வெள்ளி, 22 நவம்பர், 2019

மணமகளா மருத்துவரா - ருக்மாபாய் - நவம்பர் 22.

சிறுவயதில் நடைபெற்ற தனது திருமணம் செல்லாது என்று போராடி மருத்துவராக மாறிய ஒரு வீரப்பெண்ணின் கதை இது. மராத்தி குடும்பத்தைச் சார்ந்தவர் ஜெயந்திபாய். பதினான்கு வயதில் திருமணமாகி பதினைந்து வயதில் தாயாகி பதினேழு வயதில் கணவரை இழந்தவர் ஜெயந்திபாய். கணவனை இழந்த பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து ஜெயந்திபாய் சகாராம் அர்ஜுன் என்னும் மருத்துவரை மறுமணம் செய்துகொண்டார். ஜெயந்திபாய்க்கு முதல் திருமணத்தில் பிறந்த ருக்மாபாய் தன் தாயோடும் சகாராம் அர்ஜுனோடும் வசித்து வந்தார். அன்றய வழக்கத்தின்படி ருக்மாபாயின் பதினோராம் வயதில் அவருக்கு பத்தொன்பது வயதான தாதாஜி பிகாஜி என்பவரோடு திருமணம் நடந்தது.


குடும்பம் நடத்துவதற்கான வயதும் பக்குவமும் வராத காரணத்தால் ருக்மாபாய் தன் பெற்றோர்களோடு வசித்து வந்தார். அப்போது சகாராம் ருக்மாவிற்கு கல்வி கற்பதில் ஆர்வத்தை உருவாக்கினார். திருமணமாகி சிலகாலம் கழிந்த பிறகு தாதாஜி பிகாஜி தன் மனைவி ருக்மாபாய் தன்னோடு வந்து குடும்பம் நடத்தவேண்டும் என்று கூறினார். அன்றய காலகட்டத்தில் இது இயல்பான ஒன்றுதான். ஆனால் படிப்பின்மீதோ கல்வியின்மீதோ எந்த நாட்டமும் இல்லாத கணவரோடு வாழ ருக்மாபாய் மறுத்துவிட்டார். தனது முயற்சிகள் ஏதும் பலனைக்காததால் தாதாஜி பிகாஜி தன் மனைவி தன்னோடு வசிக்கவேண்டும் என கட்டளையிட வேண்டும் என நீதிமன்றத்தை அணுகினார்.

பிகாஜி எதிர் ருக்மாபாய் வழக்கு ( 1885 ) என்ற இந்த வழக்கு அந்த காலகட்டத்தில் பெரும் சர்சையைக் கிளப்பியது. ஹிந்து சட்டங்களுக்கும் ஆங்கில கிருஸ்துவ சட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள், மாறுதல் என்பது தன்னிச்சையாக சம்பந்தப்பட்ட சமுதாயத்தின் உள்ளே இருந்து வரவேண்டுமா அல்லது சட்டத்தின் மூலமாக வெளியே இருந்து திணிக்கப்பட்ட வேண்டுமா, பலகாலங்களாக நடைமுறையில் உள்ள முறைகளை மதிக்கவேண்டுமா அல்லது அவைகளை காலத்திற்கு ஏற்ப மாற்றலாமா  என்ற விவாதங்கள் எழுந்தன. தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் மனமுதிர்ச்சி இல்லாத காலத்தில் நடைபெற்ற திருமணம் செல்லாது என்று நீதிபதி ராபர்ட் ஹில் பின்ஹே தீர்ப்பளித்தார்.

இதனை ஏற்காத தாதாஜி பிகாஜி மேல்முறையீடு செய்தார். ருக்மாபாய் தன் கணவரோடு வாழவேண்டும் அல்லது ஆறுமாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி பாரன் தீர்ப்பளித்தார். தன்மீது திணிக்கப்பட்ட மணவாழ்க்கையை விட சிறைத்தண்டனை ஏற்பது மேல் என்று ருக்மாபாய் முடிவு செய்தார். இதற்கிடையில் இங்கிலாந்து பேரரசி விக்டோரியா மஹாராணி நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து ருக்மாபாயின் திருமணம் செல்லாது என்று உத்தரவு பிறப்பித்தார். இரண்டாயிரம் ரூபாய் இழப்பீடு பெற்றுக்கொண்டு தாதாஜி பிகாஜி தனது திருமண உரிமையை வீட்டுக் கொடுத்தார். 1891ஆம் ஆண்டு ஆங்கில அரசு தனது ஆட்சிக்கு உள்பட்ட இந்தியப் பிரதேசங்களிலும் பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை பத்தில் இருந்து பனிரெண்டாக உயர்த்தியது.

ஒருபுறம் சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தாலும் ருக்மாபாய் மனதில் தனது வளர்ப்பு தந்தையைப் போல தானும் மருத்துவராக  வேண்டும் என்ற கனவு இருந்தது. மருத்துவம் படிக்க லண்டன் சென்ற ருக்மாபாய் 1894ஆம் ஆண்டு லண்டன் பெண்கள் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். காதம்பரி கங்குலி, ஆனந்தி ஜோஷி ஆகியோரோடு மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற முன்னோடி பெண்மணிகளில் ஒருவராக அறியப்படலானார். 1895ஆம் ஆண்டு சூரத் பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிய ருக்மாபாய் பின்னர் ராஜ்கோட் நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றினார். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் மும்பையில் வசித்து வந்தார்.

பல்வேறு தடைகளைத் தாண்டி சாதனை படைத்த ருக்மாபாய் தனது தொன்னூறாவது வயதில் 1955ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் காலமானார்.