வெள்ளி, 17 ஜூலை, 2020

ரிசர்வ் பேங்க் முன்னாள் கவர்னர் ஐ ஜி படேல் நினைவுநாள் - ஜூலை 17


இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ரிசர்வ் வங்கியின் நான்காவது கவர்னர் இந்திரபிரசாத் கோர்தன்பாய் படேலின் நினைவுதினம் இன்று. குஜராத் மாநிலத்தைச் சார்ந்த திரு படேல் 1924ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் பிறந்தவர்.

பொருளாதாரத்தில் தனது இளங்கலை பட்டத்தை மும்பை பல்கலைக் கழகத்திலும், முதுகலைப் பட்டத்தை இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் படித்தார். வெளிநாடு சென்று படிக்க, அன்றைய பரோடா மன்னர் இவருக்கு பண உதவி செய்தார். புகழ்பெற்ற ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் பொருளாதார முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

இந்தியா திரும்பிய திரு படேல் பரோடா கல்லூரியில் பேராசிரியராகவும் அதன் பின்னர் அதே கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.

1949ஆம் ஆண்டு International Monetary Fund தனது ஆராய்ச்சிப் பிரிவுக்கு படேலை அழைத்துக் கொண்டது. ஐந்தாண்டுகள் அந்தப் பணியில் இருந்த திரு படேல், அதன் பிறகு இந்தியா திரும்பி இந்திய அரசின் நிதிதுறையின் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார். மீண்டும் 1972ஆம் ஆண்டு ஐநா சபையின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பில் பணி செய்துவிட்டு, 1977ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அவர் ஆளுநராகப் பணியாற்றிய காலத்தில் அன்றய ஜனதா அரசு உயர்மதிப்பீடு கொண்ட ரூபாய் நோட்டுகள் ( 1000, 5000, 10,000 ) செல்லாது என்று அறிவித்தது.

தனது நீண்ட பணிக்காலத்தில் வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் தேசியமயமாக்கம், தொழில் தொடங்கவும், விரிவு படுத்தவும் மிக அதிகமான அரசின் கட்டுப்பாடு, 100% அந்நிய முதலீடு கொண்ட நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறியது போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு படேல் சாட்சியாக இருந்தார்.

அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற படேலை இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் பொருளாதார கல்லூரி ( London School of Economics ) தனது இயக்குனர் குழுவில் ஒருவராக நியமித்தது. இந்த பதவிக்கு தேர்வான முதல் இந்தியர் இவர்தான்.

1991ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்ற நேரத்தில், படேலைதான் நிதியமைச்சராக பொறுப்பு ஏற்கும்படி கோரினார். ஆனால் எதனாலோ படேல் அந்த அழைப்பை ஏற்கவில்லை.

பொருளாதாரத் துறையில் சிறப்பான பங்களிப்புக்காக திரு படேல் அவர்களுக்கு பாரத அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி மரியாதை செலுத்தியது.

2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் நாள் படேல் தனது எண்பதாவது வயதில் நியூயார்க் நகரில் காலமானார்.