ஞாயிறு, 28 ஜூன், 2020

தாராளமயமாக்கலின் நாயகன் பிரதமர் நரசிம்மராவ் பிறந்தநாள் - ஜூன் 28

நேரு குடும்பத்தைச் சேராத முதல் காங்கிரஸ் பிரதமர், தென்னிந்தியாவைச் சார்ந்த முதல் பிரதமர், தனது  பதவிக்காலத்தை முழுவதும் பூர்த்தி செய்த நேரு குடும்பத்தைச் சாராத முதல் பிரதமர், வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர்,   பத்திரிகையாளர்பல்மொழி விற்பன்னர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பிரதமர் என்ற பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் திரு நரசிம்மராவ் அவர்கள். 

1921ஆம் ஆண்டு அன்றய ஹைராபாத் நிஜாமின் ஆளுகைக்கு உள்பட்ட இன்றய தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தவர் திரு ராவ். சிறுவயதிலேயே உறவினர் குடும்பத்தினருக்கு தத்து கொடுக்கப்பட்டார். தனது ஆரம்ப கல்வியை கரீம்நகர் மாவட்டத்திலும் பட்டப்படிப்பை உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் முடித்தார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை பூர்த்தி செய்தார்.

தெலுங்கு, மராட்டி, ஹிந்தி, சமிஸ்க்ரிதம், தமிழ், ஒரிய மொழி, வங்க மொழி, குஜராத்தி, கன்னடம், உருது ஆகிய பாரதீய மொழிகளிலும் ஆங்கிலம், பிரெஞ்சு, அரபி, பெர்சியன், ஸ்பானிஷ், ஜெர்மன் ஆகிய உலக மொழிகளிலும் புலமை பெற்றவர் நரசிம்மராவ்.

படிக்கும் காலத்திலேயே ஹைதெராபாத் நிஸாமின் ஆட்சியை எதிர்த்து கொரில்லா முறையில் போரிடும் ஒரு குழுவை உருவாக்கினார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக தனது வாழ்வின் இறுதி வரை பணியாற்றினார். 1957, 1962, 1967, 1972 ஆகிய நான்கு சட்டமன்ற தேர்தல்களில் மந்தானி தொகுதியில் வெற்றி பெற்று ஆந்திர சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1977,1980 மற்றும் 1991ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல்களில் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், 1984 மற்றும் 1989 தேர்தல்களில் மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும் 1996ஆம் ஆண்டு ஒடிஷா மாநிலத்தில் இருந்தும் நாடாளுமன்றத்துக்கு தேர்வானார்.

1971ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் 4ஆவது முதல்வராக பதவி ஏற்றார். நில உச்சவரம்பு திட்டம் போன்ற நில சீர்திருத்த சட்டங்களை கடுமையாக அமுல் படுத்தினார். 1977ஆம் ஆண்டு நாடு முழுவதும் இந்திராவுக்கு எதிரான அலை வீசிய போதும் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வானார்.

1980ஆம் ஆண்டு மீண்டும் பிரதமரான இந்திராவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த ராவ், மத்திய அமைச்சராக பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றினார். மத்திய உள்துறை, வெளியுறவு துறை, பாதுகாப்பு போன்ற துறைகளில் அவர் தனது பங்களிப்பை அளித்தார்.

கட்சி அவரின் திறமைகளை பயன்படுத்தாத காலங்களில் அவர் கட்சி தலைமையை குறைகூறுவதற்கு பதிலாக பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள முன்னேற்றங்களை பற்றி தெரிந்து கொண்டார். அதுபோன்ற காலகட்டங்களில் சில நூல்களை எழுதினார், பல நூல்களை மொழிபெயர்ப்பு செய்தார். எண்பதுகளின் ஆரம்ப காலங்களிலேயே அவர் கணிப்பொறியை உபயோகிப்பது பற்றி கற்றுக்கொண்டார். ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறுபது வயதில் கற்றுக்கொள்வது என்பது எவ்வளவு கடினம் என்பது நமக்கெல்லாம் தெரியும்தானே

1991ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் அநேகமாக அரசியலில் இருந்து விலகும் எண்ணத்திலேயே நரசிம்ம ராவ் இருந்தார். ஆனால் காலத்தின் கணக்கு வேறுமாதிரியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராஜிவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார். தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆனால் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருந்தது. சோனியா தலைமை ஏற்கவேண்டும் என்று ஒரு சாரார் கூற, நேரு குடும்பத்தின் தலையீடு இனி வேண்டாம் என்று சிலர் கூற, பாரதம் முழுவதும் தெரிந்த தலைவர்கள் எவரும் காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் போக, வயதானவரும், பெருமளவு ஆதரவாளர்கள் இல்லாதவரும், அடுக்கு மொழி வசனங்களால் பொதுமக்களை உணர்ச்சிவசப் படுத்தும் மொழி ஆளுமை இல்லாதவரும், தற்காலிக தலைவராக மட்டுமே இருப்பார் என்ற கருத்தில் சமரச தலைவராகவும், பிரதமராகவும் நரசிம்மராவை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்தது. 

ஆந்திர மாநிலத்தின் நந்தியால் தொகுதியில் இருந்து ராவ் மக்களவைக்கு தேர்வானார். வாமனரூபம் என்று தவறாக எடை போடப்பட்ட நரசிம்மம் ஓங்கி உலகளந்த திரிவிக்ரமனாக தனது ஆளுமையை காட்டியது

அதிக எண்ணிக்கையிலான கட்சி என்ற நிலையில் இருந்து அவர் அறுதி பெரும்பான்மை கொண்ட கட்சி என்ற நிலைக்கு மாறினார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்களுக்கு அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஏழைகளுக்கு உதவுவது என்பது நல்ல எண்ணம்தான். ஆனால் உதவ வேண்டும் என்பதற்காகவே மக்களை ஏழைகளாக வைத்திருப்பது என்பது சரியல்ல. முதல் பிரதமர் நேருவிற்கு இருந்த அதீத சோசலிச சிந்தாந்த விருப்பு என்பது இந்திரா காலத்தில் தொழிலதிபர்கள் மீதான வெறுப்பாக மாறியது. நூறு ரூபாய் சம்பாதித்தால் தொண்ணூற்று ஐந்து ரூபாயை அரசுக்கு வரியாக அளிக்கவேண்டும் என்ற திட்டங்கள் இந்த நாட்டில் இருந்தன. ஒரு தொழிலதிபர் என்ன தயாரிக்க வேண்டும், எப்படி தயாரிக்கவேண்டும், அதை எங்கே எப்படி, எந்த எண்ணிக்கையில் தயாரித்து  எந்த அளவு லாபத்தில் விற்கவேண்டும் என்பதை டெல்லியில் அமர்ந்துகொண்டு சில அதிகாரிகள் தீர்மானித்துக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு தொலைபேசி இணைப்பு கிடைக்க ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்த காலம், இரு சக்கர வாகனம் வேண்டும் என்றால் அதன் விலையைப் போல ஒரு மடங்கு பணத்தை லஞ்சமாக அளிக்க வேண்டும் அல்லது அந்நிய நாடு செலவாணி கொடுத்து வாங்க வேண்டும். நான்கு சக்கர வாகனம் என்றால் அது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே என்று இருந்த காலம். தவறான பொருளாதார கொள்கையால் நாடு திவாலாகும் நிலையில் இருந்தது. வெளிநாட்டு இறக்குமதி கூடி, ஏற்றுமதி குறைந்து, அந்நிய செலவாணி என்பது இல்லாமலேயே இருந்தது. ரிசர்வ் வங்கியின் கையில் இருந்த தங்கம் அடகு வைக்கப்பட்டு, அந்நிய செலவாணி கடனாகப் பெறப்பட்டது.

பொருளாதார சீர்குலைவு, கடந்த மூன்று ஆண்டுகளாக நிலையான மத்திய அரசு இல்லாததால் உருவான குழப்பம், பிரதமராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜிவ் காந்தியின் கொடூரமான மரணம் என்று எல்லா திசையிலும் பிரச்சனைகள், இதற்க்கு நடுவில் பாரத நாட்டில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவையிலும் உறுப்பினராக இல்லாத 70 வயதான ராவ் நாட்டின் ஒன்பதாவது பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். நிலைமையை புரிந்து கொண்ட ராவ் துணிச்சலான முடிவுகளை எடுக்கத் தொடங்கினார். அதிகாரியாக மட்டுமே பணி புரிந்த மன்மோகன்சிங்கை மத்திய நிதியமைச்சராக நியமித்தார். பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டது. தொழித்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப் பட்டன. இந்திய நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது. வருமானவரி, சுங்கவரி உள்பட பல்வேறு வரிவிகிதங்கள் குறைக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டன. குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர மற்ற தொழில்களில் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப் பட்டது. அரசின் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. அடக்கி வைக்கப்பட்டு இருந்த தேசத்தின் ஆன்மா விழித்துக் கொண்டது. மிகக் குறுகிய காலத்தில் பாரத பொருளாதாரம் பல்வேறு முனைகளில் பெரும் முன்னேற்றத்தை அடைந்தது.

ராவின் ஆட்சி காலத்தில் பாரதம் அணுகுண்டு சோதனை செய்யும் நிலைமைக்கு வெகு அருகில் இருந்தது. ஆனால் புத்தர் மீண்டும் ஒரு முறை சிரிக்க இன்னும் கொஞ்ச காலம் காத்துக் கொண்டு இருக்க வேண்டி இருந்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய கும்மட்டம் உடைக்கப்பட்டது. அதை தொடர்ந்து நாடெங்கும் கலவரம் வெடித்தது. மும்பை நகரில் தொடர் குண்டுவெடிப்பு, லத்தூர் நகரில் நிலநடுக்கம் என்று பல்வேறு இன்னல்கள் உருவானது.

மும்பை பங்குச்சந்தையின் தரகர் ஹர்ஷத் மேத்தா பிரதமருக்கு தான் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். பரபரப்பான திருப்பங்களும், பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருந்தாலும் நரசிம்மராவ் தனது பதவிக்காலத்தை முழுவதுமாக பூர்த்தி செய்தார். ஆனாலும் 1996ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான வெற்றியைப் பெற முடியவில்லை. முதன் முதலாக வாஜ்பாய் தலைமையில் பாஜக அரசு பதவி ஏற்றது. அவரும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலக தேசிய முன்னணியின் சார்பில் தேவ கௌடா பதவி ஏற்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை சீதாராம் கேசரிக்கும் அவர் பின் சோனியா காந்திக்கும் சென்றது. காங்கிரஸ் கட்சி ராவைப் புறக்கணிக்கத் தொடங்கியது. அவர் கொண்டு வந்த பொருளாதா சீர்திருத்தங்களின் பெருமையை அது ராஜிவ் காந்திக்கு சொந்தமானது என்று கூறத் தொடங்கியது.

பொதுவாழ்வில் இருந்து மெல்ல மெல்ல விலகிய ராவ் 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் டெல்லியில் காலமானார். அவரது உடலைக் கூட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் வைத்து மரியாதை செலுத்த சோனியா காந்தி சம்மதிக்கவில்லை. அவரது இறுதிச் சடங்குகள் அவர் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக ஆந்திராவில் நடத்தப் பட்டது. பாரத தேசம் என்பதும் அதன் தலைமைப் பதவி என்பதும் நேரு குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது, வேறு யாருக்கும் அதற்கான தகுதியோ பெருமையோ இல்லை என்ற நேரு குடும்பத்தின் கருத்து மிகவும் தெளிவாக வெளியானது.

மிகவும் கடினமான காலகட்டத்தில் இந்த நாட்டை வழிநடத்திச் சென்று, இன்று கிடைத்திருக்கும் பல்வேறு வசதிகளுக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமான திரு நரசிம்மராவை அவரது பிறந்தநாள் அன்று நினைவு கூர்ந்து அவரது சேவைகளுக்காக நன்றி செலுத்துகிறோம்.