சனி, 4 ஏப்ரல், 2020

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை - ஏப்ரல் 4

புகழ்பெற்ற தமிழறிஞரான மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை கேரள மாநிலத்தில் ஆலப்புழா நகரில் பெருமாள் பிள்ளை - மாடத்தி அம்மாள் தம்பதியினருக்கு 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் நாள் பிறந்தவர். இளமையிலே சமய வழிபாட்டு நூல்களான தேவாரம் திருவாசகம் ஆகியவற்றை தன் தந்தையிடம் இருந்து  கற்றறிந்தார். நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளை என்ற அறிஞரிடம் சுந்தரம் பிள்ளை முறையாக தமிழ் கற்றறிந்தார். இதே ஆசிரியரிடம்தான் மறைமலை அடிகளும் தமிழ் பயின்றார்.   
1876ஆம் ஆண்டு கேரள பல்கலைக்கழகத்தில் பயின்று பி தேர்வில் வெற்றி பெற்றார். தத்துவத்துறையில் மேல்படிப்பு படிக்கும் போதே 1877 ஆம் ஆண்டு தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார். அந்த ஆண்டே அவருக்கு சிவகாமி அம்மாள் என்பவருடன் திருமணம் நடந்தது

நெல்லையில் உள்ள திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ் கல்விசாலையின் பணியாற்றுமாறு இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்த நிறுவனமே பின்னர் தி தா இந்து கல்லூரியாக உருவானது. கல்லூரி முதல்வராக 1877 முதல் 1879 வரை பணியாற்றினார்  

பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880-ல் எம்.. பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் வருவாய்துறையின்  தனி அலுவலராக பணியாற்றினார். 1885ஆம் ஆண்டு மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். தான் இறக்கும் வரை அவர் இந்தப் பொறுப்பில் இருந்தார்.

திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபை என்ற அமைப்பைத் தொடங்கி சைவப்பணி செய்துவந்தார். திருநெல்வேலிக்கு அருகே உள்ள கோடகநல்லூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த சுந்தர ஸ்வாமிகள் என்பவர் இவரின் ஞான குருவாக விளங்கினார். தத்துவத்திலும் ஆன்மீகத்திலும் சுந்தரம் பிள்ளைக்கு ஏற்பட்ட சந்தேகங்களை சுந்தர ஸ்வாமிகள் தீர்த்து வைத்தார்.   

அந்தக் காலகட்டத்தில் நாடகத்துறையில் சுந்தரம் பிள்ளைக்கு ஈடுபாடு ஏற்பட்டது. ஆங்கிலக் கல்வி வாயிலாக பல்வேறு ஆங்கில நாடகங்களைப் படித்த பிள்ளை தமிழிலும் அதுபோன்ற நாடகங்கள் வெளியேற வேண்டும் என்று நினைத்து அதற்கான பணியில் ஈடுபடலானார். லிண்டன் பிரபு என்பவர் எழுதிய The Secret Way என்ற நாடகத்தைத் தழுவி மனோன்மணியம் என்ற நாடகத்தை இயற்றினார், இந்தக் காப்பியம் 1891ஆம் ஆண்டு வெளியானது.   

‌திருவிதாங்கூர் அரசு 1896 ஆம் ஆண்டு கல்வெட்டுத்துறையை உருவாக்கியது.  சுந்தரனார், அரசுக் கல்வெட்டுத் துறையின் ‘மதிப்புறு தொல்லியல் ஆய்வாளராக’ நியமிக்கப்பட்டார். அவர் திருவிதாங்கூரின் பல பகுதிகளிலும் கிடைத்த கல்வெட்டுக்களைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.

12 முதல் 14ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வேணாட்டு திருவடி அரசர்கள் வரலாற்றையும் அதில் வரலாற்றில் அறியப்படாத 9 வேணாட்டு அரசர்கள் குறித்தும் கல்வெட்டுச் சான்றுகளோடு எழுதினார்.

‌நூற்றொகை விளக்கம்,  ‘சிவகாமி சரிதம்’, ‘ஒரு நற்றாயின் புலம்பல்’, ‘பொதுப் பள்ளியெழுச்சி’, ‘அன்பின் அகநிலை’ ஆகிய கவிதை நூல்களும், ‘ஜீவராசிகளின் இலக்கணம்’,  ‘புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும்’ ஆகிய உரைநடை நூல்களும்,  ‘உரை நடை மடல்,’ ‘கவிதை மடல்’ ஆகிய மடல் நூல்களும் சுந்தரனார் எழுதிய நூல்களாகும்.

திருவிதாங்கூர் அரசர் வரலாறு குறித்து எழுதிய ஆங்கில நூல், மனோன்மணியம் கவிதை நாடகம், நூற்றொகை விளக்கம், திருஞானசம்பந்தர் காலம் பற்றியும் நம்பியாண்டார் நம்பியின் காலம் பற்றியும் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்தும் அவற்றில் சிலவற்றை மொழிபெயர்த்தும் எழுதிய கட்டுரை ஆகியவை சுந்தரனாரின் தமிழியல் பங்களிப்புகள் ஆகும் .   

சுந்தரம் பிள்ளையின் பணிகளைப் பாராட்டி அன்றய ஆங்கில அரசு இவருக்கு ராவ் பகதூர் பட்டத்தை அளித்து மரியாதை செலுத்தியது.

மிகச் சிறந்த அறிஞர்கள் சிறுவயதில் மரணம் அடைவது என்பது நாட்டுக்குப் பேரிழப்பாகும். சுந்தரம் பிள்ளையும் தனது நாற்பத்தி இரண்டாம் வயதில் மரணமடைந்தார்.

மனோன்மணியம் நாடகத்தில் வரும் நீராடும் கடலுடுத்த என்று தொடங்கும் பாடலே தமிழக அரசின் அதிகாரபூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக உள்ளது.

திருநெல்வேலியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு மனோன்மணியம் சுந்தரம் பல்கலைக்கழகம் என்று பெயர்சூட்டி தமிழகம் இவருக்கு மரியாதை செலுத்தி உள்ளது.