சனி, 4 ஜூலை, 2020

அரபிக்கடலின் காவலன் - கனோஜி ஆங்க்ரே நினைவுநாள் - ஜூலை 4


வரலாறு பதிவு செய்யப்பட்ட காலத்தில் ஏறத்தாழ 17ஆம் நூற்றாண்டு வரை உலக வர்த்தகத்திலும், உலக செல்வத்திலும் பெரும் பங்கு பாரதநாட்டிடமே குவிந்து கிடந்தது. அளவற்ற செல்வம் உலகின் பல பகுதி மக்களை இந்த நாட்டுக்கு வரவேண்டும் என்று தூண்டியது. அலையலையான அந்நியர் படையெடுப்பும் அதனை தடுத்து நின்ற வீரர்கள் வரலாறும்தான் இந்த மண்ணின் வரலாறு. அப்படி அரை நூற்றாண்டு காலம் கொங்கன் கடற்கரையை காத்து நின்று, தன் வாழ்நாளில் எந்தப் போரிலும் தோல்வியே அடையாத மராட்டிய மாவீரன் கனோஜி ஆங்க்ரேயின் நினைவுநாள் இன்று.

மராட்டிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சத்ரபதி சிவாஜி மஹாராஜால் ஸ்வர்ணமுக் கோட்டைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட துக்கோஜி ஆங்கிரே - அம்பாலால் தம்பதியினருக்கு 1669ஆம் ஆண்டு பிறந்தவர் கனோஜி ஆங்கிரே. பாரதத்தின் மேற்கு கடற்கரையில் இன்றய மும்பை நகருக்கும் கோவாவிற்கும் இடையே ஒரு தீவில் அமைந்து இருந்த ஸ்வர்ணமுக் கோட்டையில் தனது இளமைகாலத்தை கழித்தால் கடலும், கடல் சார்ந்த பரதவ இன மக்களின் நட்பும் கனோஜியை ஒரு கடலோடியாகவே உருவாக்கின.

சிவாஜி மஹராஜ் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய கடற்படையை கனோஜி விரிவுபடுத்தினார். தனது 19ஆம் வயதில் 150 மைல் நீளமுள்ள கொங்கன் கடற்கரையை அவற்றின் கட்டுப்பாட்டுக்கு உள்ளாகி அவரை கடற்கரையின் தளபதியாக மராத்திய அரசு நியமித்தது. அப்போது அவர் வசம் பத்து கப்பல்கள் இருந்தன.

பாரத கடலெல்லைக்குள் வரும் ஐரோப்பியரின் கப்பல்கள் எதுவாக இருந்தாலும் மராட்டிய அரசுக்கு கப்பம் செலுத்தவேண்டும் என்ற விதிமுறையை கனோஜி ஆங்கிரே உருவாக்கினார். கப்பம் செலுத்திய கப்பல்களின் பாதுகாப்பை மராட்டிய கப்பல் படை ஏற்றுக்கொண்டது. கப்பம் கட்ட மறுத்த கப்பல்கள் தாக்கப்பட்டு அவை கொள்ளையடிக்கப் பட்டன. பெரும் கடற்படை இன்னும் உருவாகாத காரணத்தால் கனோஜி கடலில் கொரில்லா தாக்குதல் முறையை கையாண்டார். மராத்தா அரசு அவரை தனது கடற்படையின் தளபதியாகவும் 26 கோட்டைகளின் பொறுப்பாளராகவும் நியமித்தது. பிரிட்டிஷ்க்காரர்கள், போர்த்துகீஸ் மக்கள், டச் கடலோடிகள் அனைவரும் கனோஜி ஆங்க்ரேயின் கட்டளைக்கு அடிபணிய வேண்டி இருந்தது. நினைத்த பொழுதில் ஐரோப்பியர்களின் கப்பல்களைத் தாக்கவும், அவற்றை பறிமுதல் செய்யவும் ஆங்க்ரேயினால் முடிந்தது.

வேகமான போர்முறைகளும், எதிர்பாராத தாக்குதல்களும் ஆங்க்ரேவை கடலின் சிவாஜி என்ற பட்டப்பெயரை பெற்றுக் கொடுத்தன.
கர்நாடகா முதல் மஹாராஷ்டிரா வரை பரவியுள்ள 1000 கிலோமீட்டர் நீளமுள்ள கொங்கன் கடற்கரையின் காவலனாக வலம் வந்த கனோஜி ஆங்கிரே 1729ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் நாள் காலமானார். ஆங்க்ரேவை எதிர்கொள்ள பிரிட்டிஷார் உருவாக்கிய கடற்படைதான் இன்று இந்திய கடற்படையாக உருவாகி நிற்கிறது.

மும்பையில் உள்ள கடற்படை தளத்திற்கும், மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்தினகிரியில் உள்ள துறைமுகத்திற்கும் ஆங்க்ரேயின் பெயரை சூட்டி பாரத நாடு அந்த வீரனுக்கு நன்றி செலுத்தி உள்ளது.