சனி, 2 நவம்பர், 2019

அருண் ஷோரி பிறந்தநாள் - நவம்பர் 2

நில்லாமல்  ஓடிக்கொண்டு இருக்கும் காலம் இரக்கமற்றது. மிகப்பெரும் ஆதர்சனங்களாக இருந்தவர்கள் தங்கள் நிலையில் இருந்து வீழும் துர்பாக்கியத்தைப் பார்க்கும் வாய்ப்பை அது பலருக்கு அளித்து விடுகிறது. நிறைவேறாத ஆசைகள், கலந்த கனவுகள், ஒட்டாமல் போன உறவுகள் என்று இந்த வரிசை மிகப் பெரியதாக இருக்கிறது. ஒருகாலத்தில் அப்படி பெரும் ஆளுமையாக விளங்கிய பொருளாதார நிபுணரும், பத்திரிகையாளருமான அருண் ஷோரி அவர்களின் பிறந்தநாள் இன்று.



மிகப் பெரிய அளவில் அருண் ஷோரி வெளியுலகத்திற்கு தெரியவந்தது எண்பதுகளின் தொடக்கத்தில். அப்போது அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர். பழுத்த காந்தியவாதியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரும், பிறவிப் போராளியுமாகிய ராம்நாத் கோயங்காவின் தளபதியாக அருண் ஷோரி செயல்பட்டு வந்தார். கத்தியைக் காட்டிலும் பேனாவின் முனை கூர்மையானது என்பதை பாரத மக்களுக்கு அருண் ஷோரி நிரூபித்துக் காட்டினார். அவரது எழுத்துக்கள் அன்றய மஹாராஷ்டிரா முதல்வர் அந்துலேவை ஊழல் குற்றசாட்டுகளால் துளைத்தது. அந்துலே பதவி விலக வேண்டி வந்தது. கோயங்காவும், ஷோரியும், ஆடிட்டர் குருமூர்த்தியும் குறிவைத்தது இந்திரா மீதும் அவர் மகன் ராஜீவ் மீதும். அந்துலேவைத் தொடர்ந்து, போபோர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம், ரிலையன்ஸ் திருபாய் அம்பானியின் முறைகேடுகள் என்று தங்கள் எழுத்துக்களால் அவர்கள் நாட்டின் மனசாட்சியை உலுக்கி எடுத்தனர்.

அன்றய இந்திய ஆட்சிப் பணியில் இருந்த ஹரிதேவ் ஷோரியின் மகனாக 1941ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் நாள் பிறந்தவர் அருண் ஷோரி. ஹரிதேவ் ஷோரி நுகர்வோர் உரிமைக்கான பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தவர். டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் இளங்கலை பட்டத்தையும், அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர் அருண் ஷோரி. அதனைத் தொடர்ந்து உலகவங்கியில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்தார். அதே காலகட்டத்தில் 1972 - 1974ஆம் ஆண்டுகளில் பாரத நாட்டின் திட்டக்குழுவின் ஆலோசகராகவும் இருந்தார்.

1975ஆம் ஆண்டில் இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். அதனை எதிர்த்து ராம்நாத் கோயங்கா அவரது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மூலம் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருந்தார். அந்த போராட்டத்தில் அருண் ஷோரியும் கலந்துகொண்டார். தொடர்ச்சியாக அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார். 1979ஆம் ஆண்டு கோயங்கா எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக அருண் ஷோரியை நியமித்தார். ஷோரியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் செயல்களை விமர்சிக்கும் பணி இன்னும் முனைப்போடு நடைபெற்றது. அவரது சேவைகளை பாராட்டி அவருக்கு 1982ஆம் ஆண்டு மகாசாய் விருது வழங்கப்பட்டது.

பத்திரிகையில் எழுதுவது மட்டுமல்லாமல் பல்வேறு புத்தகங்களையும் அருண் ஷோரி எழுதியுள்ளார். பொய்யான கடவுளை வழிபடுதல் என்று அம்பேத்கார் பற்றிய புத்தகம், பத்வாகளின் உலகம் என்று ஷரியா சட்டங்களைப் பற்றி, இந்திய நீதித்துறை செயல்படும் விதம் பற்றி அனிதாவுக்கு பிணை ஆணை கிடைத்தது, இறைவனுக்கு தாயின் மனம் தெரியுமா என்று நரம்பு சீர்கேட்டால் அவதிப்படும் தனது மகனைப் பற்றி என்று பல்வேறு புத்தகங்களை அருண் ஷோரி எழுதி உள்ளார்.

1998 முதல் 2010ஆம் ஆண்டு வரை இரண்டு முறை ஷோரி பாஜகவின் மத்திய மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். வாஜ்பாய் அரசின் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தனியார்மயமாக்கல் ஆகிய துறைகளின் அமைச்சராகவும் ஷோரி பணியாற்றி உள்ளார்.

ராஜ்யசபை உறுப்பினராகப் பணியாற்றியபோது அவர்க்கு அளிக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை கான்பூர் ஐ ஐ டி நிறுவனத்தில் உயிர் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வகம் அளிக்க அவர் வழங்கினார்.

தற்போதய அருண் ஷோரியின் எண்ணப்போக்கு ஒரே இந்தியா தளத்தின் அலைவரிசைக்கு ஒத்ததாக இல்லை என்றாலும், ஆசிரியர் குழுவின் ஆதர்ச நாயகர்களில் ஒருவராக ஒரு காலத்தில் அருண் ஷோரி விளங்கியது என்னவோ உண்மைதான்.

மனம் திருந்திய மைந்தராக தேசத்தின் புனர்நிர்மாணப் பணிக்கு அருண் ஷோரி திரும்பவேண்டும் என்ற பிரார்தனையோடு அவர்க்கு எங்கள் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.