செவ்வாய், 2 ஜூன், 2020

இன்போசிஸ் நிறுவனர் நந்தன் நிலகேனி பிறந்தநாள் - ஜூன் 2

இன்போசிஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் இந்தியாவின் குடிமக்கள் பற்றிய முழு தகவல்களை சேகரிக்கும் ஆதார் கார்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய திரு நந்தன் நிலகேனி அவர்களின் பிறந்தநாள் இன்று.

கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த திரு நந்தன் தனது ஆரம்ப கல்வியை தார்வாட் நகரிலும் தனது பொறியியல் கல்வியை மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விநிலையத்திலும் ( IIT Bombay ) முடித்தார். தனது தொழில்வாழ்வை மும்பையில் உள்ள பாட்னி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தொடங்கிய திரு நந்தன் பிறகு அதே நிறுவனத்தில் பணி புரிந்த நாராயணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், ராகவன், தினேஷ், அசோக் அரோரா மற்றும் ஷிபுலால் ஆகியோருடன் இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார். இன்று இந்திய நாட்டை கணினி மென்பொருள் துறையில் உலகத்தின் முக்கிபற்றிய முக்கியமான நாடாக மாற்றியதும், பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்ததன் மூலம் பெரும் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தது இன்போசிஸ் நிறுவனம்.

இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நந்தன் பணியாற்றினார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய மக்களைப் பற்றிய முழு தகவல்களைத் தொகுக்கும் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மத்திய மந்திரிக்கு இணையான பதவி இது. இந்த ஆணையத்தின் முயற்சிதான் இன்று நாடுமுழுவதும் பொதுமக்களுக்கான அடையாள அட்டையாக விளங்கும் ஆதார் அட்டையாகும். இதன்படிதான் பல்வேறு பொருளாதார பலன்கள் தேவைப்படும் தகுதியான மக்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்டார். ஏழாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பதாகக் கூறி அந்தத் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெரும் பணக்கார வேட்பாளராக அறியப்பட்டார். ஆனால் அந்த தேர்தலில் நந்தன் வெற்றிபெறவில்லை.

பல்வேறு தொழில்நுட்ப தொடக்கநிலை நிறுவனங்களில் நந்தன் முதலீடு செய்து அவர்களுக்கு வழிகாட்டியாகும் இருந்துவருகிறார். தனது சொத்தில் சரிபாதி அளவை சமுதாயப் பணிகளுக்கு அளிக்கவும் நந்தன் உறுதி ஏற்றுள்ளார்.


சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து தனது படிப்பின் மூலமும் அயராத உழைப்பின் மூலமும் மிகப்பெரும் உயரங்களை நந்தனின் வாழ்க்கை இந்திய இளைஞர்களுக்கு ஒரு உந்துகோலாக ஐயமில்லை.