திங்கள், 14 அக்டோபர், 2019

பரமவீர் சக்ரா விருது பெற்ற அருண் கேத்ரபால் பிறந்தநாள் - அக்டோபர் 14



2001ஆம் ஆண்டு எண்பது வயதான பாரத ராணுவ தளபதி  பிரிகேடியர் எம் எல் கேத்ரபால் பாகிஸ்தானில் உள்ள தனது பூர்விக இருப்பிடத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சர்கோதா நகருக்கு பயணித்தார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய பிரிகேடியர்மொஹம்மத் நாசர் என்ற ராணுவ தளபதி லாகூர் விமானநிலையத்தில் நேரில் வரவேற்று தனது வீட்டில் தங்க வைத்தார். அங்கிருந்து சர்கோதா நகருக்கு அவரை அனுப்பி வைத்து அவர் வாழ்ந்த இடங்களை பார்க்க நாசர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார். மீண்டும் லாகூர் வந்த கேத்ரபால், மீண்டும் மொஹம்மத் நாசரின் வீட்டில் தாங்கினார். விருந்தோம்புதலிலோ அல்லது மரியாதையிலோ எந்த குறையும் இல்லாமல் இருந்தாலும், எதோ ஓன்று கேதர்பாலை நெருடிக்கொண்டே இருந்தது.

பிரிகேடியர் கேத்ரபால் பாரதம் திரும்பும் நாளுக்கு முந்தய இரவில், தனது பலத்தை எல்லாம் திரட்டிக் கொண்டு தளபதி நாசர் பேசத் தொடங்கினார் "ஐயா, பல நாட்களாக நான் உங்களிடம் ஓன்று சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன், ஆனால் உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது எனக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால் விதி உங்களை எனது மரியாதைக்குரிய விருந்தாளியாக அனுப்பி வைத்துள்ளது. இன்று நாம் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி உள்ளோம், அது என்னை இன்னும் கடினமான நிலையில் வைத்து விட்டது. பாரத நாட்டின் இணையற்ற கதாநாயகனான உங்கள் மகனைப் பற்றித்தான் நான் பேசவேண்டும். கொடுமையான அந்த நாளில் நானும் உங்கள் மகனும் வெறும் போர்வீரர்கள் மட்டும்தான், அவரவர் நாடுகளின் மரியாதையையும், எல்லைகளையும் காக்க வேண்டி நாங்கள் எதிரெதிரே நிற்கவேண்டி இருந்தது. அன்று அருணின் வீரம் என்பது இணையில்லாமல் இருந்தது. தனது பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ,பயம் என்பதே இல்லாமல், பீரங்கிகளை அனாயசமாக ஓட்டி வீரசாகசம் புரிந்தார் உங்கள் மகன். இருபுறமும் பலத்த சேதம். முடிவில் நாங்கள் இருவர் மட்டுமே மிஞ்சினோம். எங்களில் ஒருவர்தான் உயிரோடு இருக்க முடியும் என்பது விதியின் எண்ணமாக இருந்தது. ஆமாம், உங்கள் மகன் என் கையால்தான் மரணித்தார். போர் முடிந்த பிறகுதான் அருண் எவ்வளவு இளையவர் என்பது எனக்குத் தெரிய வந்தது. காலமெல்லாம் உங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றுதான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன், ஆனால் இப்போது இதனைக் கூறும்போதுதான் நான் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை, ஆனால் அந்த வீரனை வணங்குகிறேன் என்பதும் அதோடு அந்த வீரனை வளர்த்து வார்த்தெடுத்த உங்களையும் வணங்குகிறேன் என்பதும் புலனாகிறது" என்றார்.

1971ஆம் ஆண்டு பாரத பாகிஸ்தான் போரில் இணையற்ற வீரத்தைக் காட்டி, உச்சகட்ட தியாகமாக தனது உயிரை அளித்த வீரன் அருண்
கேத்ரபாலின் பிறந்ததினம் இன்று. பாரம்பரியமாக ராணுவ சேவையில் இருந்த பரம்பரையைச் சார்ந்தவர் அருண். அவரது தகப்பனாரின் தாத்தா ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற சீக்கியப்படையில் பணியாற்றியவர். தாத்தா முதல் உலகப் போரில் கலந்து கொண்டவர், தந்தை எம் எல் கேத்ரபால் ராணுவத்தில் பொறியாளர் பிரிவில் இருந்தவர். எனவே அருணுக்கு ராணுவ சேவைதான் குறிக்கோளாக இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

1950ஆம் அக்டோபர் மாதம் 14ஆம் நாள் எம் எல் கேத்ரபால் - மஹேஸ்வரி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தவர் அருண். ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் படித்த அருண்,  நேஷனல் டிபென்ஸ் அக்கதெமியில் பயின்று இந்திய ராணுவத்தில் 1971ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் 17ஆவது பூனா குதிரைப் படையில் சேர்ந்தார்.

அருண் ராணுவத்தில் இணைந்த ஆறே மாதத்தில் கிழக்கு வங்க மக்களுக்கு துணையாக பாரத ராணுவம் போரில் இறங்க நேரிட்டது. வானிலும், மண்ணிலும் கடலிலும் போர் முழுவீச்சில் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள சிலாகோட் பகுதியில் பசந்தர் நதியில் பாலம் அமைத்து அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு பூனா குதிரைப்படைக்கு உத்திரவு பிறப்பிக்கப் பட்டது ராணுவத்தில் உள்ள பொறியாளர் பிரிவு தாற்காலிகப் பாலத்தை அமைத்துக் கொண்டு இருந்த போது, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தொடங்கியது. ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அந்த கேத்திரத்தை கைப்பற்றுவது யாரோ அவருக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்பதால் இரு நாடுகளின் படைகளும் முழுமூச்சில் போரில் ஈடுபட்டன.

களத்தில் முன்னேறிச் சென்ற பூனா குதிரைப்படை பிரிவு எதிரிகளின் பீரங்கிகளை வேட்டையாடத் தொடங்கியது. இந்தப் போரில் லெப்டினென்ட் அக்கலாவாட் வீரமரணம் அடைந்தார். இந்திய படையில் மூன்று பீரங்கி வண்டிகள் மட்டுமே இருந்தன. அருணின் தலைமையில் நமது வீரர்கள் பாகிஸ்தானின் பத்து பீரங்கிகளை அழித்தனர். அருண் மட்டுமே ஐந்து பீரங்கிகளை அழித்தார்.

அருணின் பீரங்கி வண்டி எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி எரியத் தொடங்கியது. ஆனாலும் களத்தை விட்டு அகலாது அருண் தாக்குதலைத் தொடர்ந்தார். பாகிஸ்தான் படையில் ஒரே ஒரு பீரங்கியும் இந்தியப் படையில் அருணின் பீரங்கியும் மட்டும்தான் மிஞ்சியது. கடைசி பீரங்கியை அழிப்பதற்கு முன்னர் நெஞ்சில் குண்டு பாய்ந்து அருண் வீரமரணம் எய்தினார். அப்போது அவருக்கு இருபத்தி ஒரு வயதுதான் ஆகி இருந்தது. ஏழு ராணுவ அதிகாரிகள், நான்கு இளநிலை அதிகாரிகள், இருபத்தி நான்கு ராணுவ வீரர்களை இழந்து பாரதம் இந்த வெற்றியைப் பெற்றது.

பாரத நாட்டின் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அருண் கேத்ரபாலுக்கு அளிக்கப்பட்டது. மிக இளைய வயதில் இந்த விருதைப் பெற்ற சிறப்பும் அருண் அவர்களுக்கே உள்ளது.

நேஷனல் டிபென்ஸ் அக்காதெமியின் அணிவகுப்பு மைதானம், அரங்கம் மற்றும் முகப்பு வாயில் ஆகியவற்றுக்கு அருண் கேத்ரபாலின் பெயரை சூட்டி நாடு அந்த வீரருக்கு மரியாதை செலுத்தி உள்ளது.

நாட்டைக் காக்க பலிதானியாக மாறிய வீரர்களின் தியாகத்தை நாம் என்றும் நெஞ்சில் நிறுத்துவோம்.