திங்கள், 16 செப்டம்பர், 2019

இசைப் பேரரசி எம் எஸ் சுப்புலக்ஷ்மி - செப்டம்பர் 16

உலகின் வெவ்வேறு காலகட்டங்களில் காலத்தைத் தாண்டி நிற்கும் விற்பன்னர்கள் தோன்றுவார்கள். அப்படி கடந்த நூற்றாண்டில் கர்நாடக இசை உலகின் ஒப்பற்ற நட்சத்திரமாகத் தோன்றியவர் திருமதி எம் எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள்.



1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் நாள் மதுரையைச் சார்ந்த வழக்கறிஞர் சுப்ரமணிய ஐயருக்கும் ஷண்முகவடிவு என்ற வீணை கலைஞருக்கும் மகளாகப் பிறந்தவர் எம் எஸ். இவரது பாட்டி அக்கம்மாள் வயலின் வாத்தியக் கலைஞர். குஞ்சமா என்பது எம் எஸ் அவர்களை உறவினர்கள் செல்லமாக அழைக்கும் பெயர்.

குடும்பத்தில் இசை என்பது சுவாசமாக இருந்தது, அது எம் எஸ்ஸுக்கு இயல்பாக பரிமளித்தது. மிகச் சிறுவயதிலேயே எம் எஸ் இசை கச்சேரிகளை நடத்தத் தொடங்கினார். அப்போதுதான் உருவாகிவந்த கிராமபோன் ரெகார்டுகளும், வானொலியும் அவரது இசையை பட்டி தொட்டிகளில் எல்லாம் கொண்டு சேர்த்தது. வாய்ப்பாட்டு மட்டுமல்ல எம் எஸ் வீணை வாசிப்பதிலும், பரத நாட்டியத்தில் நிபுணத்துவதோடு விளங்கினார். ஆனால் காலம் அவரை வாய்ப்பாட்டு இசையின் மகாராணியாக காட்டியது.

தாயார் ஷண்முகவடிவே எம் எஸ்ஸின் முதல் குரு. பின்னர் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், சேத்தூர் சுந்தரேச பட்டர், கடையநல்லூர் வெங்கடராமன் ஆகியோர் இவருக்கு பயிற்சி அளித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி டி எல் வெங்கட்ராம ஐயர், பாபநாசம் சிவன், மைசூர் வாசுதேவாச்சாரியார், பண்டிட் நாராயணராவ் வியாஸ் ஆகியோர் எம் எஸ்ஸுக்கு பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தனர்.

1938ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் கே சுப்பிரமணியனின் சேவாசதனம் என்ற படத்தில் எம் எஸ் நடித்தார். சிறு பெண்களை வயதானவர்கள் மணந்து கொள்வதை கண்டித்து இந்தப் படம் எடுக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் சாவித்ரி என்ற படத்தில் ஆண் வேடமிட்டு நாரதர் வேடத்தில் நடித்தார். மீரா என்ற படத்தில் மீராவாக நடித்தார். இதில் வரும் காற்றினிலே வரும் கீதம் என்ற பாடல் இன்றும் பிரபலமாக உள்ளது.

சதாசிவத்தை மணந்து திரையுலகை விட்டு வெளியேறி இசையுலகில் மட்டும் பயணிக்க முடிவு செய்தார் எம் எஸ். அவரது இசை உலகை இசைய வைத்தது. தனது இசை நிகழ்ச்சிகள் மூலம் பெரும் பணத்தையும் புகழையும் சம்பாதித்தார் எம் எஸ். புகழ் அவரோடு தங்கியது, பணம் முழுவதையும் பல்வேறு சேவைப் பணிகளுக்கு அளித்தார்.

ராஜாஜி, டி.கே.சிதம்பரநாத முதலியார், ராஜா சர் அண்ணாமலை செட்டியர், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சே.சண்முகம் செட்டியர் ஆகியோர் ஆரம்பித்த தமிழ் இசை இயக்கத்திற்கு பக்க பலமாக இருந்தார். பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார் பாடல்களைப் பாடினார்.

1944ல் நான்கு இசை நிகழ்ச்சிகளை நடத்தி 2 கோடி நிதி திரட்டி காந்தியடிகளிடம் “கஸ்தூரிபாய் அறக்கட்டளைக்கு” அளித்தார். அறிவியில் ஆராய்ச்சி கல்வி, மருத்துவம், மற்றும் சமயத் தொண்டு ஆகியவற்றிற்கு நிதி உதவி அளித்தார்.

 23.10.1966ல் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். 100க்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உலக அமைதியை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய மே தி லார்ட் பர்கிவ் என்ற பாடலையும், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் மைத்ரீம் பஜத உலக நன்மை பிரார்த்தனை ஸ்லோகத்தையும் பாடினார்.

மேலும் லண்டன், நியூயார்க், கனடா, கிழக்கு நாடுகள் ஆகியவற்றிலும் இசைக் கச்சேரி செய்துள்ளார். 1975ல் திருப்பதி தேவஸ்தானம் எம்.எஸ்.பாடிய வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தை ஒலிபரப்பியது. மேலும் ஆஸ்தான பாடகியாகவும் அங்கீகரித்தது.

பஜகோவிந்தம், சுப்ரபாதம், குறையொன்றும் இல்லை, ரகுபதிராகவ ராஜாராம், வைஷ்ணவ ஜனதே ஆகியவை எம்.எஸ். பாடியவற்றில் சிகரத்தை தொட்டவை.

நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது. இது தவிர எண்ணற்ற பட்டங்களும் விருதுகளும் மரியாதைகளும் அவருக்கு அளிக்கப்பட்டன. அவரால் பட்டங்கள் பெருமை அடைந்தன என்பது தேய்வழக்காக இருந்தாலும் எம் எஸ் அவர்களைப் பொறுத்தவரை அதுதான் உண்மை.

வாழ்க்கையின் பெரும்பகுதியை தனது கணவரின் வழிகாட்டுதலிலேயே கழித்த எம் எஸ் திரு சதாசிவம் இறந்த பிறகு பாடுவதை நிறுத்திக் கொண்டார். இசைப் பேரரசி 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இசையோடு கலந்தார். ஆனால் மனதை உருக்கும் அவரது இசை இன்னும் பல்லாண்டுகாலம் வாழ்ந்துகொண்டு இருக்கும்.