வெள்ளி, 26 ஜூன், 2020

பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிறந்தநாள் - 26 ஜூன்.


இளம் தலைமுறை பாஜக தலைவராகவும், நீண்ட காலமாக சங்க பரிவார் அமைப்புகளில் பணிபுரிந்தவராகவும், மோதி அரசின் முக்கியமான மந்திரியாகவும் விளங்கும் தர்மேந்திர பிரதான் அவர்களின் பிறந்தநாள் இன்று.

1969ஆம் ஆண்டு ஒரிசா மாநிலத்தில் தல்சேர் நகரில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டு இருந்த திரு தேபேந்திர பிரதானின் மகனாகப் பிறந்தவர் இவர். இவரது தந்தையே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தைச் சேர்ந்தவர். அவர் 13ஆவது நாடாளுமன்ற தேர்தலில் வென்று வாஜ்பாய் அரசின் தரைவழி போக்குவரத்துதுறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

ஏறத்தாழ தனது 14ஆம் வயது முதலே ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தர்மேந்திர பிரதான் பரிவார் அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷித் அமைப்பின் தேசிய செயலாளர், பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் தேசிய தலைவர், பாஜகவின் தேசிய செயலாளர், பின்னர் கட்சியின் பொது செயலாளர், சட்டிஸ்கர், பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களின் பொறுப்பாளர் என்று இவரது அரசியல் வாழ்க்கை விரிவடைந்தது.

ஒடிசா மாநிலத்தின் 12ஆவது சட்டமன்றத்திற்கு 2000ஆவது ஆண்டில் பல்லஹடா தொகுதியில் இருந்து பிரதான் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒடிசா மாநிலத்தின் தேபகர் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் பிஹார் மாநிலத்தில் இருந்தும் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்தும் தலா ஒரு முறை ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதிற்கு இவரது பங்களிப்பும் மிக முக்கியமான ஒன்றாகும்.

2014இல் அமைக்கப்பட்ட பாஜக அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுதுறை அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார். அதோடு திறன் மேம்பாட்டுதுரையின் அமைச்சராகவும் பணியாற்றினார். தற்போதைய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுதுறை மற்றும் இரும்பு மற்றும் எக்கு துறைக்கான மந்திரியாகும் பணியாற்றி வருகிறார்.
தனது முதலாவது பதவிக்காலத்தில் பிரதமர் மோதி, வசதி படைத்தவர்களை எரிவாயு உருளைகளுக்கான ( lPG Cylinder ) மானியத்தை விட்டுத் தருமாறு வேண்டினார். அப்படி மிச்சமாகும் பணத்தைக் கொண்டு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு எந்தவிதமான முன்பணமும் இல்லாமல் எரிவாயு உருளைகள் கொடுக்கும் திட்டத்தை அவர் அறிவித்தார். துறைக்கான அமைச்சராக பிரதான் இந்த திட்டத்தை சிறப்பாக அமுல்படுத்தினார். 

கிராமப்புறத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மகளீருக்கு என்று தொடங்கிய இந்த திட்டம், படிப்படியாக பட்டியல் இனத்தவர், பிறகு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள அனைவருக்கும் என்று விரிவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி இதுவரை ஏழு கோடிக்கும் அதிகமான இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏழை தாய்மார்களின் உடல் நலத்திற்கும் அவர்களின் நேரத்தை மிச்சம் செய்யவும் இந்த திட்டம் பேருதவியாக உள்ளது. சமையல் எரிவாயு உருளைகளுக்கான மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்துவதன் மூலம் பல்வேறு போலி கணக்குகள் கண்டறியப் பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய்கள் தவறாக சென்று கொண்டு இருந்ததை பிரதான் தடுத்து நிறுத்தி உள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் 13 மாவட்டங்களில் உள்ள வீடுகளும் தொழில்சாலைகளும் பயன்பெறும் வண்ணம் 6000 கோடி ரூபாய் முதலீட்டில் திரவ இயற்கை எரிவாயு முனையத்தை ( L N G Terminal ) உருவாக்கி உள்ளார்.

இளமையும் தன்முனைப்பும் கூடிய திரு பிரதான் அவர்கள் நெடுங்காலம் நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்று அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறோம்