ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்தநாள் - ஆகஸ்ட் 25

பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டும் இழித்தும் பழித்தும் பேசும் ஒரு கூட்டம் தமிழகத்தில் தோன்றிய போது, இசையால், இனிய தமிழால் சித்தாந்தங்களை எளிய முறையில் அனைவருக்கும் விளங்கும் வண்ணம் எடுத்துரைத்து மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை தன் தோளில் சுமந்த ஒரு அறிஞரும் தோன்றினார். எண்பத்தி ஏழு ஆண்டுகள் வாழ்ந்து நாடெங்கும் சைவ சித்தாந்தத்தை விளக்கினார். தனது பேச்சுத் திறமையால் கேட்பவர் அனைவரையும் கட்டிப் போட்டார். அவர்தான் திருமுருக கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள். தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அருகே காங்கேயநல்லூர் என்ற சிற்றூரில் மல்லையதாசருக்கும் கனகவல்லி அம்மையாருக்கும் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் நாள் பிறந்தவர் வாரியார் ஸ்வாமிகள். வீர சைவ மரபில் பிறந்த ஸ்வாமிகளுக்கு அவரது ஐந்தாம் வயதில் சிவலிங்க தாரணம் செய்து வைக்கப்பட்டது. 

இவரது தந்தையே இயல் இசை புராண வல்லுநர். அவரே ஸ்வாமிகளுக்கு குருவாக அமர்ந்து கல்வி கற்பித்தார். இயல் இசையிலும் இலக்கண இலக்கியங்களிலும் ஸ்வாமிகள் தேர்ச்சி பெற்றார். எட்டு வயதில் கவி பாடும் திறமையும் பதின்ம வயதிலேயே பன்னிரெண்டாயிரம் பாடல்களை மனப்பாடமாக சொல்லும் திறமையும் ஸ்வாமிகளுக்கு அமைந்தது. தனது பதினெட்டாம் வயதில் இருந்து பக்தி பேருரைகளை நிகழ்த்த ஆரம்பித்தார். ஸ்வாமிகள் வீணை வாசிப்பதிலும் நிபுணர். 

பண்டிதர்களுக்கு மட்டுமல்லாது பாமர மக்களுக்கும் புரியும் படி பேச்சு வழக்கில் உபன்யாசம் செய்வது ஸ்வாமிகளின் வழிமுறை. தனது பேச்சுக்களின் நடுவே திருப்புகழ், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை பண்ணோடு பாடி அவைகளை மக்களிடம் சேர்த்தார். ஸ்வாமிகளின் பேச்சு முறை என்பது நாடக பாணியில், உயர்தர நகைச்சுவையோடு, அன்றாட நடப்புகளை கலந்து இருக்கும். 

1936ஆம் ஆண்டு முதல் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக திருப்புகழ் அமிர்தம் என்ற மாத பத்திரிகையை நடத்தினார். அந்த இதழ்  மாதம் தோறும் திருப்புகழ் பாடல் ஒன்றுக்கு உரை, கந்தர் அலங்காரத்திற்கு உரை, மற்றும் பல்வேறு கட்டுரைகளோடு வெளியானது. வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன. குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் ஸ்வாமிகள் எழுதி உள்ளார். 

கிருபை என்றால் கருணை, வாரி என்றால் கடல். மிகச் சரியாகத்தான் இவர் பெற்றோர்கள் இவருக்கு கிருபானந்த வாரியார் என்று பெயர் இட்டனர்  போலும்.பேருக்கு ஏற்றார் போல ஸ்வாமிகள் கருணைக் கடலாகவும் ஆனந்தக் கடலாகவும் விளங்கினார். பல்வேறு கோவில்களில் திருப்பணியும், பல்வேறு கல்வி நிலையங்களும் இவரால் உருவாக்கப்பட்டன. 

நாடெங்கும் சைவத்தையும் தமிழையும் வளர்த்து சிறப்பித்த வாரியார் ஸ்வாமிகள் 1993ஆம் நாள் நவம்பர் 7ஆம் நாள் முருகப் பெருமாள் திருவடிகளை அடைந்தார். பூத உடலைத் துறந்தாலும் தனது புத்தகங்கள் மூலமாகவும், பதிவு செய்யப்பட்ட சொற்பொழிவுகள் மூலமாகவும் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.