வியாழன், 12 டிசம்பர், 2019

விண்வெளி நிபுணர் நம்பி நாராயணன் பிறந்தநாள் - டிசம்பர் 12

பாரத நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக பின்னப்பட்ட சதிவலையை அறுத்தெறிந்து விட்டு வெற்றி வீரராக விளங்கும் நம்பி நாராயண் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆனால் அதில் அவரும், நாடும் இழந்தது அதிகம்.


கன்யாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகரில் 1941ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் நாள் பிறந்தவர் திரு நம்பி நாராயணன் அவர்கள். தனது படிப்பை முடித்த நாராயணன் இந்திய விண்வெளி ஆராய்சி நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தார். விக்ரம் சாராபாயின் தூண்டுதலின் பேரில் அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏவுகணைக்கான திரவ எரிபொருள் பற்றிய படிப்பில் தனது மேற்படிப்பை முடித்தார். அமெரிக்காவில் கிடைத்த வேலைகளை உதறித்தள்ளிவிட்டு மீண்டும் பாரத நாட்டின் சேவைக்குத் திரும்பினார்.

அதுவரை திட எரிபொருள்கள்தான் பயன்பட்டுக் கொண்டிருந்ததை மாற்றி திரவ எரிபொருள்கள் மூலம் விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்களுக்கான மோட்டார் தயாரிக்கும் முயற்சியில் நம்பி நாராயணன் ஈடுபட்டார். அவரது சோதனைகளுக்கு விண்வெளி ஆராய்சி நிலையத் தலைவர்களாக இருந்த சதிஷ் தவான் மற்றும் யு ஆர் ராவின் முழு ஒத்துழைப்பும் இருந்தது. மெதுவாக ஆனால் மிக உறுதியாக விண்வெளி ஆராய்சியில் பாரதம் முன்னேறிக்கொண்டு இருந்தது. பூமிப் பந்தின் மீது ஒரே இடத்தில் இருக்குமாறு, அதாவது பூமி சுழலும் அதே வேகத்தில் சுழலும் செயற்கைகோள்களை ஏவும் ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணியில் நம்பி நாராயணன் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.

அப்போதுதான் அந்த பூகம்பம் வெடித்தது. 1994ஆம் ஆண்டு நம்பி நாராயணன் மற்றும் சசிகுமார் என்ற மற்றொரு விஞ்ஞானி  மீது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ரகசியங்களை எதிரிநாட்டுக்கு அளித்ததாக ஒரு வழக்கு பதிவானது. அதோடு இந்த வழக்கில் இரண்டு மாலத்தீவைச் சார்ந்த இரண்டு இளம்பெண்கள் உள்ளனர் என்றும் இந்த ரகசியத்தை பகிர கோடிக்கணக்கான ரூபாய்கள் கைமாறியது என்றும் தகவல்கள் வந்தன. நாட்டையே உலுக்கிய விவகாரமாக இது வெடித்தது. நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின் போது நாற்பத்தி ஆறு நாட்கள் அவர் காவலில் வைக்கப்பட்டார். விசாரணை என்ற பெயரில் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானதாக அவர் தெரிவித்தார். பிறகு 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டது என்று மத்திய புலனாய்வுதுறை தெரிவித்தது. புகழ்பெற்ற அறிஞரின் வாழ்க்கையை கெடுத்துவிட்டீர்கள் என்று தேசிய மனித உரிமை ஆணையம் கேரள அரசின் மீது கடுமையான கண்டணத்தைத் தெரிவித்தது. அவரிடம் மன்னிப்பு கோரி ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு அது கேரள அரசைக் கேட்டுக்கொண்டது. பத்து லட்ச ரூபாயை நஷ்டஈடாகக் கொடுக்கும்படி கேரள உயர்நீதிமன்றம் கேரள அரசுக்கு ஆணை பிறப்பித்தது.

நடந்த தவறுக்கு எந்தப் பரிகாரமும் தேடாமல், இதில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீதான நடவடிக்கையை கேரள அரசு விலக்கிக் கொண்டது. இதனை எதிர்த்து நம்பி நாராயணன் மீண்டும் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தார். நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நம்பி நாராயணன் அவர்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் நஷ்டஈடாகக் கொடுக்கும்படி உத்திரவு பிறப்பித்தது.

ஏறத்தாழ இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பதில் கிடைத்தது. ஆனால் பாரதத்தின் விண்வெளிதுறை இதற்கு முன்னமே எட்டி இருக்கவேண்டிய வெற்றிகள் காலதாமதமானது.

நடந்த கொடுமைகளுக்கு பரிகாரமாக மத்திய அரசு திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதை வழங்கியது.

என்ன செய்தாலும் நம்பி நாராயணன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் ஆகாதுதான். அவரிடம் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்பதும், அவருக்கு நிம்மதியான வாழ்வை அருளும்படி ஆண்டவனிடம் வேண்டிக் கொள்வதும்தான் இன்று நம்மால் செய்ய முடிந்த ஒன்றாகும்.

திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும், வணக்கங்களையும் ஒரே இந்தியா தளம் தெரிவித்துக் கொள்கிறது.