சனி, 21 மார்ச், 2020

மார்ச் 21 - ஷெனாய் மேதை பிஸ்மில்லாஹ்கான் பிறந்தநாள்

பாரதம்  ஒரு விசித்திரமான தேசம். ஏறத்தாழ இருநூறாண்டு கால ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் சுதந்திரம் அடையும்போது இந்த நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இங்கே பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களோடு இணைந்து வாழ  முடியாது என்று எண்ணிய இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானது. பிரிவினை பல லட்சம் மக்களைக் கொன்று, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடி அதன்மேலே  இரண்டு நாடுகள் உருவானது.

ஆனாலும் இந்தநாட்டின்மீது நம்பிக்கை கொண்டு பல லட்சம் இஸ்லாமியர்கள் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். அப்படி தங்கிய இஸ்லாமியர் ஒருவர்தான் இந்தியாவின் சுதந்திரநாள் அன்றும் இந்தியா குடியரசாக மலர்ந்த நாளன்றும் மங்கள வாத்தியம் இசைத்து வலிமையான பாரதத்தை வரவேற்று வாழ்த்தினார் என்பதும் அந்த மகத்தான கௌரவத்தை அவருக்கு இந்த நாடு அளித்தது என்பதும் யாரையும் நெகிழவைக்கும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும். அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் புகழ்பெற்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் அவர்கள்.

இன்றய பிஹார் மாநிலத்தில் உள்ள தூம்ரான் மாவட்டத்தில் பாரம்பரியமான ஒரு இஸ்லாமிய இசைக்குடும்பத்தில் 1916ஆம் ஆண்டு பிஸ்மில்லாகான் பிறந்தார். இவரது பெற்றோர்கள் இவருக்கு கமருதீன் என்றுதான் பெயர் சூட்ட இருந்தார்கள். ஆனால் இவரது தாத்தா ரசூல் பாக்ஸ்கான் குழந்தையைப் பார்த்த பொழுதில் பிஸ்மில்லாஹ் ( அல்லாஹ்வின் திருப்பெயரால் ) என்று மகிழ்ச்சியோடு கூவினார். அதனால் பிஸ்மில்லாஹ்கான் என்றே இவர் அழைக்கப்பட்டார்.

தனது ஆறாவது வயதிலேயே காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஷெனாய் வித்வானாக இருந்த தனது தாய்மாமா அலி பக்ஷிகானிடம் இவர் தனது இசைப் பயிற்சியைத் தொடங்கினார். தனது இசை காசி விஸ்வநாதரின் அருள் என்பதில் பிஸ்மில்லாஹ்கான் உறுதியான நம்பிக்கை கொண்டுஇருந்தார். ஷெனாய் வாத்தியத்திற்கு இவரால் உலகப்புகழ் கிடைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மத்தியபிரதேச அரசின் தான்சேன் விருது, சங்கீத நாடக அக்காதெமி விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை இவர் பெற்றார். இவை எல்லாவற்றிக்கும் மகுடம் வைத்தது போல 2001ஆம் ஆண்டு இந்திய அரசு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத்ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது.

சங்கீத நாடக அக்காதெமி இவர்பெயரால் உஸ்தாத் பிஸ்மில்லாஹ்கான் யுவபுரஸ்கார் என்ற விருதை 2007 ஆண்டு நிறுவியது. கலையுலகின் வளர்ந்துவரும்  இளம்கலைஞர்களுக்கான விருது இது.

காசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமும், வங்காளத்தின் விஸ்வபாரதி பல்கலைக்கழகமும் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளன.
முதுமையால் நோயுற்று இருந்த உஸ்தாத் பிஸ்மில்லாஹ்கான் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் காலமானார். இந்திய ராணுவத்தின் 21 குண்டு முழங்க இவரது நல்லடக்கம் நடைபெற்றது. இந்திய அரசு ஒருநாள் துக்கம் அனுஷ்டித்து. இவரது ஷெனாய் வாத்தியமும் இவர் உடலோடு புதைக்கப்பட்டது.

தனது இசையால் இந்த உலகத்தை மகிழ்வித்த உஸ்தாத் மறுஉலகிலும் தனது இசையால் புகழ்பெற்று இருப்பார்.