புதன், 20 நவம்பர், 2019

தடையற்ற பொருளாதார ஆதரவாளர் மினு மசானி - நவம்பர் 20



காங்கிரஸ் கட்சிக்குள் சோசலிச சித்தாந்தத்தை முன்னெடுத்தவர், ஆனால் அந்த முறை பயன்தராது என்று உணர்ந்தபோது மிகச் குறைந்த அரசு கண்காணிப்பில் இயங்கும் தொழில்முறைக்கு ஆதரவாக செயல்பட்டவர், நேருவுக்கு ஒரு காலத்தில் நெருங்கிய தோழராகவும், பின்னர் அவரது கடுமையான விமர்சகராகவும் மாறியவர், கடவுள் நம்பிக்கை இல்லாத, மாட்டுக்கறி உண்ணும் பார்சி ஆனால் காலம் முழுவதும் மது அருந்தாத, மாமிசம் உண்ணாத ராஜாஜி தொடங்கிய ஸ்வராஜ்யா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் என்று பல்முக ஆளுமை மினு மசானியின் பிறந்தநாள் இன்று.

மும்பை பல்கலைக்கழத்தின் துணைவேந்தராகவும் மும்பை மாநகராட்சி ஆணையராகவும் இருந்த சர் ருஸ்தம் மசானியின் மகனாக 1905ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் பிறந்தவர் மினோச்சேர் ருஸ்தம் மசானி, சுருக்கமாக மினு மசானி. மும்பையில் கல்வி கற்ற மினு மசானி லண்டனில் பொருளாதாரமும், அதனைத் தொடர்ந்து சட்டமும் பயின்றார்.

1929ஆம் ஆண்டு பாரதம் திரும்பிய மினு மசானி மும்பையில் வழங்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் அடுத்த வருடமே காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வழக்குரைஞர் தொழிலை நிறுத்திக் கொண்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பலமுறை சிறை தண்டனை அனுபவித்தார். 1932ஆம் ஆண்டு நாசிக் சிறையில் இருந்த போது ஜெயப்ரகாஷ் நாராயணனின் பழக்கம் ஏற்பட்டது. அன்றய இளைஞர்களுக்கு அதுவும் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தவர்களுக்கு இயல்பாகவே கம்யூனிச சித்தாந்தத்தின் மீது ஒரு பிடிப்பு இருந்தது. உலகில் பெரும்பாலான நாடுகள் சில ஐரோப்பிய நாடுகளின் அடிமையாக இருக்கும் நேரத்தில், பாட்டாளி மக்களால் நடத்தப்படும் சோவியத் யூனியன் ஒரு கனவு தேசமாக தெரிந்ததால் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

1934ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாகவே இந்தியன் சோசலிஸ்ட் காங்கிரஸ் என்ற அமைப்பை சோசலிச சித்தாந்தத்தில் பிடிப்புள்ளவர்கள் தொடங்கினார்கள். அதில் மினு மசானி முக்கியமான ஒருவர். இளைய தலைமுறை தலைவராக உருவாக்கிக்கொண்டு இருந்த நேருவும் சோசலிச சித்தாந்தத்தைத்தான் முன்னெடுத்தார். அதனால் இயல்பாகவே மசானி நேருவின் நெருங்கிய நண்பரானார். மினு மசானி மும்பை மாநகராட்சியின் மேயராகவும் அதன் பின்னர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடு விடுதலையான பிறகு பிரேசில் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டார். நாடு திரும்பிய மசானி Freedom First என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்திவந்தார்.

சோவியத் ரஷ்யா பற்றி கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள் உண்மையில்லை என்பதை மிகவிரைவில் மினு மசானி புரிந்து கொண்டார். ஆனால் அவரின் இந்தப் புரிதல் அவர் மீது நேருவுக்கு ஒரு ஒவ்வாமையை உருவாக்கியது. நேரு நாட்டை சோஷலிச பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார். ரஷ்யா போலவே விவசாய நிலங்களை எல்லாம் அரசின் கீழ் கொண்டுவந்து கூட்டுப் பண்ணை முறையை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். சோசலிச முறை பாரத நாட்டின் பிரச்சனைகளை தீர்க்காது என்று கருதிய மசானி 1957ஆம் ஆண்டு தேர்தலில் ராஞ்சி தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சுதந்திரம் கிடைத்து பத்து ஆண்டுகள்தான் ஆகி இருந்தது. நாட்டின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவராக நேரு விளங்கினார். ஆனால் மக்களாட்சி முறைக்கு இது கேடு, நேருவின் கொள்கைகள் நாட்டை முன்னேற்றாது என்று எண்ணிய ராஜாஜி ஸ்வதந்தரா கட்சியைத் தொடங்கினார். அரசு என்பது அரசாட்சி செய்யவேண்டும், வணிகம் செய்வது அரசின் வேலை இல்லை என்பது ஸ்வதந்த்ரா கட்சியின் கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் 1990இல் நரசிம்மராவ் முன்னெடுத்த தாராளமயமாக்கள்தான். பேராசிரியர் என் ஜி ரெங்கா போன்ற தலைவர்கள் ஸ்வதந்தரா கட்சியில் இருந்தார்கள். கட்சியின் தலைவராக மினு மசானி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்வதந்தரா கட்சி சார்பாக 1971ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் மசானி.

பாரதிய ஜனசங்கம் அப்போது பெரிய கட்சியாக உருவாகவில்லை. நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக ஸ்வதந்தரா கட்சி விளங்கியது. நேருவிற்குப் பின் இந்திரா இன்னும் வேகமாக சோசலிச சித்தாந்தத்தை முன்னெடுத்தார். தொழிலதிபர்களை பணக்காரர்களை எதிர்மறையாகக் காட்டுவதன் மூலம், நாட்டின் பெரும்பாலான ஏழை மக்களின் ஓட்டைப் பெற்றுவிடலாம் என்று அவர் எண்ணினார். மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசிய மயமாக்கல் என்று இந்திரா அதிரடி ஆட்டங்களை ஆடினார். இவை சட்டபூர்வமானது அல்ல என்று மசானி நாடாளுமன்றத்தில் வாதாடினார். நீதிமன்ற உத்தரவுகளை புறம்தள்ளி அவசரச் சட்டங்களின் மூலம் தனது எண்ணத்தை இந்திரா நிறைவேற்றிக்கொண்டார்.

வங்க தேச விடுதலையை அடுத்து நடந்த 1971ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்திரா பெரும் வெற்றியைப் பெற்றார். கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று மசானி கட்சியின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்தார். அடுத்த வருடத்தில் ராஜாஜி இறக்க, ஸ்வதந்த்ரா கட்சி இல்லாமலே போனது. ஆனால் ராஜாஜியும் அவரது சகாக்களும் கூறியது உண்மை என்று காலம் நிரூபித்தது. சோசலிச முறை தோல்வி அடைய, சுதந்திரப் பொருளாதார முறைக்கு நாடு திரும்பியது.

1971ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகிய மினு மசானி தனது பத்திரிகையை நடத்துவதிலும் பல்வேறு புத்தகங்களை எழுதுவதிலும் இயங்கி கொண்டு இருந்தார். 1975ஆம் ஆண்டு இந்திரா பிரகடனம் செய்த நெருக்கடி நிலை சமயத்தில் மசானியின் Freedom First பத்திரிகையும் தணிக்கைக்கு உள்ளானது. அப்போதும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடி தணிக்கையை மசானி ரத்து செய்ய வைத்தார்.

ஒரு காலத்தில் பாரத நாட்டு அரசியலில் தவிர்க்கமுடியாத அங்கமாக இருந்த மினு மசானி தனது தொண்ணூற்றி இரண்டாம் வயதில் 1998ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் நாள் காலமானார்.