செவ்வாய், 7 ஏப்ரல், 2020

சித்தார் வாத்திய மேதை பண்டிட் ரவிசங்கர் பிறந்தநாள் - ஏப்ரல் 7


உலகப் புகழ்பெற்ற சித்தார் வாத்தியக் கலைஞரும், இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற பண்டிட் ரவிசங்கர் பிறந்தநாள் இன்று.


இவரின் தந்தை ஷியாம் ஷங்கர் சவுத்திரி இன்றய பங்களாதேஷ் பகுதியைச் சார்ந்தவர். வழக்கறிஞரான ஷ்யாம் ஷங்கர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜஹல்வார் சமஸ்தானத்தின் திவானாகப் பணியாற்றி வந்தார். ஷ்யாம் ஷங்கர் சவுத்ரிக்கும் ஹேமாங்கினி தேவிக்கும் மகனாக ரவி சங்கர் 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ரபிந்த்ர ஷங்கர் சவுத்திரி.

தனது பத்தாம் வயது முதல் ரவி சங்கர் தன் சகோதரரான உதய் சங்கரின் நடனக்குழுவோடு சேர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பயணம் செய்தார்.

தந்து பதினெட்டாம் வயதில் நடனத்தைத் துறந்து அலாவுதீன் கான் என்பவரிடம் குருகுல வாசம் செய்து சித்தார் வாத்தியத்தைக் கற்றுக்கொண்டார்.

தனது 25ஆம் வயதில் ரவிசங்கர் கவிஞர் இக்பால் எழுதிய " சாரே ஜஹான் ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" என்ற பாடலுக்கு இசையமைத்தார்.

1945ஆம் ஆண்டு முதல் பல்வேறு உலகநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி ஹிந்துஸ்தானி இசையை உலகமெங்கும் பிரபலமாக்கினார்.  பலவேறு மேற்கத்திய இசைக்கலைஞர்களோடு இணைத்து ஜுகல்பந்தி நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தி உள்ளார்.

நியூ யார்க் நகரின் கல்லூரி, கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் முதலான கல்விநிலையங்களில் இசைதுறை பேராசிரியராகவும் ரவிசங்கர் பணியாற்றினார். 1986 முதல் ஆறு ஆண்டுகள் இந்தியாவின் ராஜ்யசபை உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.

இசைத்துறையில் இவரது பங்களிப்பை மதிக்கும் வகையில் இவருக்கு சங்கீத நாடக அக்கடெமி விருது, பத்மபூஷன், பத்மவிபூஷண் விருதுகள், மத்தியப்பிரதேச அரசின் காளிதாஸ் சம்மான் விருது ஆகியவை வழங்கப்பட்டன. இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத்ரத்னா விருது இவருக்கு 1992ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

2012ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் இவர் காலமானார்.