சனி, 7 மார்ச், 2020

கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் பிறந்தநாள் - மார்ச் 7


பாரத நாட்டின் வடகிழக்கு பகுதியில் பிறந்து, தெற்குப் பகுதியில் ராணுவப் பயிற்சி முடித்து வடக்கு எல்லையில் நாட்டைக் காக்க தனது உயிரை தியாகம் செய்த கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. 1975ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிறந்த இவர், 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் நாள் கார்கில் போர்முனையில் கேந்த்ர முக்கியத்துவம் வாய்ந்த 4812 என்ற சிகரத்தை தனது உயிரை பலிதானம் செய்து எதிரிகளிடம் இருந்து மீட்டெடுத்தார்.

மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரைச் சார்ந்த திரு கெய்ஷிங் பீட்டர் - சைலி நான்க்ராம் தம்பதியரின் மகன் கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம். தனது பள்ளிப்படிப்பை டான் போஸ்கோ பள்ளியிலும் பின்னர் அரசியல் அறிவியல் துறையில் பட்டப்படிப்பை தூய அந்தோனியார் கல்லூரியிலும் படித்தவர் கேப்டன் கெய்ஷிங். படிக்கும் காலத்திலேயே கால்பந்தாட்டத்திலும், குத்து சண்டையிலும் திறன் பெற்று விளங்கிய கெய்ஷிங் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்று இந்திய ராணுவத்தில் இணைந்தார்.

பயிற்சியை முடித்த கெய்ஷிங், ஜம்மு காஷ்மீர் காலாள்படைக்கு நியமிக்கப்பட்டார். அவர் ராணுவத்தில் இணைந்த இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே இமயத்தின் உச்சியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி, எல்லைகளை மீட்டெடுக்கும் கார்கில் போர் தொடங்கியது. இறுதியில் பாரதம் இந்தப் போரில் வெற்றி பெற்றது என்றாலும், அதற்காக நாம் கொடுத்த விலை மிக அதிகம். வீரமும் துணிச்சலும் சாகசமும் நிரம்பிய பல இளைய ராணுவ அதிகாரிகளின் பலிதானத்தால் அந்த வெற்றி ஈட்டப்பட்டது.

1999ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி இரவில் 4812 என்ற சிகரத்தை எதிரிகளிடம் இருந்து மீட்டெடுக்குமாறு கேப்டன் கெய்ஷிங்க்குக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. செங்குத்தான வழியில் ஏறித்தான் மலை உச்சியை அடைய முடியும். அதிலும் அங்கே பதுங்குகுழி அமைத்து எதிரிகள் தங்கி இருந்தனர். எந்தப் போரிலும் மலை உச்சியில் இருப்பவர்களுக்கு அனுகூலங்கள் அதிகம். பதுங்குகுழி என்பதால் விமானத்தின் மூலமான தாக்குதலும் பயன் தராது. மலையின் மீதேறி சென்ற வீரர்களுக்கு ஓன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும். கட்டாயமாகஉயிரோடு  திரும்பி வரப்போவதில்லை, மூவர்ணக் கொடி போர்த்திய உடலாகத்தான் திரும்புவோம் என்பதில் அவர்கள் யாருக்கும் சந்தேகமே இல்லை. ஆனால் வீரர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுவது இல்லை. கெய்ஷிங் தலைமையில் ஒரு சிறு அணி முன்னேறத் தொடங்கியது.

மலைமுகட்டை நோக்கிச் சென்ற வீரர்களை தொடர்ச்சியான துப்பாக்கிக் குண்டுகளும், பீரங்கி குண்டுகளும் வரவேற்றன. மலை உச்சிக்கு அருகே செல்ல பத்து மணி நேரம் ஆனது. தொடர்ந்து வெடிக்கும் குண்டுகளுக்கு சிக்காமல் தரையோடு தரையாக ஊர்ந்து செல்ல வேண்டிய பாதை அது. மலை உச்சிக்கு மிக அருகே இருக்கும் போது, வேறு எந்த போர்முயையும் பயன் தராது நேரடியான போரைத்தான் தொடங்க வேண்டும் என்று கேப்டன் கெய்ஷிங் முடிவெடுத்தார். மழையென பொழியும் குண்டுகளுக்கு நடுவே புகுந்து தனது கையெறி குண்டுகளை வீசி எதிரிகளின் ஒரு பதுங்குகுழியை  அவர் அழித்தொழித்தார். அதோடு அங்கே பதுங்கி இருந்த பாகிஸ்தான் வீரர்களும் மரணம் அடைந்தனர்.

அடுத்த பதுங்குகுழியில் இருந்து வெளியே வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் கேப்டன் கெய்ஷிங் மீது தாக்குதலைத் தொடங்கினார்கள். இதற்கு நடுவே அவரது வீரர்கள் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி கேந்த்ர முக்கியத்துவம் வாய்ந்த அந்த மலைச்சிகரத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர். ஆனால் எதிரிகளின் தொடர்ச்சியான துப்பாக்கி குண்டுகளை தன்மீது வாங்கி கேப்டன் கெய்ஷிங் வீரமரணம் அடைந்தார்.

கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் அவர்களின் வீரம் இந்தப் போரில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இருபத்தி நான்கு வயதே நிரம்பிய கேப்டன் கெய்ஷிங் அவர்களுக்கு போர்க்காலத்தில் அளிக்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான மஹாவீர் சக்ரா விருதை வழங்கி நாடு தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டது.

தான் ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பும் கேப்டன்  கெய்ஷிங் தனது பகுதியில் உள்ள கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை ராணுவத்தில் சேரச் சொல்லி அதற்கான தயாரிப்புகள் பற்றி வகுப்புகள் எடுப்பது வழக்கம். இன்றும் அவரது படையணியைச் சார்ந்தவர்கள் அவர் நினைவாக ஷில்லாங் நகரின் பல கல்வி நிலையங்களில் ராணுவ சேவைக்காக மாணவர்களை ஆற்றுப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

நமது எதிர்காலத்திற்காக தங்கள் நிகழ்காலத்தை பணயம் வைக்கும் ராணுவ வீரர்களுக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.