ஞாயிறு, 5 ஜனவரி, 2020

மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி பிறந்தநாள் - ஜனவரி 5


பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான திரு முரளி மனோகர் ஜோஷியின் பிறந்தநாள் இன்று. 1934ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் நாள் இன்றய உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா பகுதியில்  பிறந்த ஜோஷி, இயற்பியலில் இளங்கலைப் பட்டத்தை மீரட் கல்லூரியிலும், முதுகலைப் பட்டத்தை அலஹாபாத் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். நிறமாலையில் ( Spectroscopy ) முனைவர் பட்டம் பெற்ற ஜோஷி, அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னாளில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்கசாலக்காக இருந்த பேராசிரியர் ராஜேந்திரசிங்கின் மாணவர் திரு ஜோஷி. முனைவர் பட்டத்திற்கான தனது ஆராய்ச்சிக் கட்டுரையை ஹிந்தி மொழியில் சமர்பித்தவர் ஜோஷி. பாரதத்தில் முதல் முறையாக ஹிந்தியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை இதுதான்.

சிறு வயதிலேயே பசு பாதுகாப்பு இயக்கத்திலும், நிலவரி குறைப்பு போராட்டங்களிலும் ஜோஷி பங்கு பெற்றார். பாரதிய ஜன சங்கத்திலும், அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷித் அமைப்பிலும் ஜோஷி பல்வேறு பொறுப்புகளை வகித்தார். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட உடனேயே கைது செய்யப்பட்ட தலைவர்களில் ஜோஷியும் ஒருவர்.

அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்களவைக்குத் தேர்வான ஜோஷி, ஜனதா கட்சியின் நாடாளுமன்ற செயலாளராகப் பொறுப்பேற்றார். ஜனதா கட்சி உடைந்த பிறகு உருவான பாரதிய ஜனதா கட்சியில் அகில பாரத செயலாளராகவும் பின்னர் பொருளாளராகவும் பணியாற்றினார்.

பிஹார், வங்காளம், வட கிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளராக பணியாற்றிய ஜோஷி, அங்கெல்லாம் பாஜக காலூன்ற வகை செய்தார். 1991 - 1993 காலகட்டத்தில் பாஜகவின் அகில இந்திய தலைவராகவும் ஜோஷி பொறுப்பு வகித்தார்.

1977, 1996, 1998, 1999, 2009, 2014 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அல்மோரா, அலஹாபாத், வாரணாசி, கான்பூர் ஆகிய தொகுதிகளில் இருந்து ஜோஷி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 1992, 2004ஆம் ஆண்டுகளில் ராஜ்யசபை உறுப்பினராகவும் ஜோஷி தேர்வானார்.

முதன்முறையாக வாஜ்பாய் தலைமையில் உருவான அரசின் உள்துறை அமைச்சராகவும், பின்னர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் ஜோஷி பணியாற்றி உள்ளார்.

நூற்றுக்கும் மேலான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும் விகல்ப் மற்றும் பிரக்யா பிரவாக் என்ற நூல்களையும் ஜோஷி எழுதியுள்ளார். ஜோஷியின் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் உலகின் புகழ்பெற்ற அறிவியல் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. திருப்பதி சமிஸ்க்ரித பல்கலைக்கழகம் முரளி மனோகர் ஜோஷிக்கு மஹோமஹோபாத்தியாய பட்டத்தை அளித்து சிறப்பித்து உள்ளது. ஜோஷியின் சேவைகளை அங்கீகாரம் செய்யும் விதமாக பாரத அரசு அவருக்கு 2017ஆம் ஆண்டு பத்மவிபூஷன் பட்டத்தை அளித்துள்ளது.

முதுபெரும் தலைவர் முரளி மனோகர் ஜோஷி இன்னும் பல்லாண்டு காலம் நலமோடு வாழ்ந்து கட்சியையும், நாட்டையும் அறிவுரை கூறி வழிநடத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, திரு ஜோஷி அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.