செவ்வாய், 23 ஜூலை, 2019

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பிறந்தநாள் ஜூலை 22பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் இன்றய மஹாராஷ்டிரா முதல்வருமான திரு தேவேந்திர பட்னவிஸ் அவர்களின் பிறந்தநாள் இன்று. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட பாட்னவிஸ் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மிக இளைய வயதில் முதல்வராகத் தேர்வானவர்களில் இரண்டாமவர். இவர் தனது நாற்பத்தி நான்காவது வயதில் முதல்வர் பதவியை அடைந்தார். திரு சரத்பவார் தனது முப்பத்தி எட்டாவது வயதில் மஹாராஷ்டிரா முதல்வரானார்.

பட்னவிஸ் 1970ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் நாள் பிறந்தவர். இவர் தந்தை கங்காதர் பட்னவிஸ் பாரதிய ஜனசங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர். அவர் மஹாராஷ்டிரா மாநிலம் மேலவையின் உறுப்பினராகப் பணியாற்றியவர். கங்காதர் பட்னவிஸ் நெருக்கடி நிலையின் போது சிறை தண்டனை அனுபவித்தவர்.

தனது பள்ளிக்கல்வியை நாக்பூர் நகரின் சரஸ்வதி வித்யாலயாவில் முடித்த பட்னவிஸ், தந்து சட்டப் படிப்பை நாக்பூர் அரசு சட்டக் கல்லூரியில் 19992ஆம் ஆண்டு முடித்தார். வணிக மேலாண்மை மற்றும் திட்ட மேலாண்மை துறைகளில் முதுகலை பட்டய படிப்பையும் இவர் படித்துள்ளார்.

படிக்கும் காலத்திலேயே அகில பாரதிய விதார்த்தி பரீக்ஷித் அமைப்பில் இணைத்துக் கொண்ட பட்னவிஸ் பாரதிய ஜனதா கட்சியிலும், நேரடி அரசியலிலும் பல்வேறு பதவிகளை பெற்றுள்ளார். 1992 மற்றும் 1997 ஆகிய இரண்டு முறை பட்னவிஸ் நாக்பூர் மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாக்பூர் மாநகராட்சியின் மிக இளைய மேயர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

1999 மற்றும் 2004ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் நாக்பூர் மேற்கு தொகுதியில் இருந்தும் 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் இருந்தும் பட்னவிஸ் மஹாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்வானார். 2014ஆம் ஆண்டு மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட்னவிஸ் அவர்களின் மிகப்பெரும் சாதனை என்பது வறட்சியால் பாதிக்கப்பட்ட மராத்வாடா பகுதிகளை அதில் இருந்து மீட்டெடுத்ததுதான். 2015ஆம் ஆண்டு அந்தப் பகுதியை பெரும் குடிநீர் தட்டுப்பாடு தாக்கியது. 3,600 கிராமங்களுக்கு 4,640 டேங்கர் லாரிகளில் அரசு குடிநீர் வழங்க வேண்டி இருந்தது. ஆனால் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தியத்தின் மூலம் 2017ஆம் ஆண்டுக்குள்ளாக 886 கிராமங்களுக்கு 669 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் அளவிற்கு பட்னவிஸ் அரசு நிலைமையை சரிசெய்து விட்டது.

இந்தியாவின் வணிக தலைநகரமாகவும், பொருளாதாரரீதியில் மிக முன்னேறிய மாநிலமாகவும் உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசு உள்கட்டுமானப் பணிகளை பெருமளவில் முன்னெடுக்கிறது.

அரசியலில் ஐம்பது என்பது மிக இளைய வயதுதான். இன்னும் நெடுங்காலம் உடல்நலத்தோடு வாழ்ந்து திரு பட்னவிஸ் பாரத நாட்டுக்கு தனது சேவையை ஆற்றவேண்டும் என்று ஒரே இந்தியா தளம் வாழ்த்துகிறது.