவம்பர் 14

புகழ்பெற்ற தொழிலதிபரும் பிர்லா குடும்பத்தின் மிக முக்கியமான உறுப்பினருமான ஆதித்ய விக்ரம் பிர்லாவின் பிறந்தநாள் இன்று.


வியாபாரத்தில் மட்டுமே கால்பதித்து இருந்த பிர்லா குடும்பத்தை உற்பத்திதுறையிலும் முன்னெடுத்தவர் ஞான்ஷ்யாம்தாஸ் பிர்லா என்ற ஜி டி பிர்லா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த மார்வாடி வகுப்பைச் சார்ந்த ஜி டி பிர்லா முதல்முதலில் கொல்கத்தா நகரில் சணல் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார். அங்கிருந்து ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் முக்கியமான தொழில் குழுமமாக பிர்லா குடும்பம் விளங்குகிறது. ஜி டி பிர்லாவின் மகனான பசந்த் குமார் பிர்லாவின் மகனாக 1943ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்தவர் ஆதித்ய விக்ரம் பிர்லா.

அன்று நாட்டின் முன்னணி தொழில் நகரமாக விளங்கியது கொல்கத்தா நகரம். ஆதித்ய பிர்லா கொல்கத்தா நகரின் தூய சவேரியார் கல்லூரியில் படித்து பின்னர் அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி கல்வி நிறுவனமான மசாசூட் பல்கலைக்கழகத்தில் ரசாயன பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பள்ளிப் படிப்பை படிக்கும் போதே சமிஸ்க்ரித மொழியை ஆதித்ய பிர்லா கற்றுத் தேர்ந்தார்.

அமெரிக்காவில் கல்வி பயின்ற பிர்லா 1965ஆம் ஆண்டு பாரதம் திரும்பி, தங்கள் குடும்பத் தொழில்களில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால் அன்றய நிலைமை தொழிலதிபர்களுக்கு சாதகமாக இல்லை. சோசலிசம் என்ற தவறான கொள்கையின் விளைவாக எதை தயாரிக்க வேண்டும், எந்த அளவு தயாரிக்க வேண்டும், எந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசே முடிவு செய்யும் போக்குதான் இருந்தது. பல்வேறு தொழில்சாலைகளை நிறுவ பிர்லா குழுமம் அளித்த விண்ணப்பங்கள் அரசால் நிராகரிக்கப்பட்டன. மனது வெறுத்துப் போன ஆதித்ய பிர்லா வேறு நாடுகளில் தனது தொழில்சாலைகளை நிறுவலாம் என்று முடிவு செய்தார்.

1969ஆம் ஆண்டு முதல் ஆதித்ய பிர்லா தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற தூரக் கிழக்கு நாடுகளில் தனது தொழிலை விரிவுபடுத்தத் தொடங்கினார். விஸ்கோஸ் இழைகள், நூல் தயாரிப்பு, பனைமர எண்ணெய் தயாரிப்பு, ரேயான் இழை தயாரிப்பு என்று பல்வேறு தொழிற்சாலைகளை அவர் இந்த நாடுகளில் நிறுவினார். அரசின் தவறான கொள்கை முடிவுகள் அவரை இந்த நிலைக்கு தள்ளியது. நாடு பொருளாதார துறையில் முன்னேற்றம் அடைய இந்தக் கொள்கைகள் தடையாக இருந்தன.

1983ஆம் ஆண்டு ஜி டி பிர்லா காலமானார். அவர் தனது பல்வேறு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஆதித்ய பிர்லா வசம் ஒப்படைத்து இருந்தார். பிர்லா குழுமத்தின் தலைமை அதிகாரியாக, குழுமத்தின் முகமாக, நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் முக்கியமான ஒருவராக ஆதித்ய பிர்லா அறியப்பட்டார்.

ஆனால் காலத்தின் கணக்கு வேறு மாதிரியாக இருந்தது. 1993ஆம் ஆண்டு ஆதித்ய பிர்லா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. ஆதித்ய பிர்லாவின் தந்தையான பசந்த் குமார் பிர்லாவும், இருபத்தி ஐந்து வயதே ஆன மகன் குமாரமங்கலம் பிர்லாவும் பிர்லா குழுமத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். பால்டிமோர் நகரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் ஆதித்ய பிர்லா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போதுதான் நாடு சுதந்திரமான பொருளாதாரக் கொள்கைக்கு மாறி இருந்தது. தொழில் நடத்துவதும், லாபம் சம்பாதிப்பதும் பாவகரமான செயல் அல்ல என்று அரசு எண்ணத் தொடங்கி இருந்தது. இன்னும் பல உயரங்களை அடைந்திருக்க வேண்டிய ஆதித்ய விக்ரம் பிர்லா 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் நாள் மரணமடைந்தார்.

ஆதித்ய பிர்லாவின் நினைவாக ஆண்டுதோறும் நாட்டின் தலைசிறந்த பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் படிக்கும் சிறந்த மாணவர்களில் நாற்பது பேரின் படிப்புக்கான தொகையை பிர்லா குழுமம் செலுத்தி வருகிறது. பூனே நகரில் பிர்லா குழுமம் ஆதித்ய விக்ரம் பிர்லா பெயரில் ஒரு மருத்துவமனையை நிறுவி நடத்தி வருகிறது.

பாரத நாட்டின் மிகச் சிறந்த தொழிலதிபரான ஆதித்ய விக்ரம் பிர்லாவின் பங்களிப்புக்காக ஒரே இந்தியா தளம் அவருக்கு நன்றி செலுத்துகிறது.