ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

விண்ணை அளந்த பாரதியன் - விக்ரம் சாராபாய் - ஆகஸ்ட் 12.

வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்,
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்.

சுதந்திர பாரதம் எந்தெந்த துறைகளில் எல்லாம் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்று மஹாகவி பாரதி கனவு கண்டானோ, அந்த துறைகளில் எல்லாம் இன்று பாரதம் கோலோச்சி நிற்கிறது. கவிஞனின் கனவை நனவாக்கி வானை அளக்க, சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிய பாதை அமைத்த விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் பிறந்த தினம் இன்று.1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் நாள் குஜராத்தைச் சார்ந்த அம்பாலால் சாராபாய் - சரளாதேவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் விக்ரம் சாராபாய். சாராபாய் குடும்பம் பல்வேறு தொழில்களில் அன்று முன்னணியில் இருந்த குடும்பம். அம்பாலால் பல்வேறு தேசிய தலைவர்களோடு நெருங்கிய நட்பில் இருந்தவர். தனது ஆரம்ப கல்வியை வீட்டிலும், கல்லூரி படிப்பை அஹமதாபாத் நகரில் உள்ள குஜராத் கல்லூரியிலும் முடித்த விக்ரம் மேற்படிப்புக்காக இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.

அப்போது இரண்டாம் உலகப்போர் மூண்டதால் மீண்டும் தாயகம் திரும்பிய விக்ரம், சர் சி வி ராமன் மற்றும் ஹோமி பாபா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் பெங்களூரு நகரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ( Indian Institute of Science ) தனது ஆராய்சியைத் தொடர்ந்தார். போர் முடிந்த பிறகு மீண்டும் இங்கிலாந்து சென்று தனது ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து முனைவர் பட்டம் பெற்றார். பாரதம் விடுதலை அடைந்திருந்த சமயம் அது. தனது அறிவு நாட்டிற்கு பயன்பட வேண்டும் என்று முடிவு செய்து விக்ரம் நாடு திரும்பினார்.

விக்ரம் அறிவியல் ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல, அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கியவர். சந்தையின் மாறுதல்களை அளவிடும் Operations Research Group, நெசவுத்துறையின் முன்னேற்றத்திற்காக Textile Research Institute, அஹமதாபாத் நகரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் ( Indian Institute of Management - Ahamadabad ) போன்ற பல நிறுவனங்களை விக்ரம் சாராபாய் உருவாக்கினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியிலும் விக்ரம் சாராபாய் பெரும்பங்கு வகித்தார். இன்று சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் ஆய்வு செய்ய செயற்கைகோள்களை பாரதம் ஏவுகிறது என்றால், மிகக் குறைந்த செலவில் பல்வேறு செயற்கைகோள்களை பல்வேறு நாடுகளுக்கான விண்வெளியில் நிலைநிறுத்தும் திறமையை பாரதம் பெற்றுள்ளது என்றால் அதற்கான அடிக்கல் விக்ரம் சாராபாயால் தொடங்கப்பட்ட முன்னெடுப்புகள்தான் காரணம். இன்று தும்பாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு விக்ரம் சாராபாயின் பெயர்தான் சூட்டப்பட்டு உள்ளது.

விக்ரம் சாராபாயின் பங்களிப்பை மரியாதை செய்யும் வகையில் அரசு அவருக்கு பத்மவிபூஷண் விருதை வழங்கியது.

இன்னும் பல முன்னேற்றங்களை உருவாக்க தகுதியான விக்ரம் சாராபாய் 1971ஆம் ஆண்டு  டிசம்பர் 30ஆம் நாள் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தது இந்தியாவை உலுக்கியது. புகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஹோமி பாபா விமான விபத்தில் இறந்தார். பல்வேறு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் மரணித்ததும், நம்பி நாராயணன் போன்ற அறிஞர்கள் பொய் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சிறைப்பட்டதும் பாரதம் அறிவியல் துறையில் முன்னேறுவதை தடுக்க முயலும் அந்நிய நாடுகளின் சதியாக இருக்கும் என்று நம்ப எல்லா காரணங்களும் இருக்கின்றன.

நாட்டுக்கு உழைப்பது என்பது ராணுவத்தில் பணியாற்றி எல்லையை காப்பது மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் நாட்டை முன்னேற்றுவதும் அதே தான்.

குதிராம் போஸ் பலிதான தினம் - ஆகஸ்ட் 11

ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில்தான் பேசவேண்டும், வெடிகுண்டுகளும், துப்பாக்கி உமிழும் தோட்டாக்களும்தான் அவர்களுக்குப் புரியும் என்றால் அதனை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று முடிவெடுத்து ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாரதநாட்டில் ஏராளம். அதில் மிகமுக்கியமானவர் குதிராம் போஸ். பதினெட்டு ஆண்டுகளே  வாழ்ந்து தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பாரதத்தாயின் மிக இளைய வீரனின் பலிதான தினம் இன்று.வங்காள மாநில மித்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஹாப்பிபூர் கிராமத்தில் த்ரிலோகநாத் போஸ் - லக்ஷ்மிப்ரியா தம்பதியினரின் நான்காவது மகனாக 1889ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் நாள் பிறந்தவர் குதிராம். இவருக்கு முன்னர் பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகளும் இளைய வயதில் இறந்து போனதால், இவரை தானியத்திற்கு ஈடாக கொடுத்துவிட்டால் காப்பாற்றிவிடலாம் என்று நம்பிய இவர் தாயார் இவரது சகோதரிக்கு மூன்று கைப்பிடி தானியத்திற்கு தத்து கொடுத்துவிட்டார். குதி என்ற வங்கமொழி சொல்லுக்கு தானியம் என்று பொருள். அதனால் இவர் பெயர் குதிராம் என்று ஆனது.

மிகச் சிறுவயதில் பெற்றோர் இருவரையும் இழந்த குதிராமை அவர் சகோதரியும் சகோதரி கணவரும் ஆதரித்து படிக்க வைத்தனர். பள்ளிப்பருவத்திலேயே அரவிந்தர், சகோதரி நிவேதிதா ஆகியோரின் சொற்பொழிவுகளை கேட்டு குதிராம் நாட்டுப்பற்றாளராக உருவானார்.

1905ஆம் ஆண்டு வைஸ்ராய் கர்சன் வங்காளத்தை இரண்டாகப் பிளந்தார். பின்னர் நாடு பிரிவினையாக இதுவே தொடக்கமாக அமைந்தது. வங்காளப் பிரிவினையை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் தொடங்கின. வங்காளத்திலும் பஞ்சாபிலும் ஆயுதப் போராட்டம்தான் சரி என்று எண்ணிய இளைஞர்கள் பலர் பல்வேறு குழுக்களாக இணைந்தார்கள். புரட்சியாளர்கள் பலர் இருந்த யுகாந்தர் என்ற குழுவில் குதிராம் தன்னை இணைத்துக் கொண்டார்.

மித்னாபூர் மைதானத்தில் சத்யன் போஸ் எழுதிய தங்க வங்கம் என்ற துண்டுப்பிரசுரத்தை விநியோகம் செய்யும் போது காவலர் ஒருவர் இவரை பிடிக்க முயன்றார். ஆனால் காவலரைத் தாக்கிவிட்டு குதிராம் தப்பியோடி விட்டார். ஆனால் மீண்டும் ஆங்கில காவலர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். மிக இளவயது என்பதால் நீதிபதி இவரை விடுதலை செய்தார்.

அந்தக்காலத்தில் கொல்கத்தா நீதிமன்றத்தில் கிங்ஸ்போர்ட என்ற நீதிபதி பணியாற்றிவந்தார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மிக கொடூரமான தண்டனைகளை வழங்குவதில் அவர் பெயர் போனவர். ஒரு வழக்குக்காக பிபின் சந்திரபால் நீதிமன்றம் வந்தபோது சுஷில் சென் என்ற பதினான்கு வயது சிறுவன் ஒருவன் வந்தேமாதரம் என்று கோஷமிட்டான். அதற்காக அவனை பதினைந்து கசையடி அளிக்குமாறு நீதிபதி கிங்ஸ்போர்ட உத்தரவிட்டார். ஒவ்வொரு அடிக்கும் சுஷில் சென் வந்தேமாதரம் என்று முழங்கியவாறு இருந்தார்.

நீதிபதியை கொலை செய்வது என்று அனுசீலன் சமிதி என்ற அமைப்பு முடிவு செய்தது. அதனை செய்து முடிக்க குதிராம் போஸ் முன்வந்தார். பிரபுல்ல சாகி என்ற இளைஞர் குதிராமின் துணைக்கு வந்தார். தொடர்ந்த கொலை மிரட்டல்களால் ஆங்கில அரசு நீதிபதி கிங்ஸ்போர்டை பிஹார் மாநிலத்தின் முசாபர்பூர் நகரத்திற்கு இடமாற்றம் செய்தது. குதிராம் போஸும் பிரபுல்ல சாகியும் பிஹார் சென்றனர்.

தொடர்ந்து நீதிபதியை கண்காணித்து அவரை எப்படி கொலை செய்வது என்ற திட்டத்தை நண்பர்கள் முடிவு செய்தனர். நாள்தோறும் இரவு ஆங்கிலேயர்கள் கூடும் கிளப் ஒன்றுக்குச் சென்று சிறிது நேரம் அங்கே தங்கிவிட்டு வீடு திரும்புவது கிங்ஸ்போர்டின் பழக்கம். வீட்டுக்குத் திரும்பும் வழியில் அவரது வண்டியின் மீது வெடிகுண்டு வீசுவது என்று முடிவானது. ஒருவேளை அதில் நீதிபதி தப்பிவிட்டால் அவரை சுட்டுக் கொல்ல துப்பாக்கிகளும் கைவசம் இருந்தது.

1908ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் நாள் கிளப்பில் இருந்து நீதிபதி தந்து சாரட் வண்டியில் கிளம்பினார். அதற்க்கு சற்று முன்பாக திருமதி கென்னடி என்ற ஆங்கிலப் பெண்ணும் அவர் மகளும் இன்னொரு வண்டியில் கிளம்பினார். திட்டமிட்டபடி வெடிகுண்டு வீசப்பட்டது, சாரட் வண்டி வெடித்துச் சிதறியது. ஆனால் இறந்தது நீதிபதி அல்ல என்பதை அறியாமல் சம்பவ இடத்தை விட்டு போராட்ட வீரர்கள் நகன்று விட்டனர். தனித்தனியாக பயணம் செய்து வங்காளத்தை அடைவது என்பது அவர்களின் முடிவு.

இரவு முழுவதும் நடந்தும் ஓடியும் களைப்பாக இருந்த குதிராம் வைனி நகரை அடைந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை கைது செய்ய முயற்சித்தனர். அவர்களைத் துப்பாக்கியால் சுட குதிராம் முயற்சி செய்தார். ஆனால் அதில் வெற்றிபெறாமல் அவர் கைது செய்யப்பட்டார். பிரபுல்ல சாகியை சந்தேகத்தின் பேரில் காவல்துறை கைது செய்ய முயற்சி செய்தபோது, அவர் தன்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கைவிலங்கு இடப்பட்டு குதிராம் மே மாதம் ஒன்றாம் நாள் முசாபர்பூர் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டார். வழக்கு விசாரணை தொடங்கியது. குதிராம் கொலைக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். குறி வைக்கப்பட்டது நீதிபதிக்குத்தான், தவறுதலாக இரண்டு பெண்கள் இறந்து விட்டார்கள், அதற்காக வருந்துகிறேன், அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

குதிராமுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எந்த விதமான சலனமும் இல்லாமல் சிரித்த முகத்தோடு குதிராம் அதனை எதிர்கொண்டார். ஏதாவது சொல்லவேண்டுமா என்ற நீதிபதியின் கேள்விக்கு " நேரமும், உங்களுக்கு ஆர்வமும் இருந்தால் உங்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொடுக்கிறேன் என்று குதிராம் பதில் சொன்னார்.

தனது வழக்கறிஞர்களின் வற்புறுத்தலால் குதிராம் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அங்கேயும் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. தண்டனைக்கான நாளாக ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் நிர்ணயிக்கப்பட்டது.

12 - 8 - 1908 அமிர்த பஜார் பத்திரிகை ‘குதிராமின் முடிவு’ என்ற தலைப்பிட்டு, பெரிய எழுத்துக்களில் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. “மகிழ்ச்சி யோடும் புன்னகையோடும் அவன் மரணமடைந்தான்.  இறுதிச் சடங்கு அமைதியாய் நடந்தது.  காலை 6 மணிக்கு அவனைத் தூக்கிலேற்றினார்கள். அவன் தூக்கு மேடையை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றான்.  தலையில் கறுப்புத்துணியை மூடும் வரை அவன் மரணத்தை அலட்சியப்படுத்தும் புன்னகையோடு நின்றான்” என்று அப்பத்திரிகை, செய்தி வெளியிட்டது.

இன்னும் இரண்டு நாட்களில் நாம் சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்க்காக குதிராம் போஸ் போன்று பல்வேறு வீரர்கள் தங்கள் வாழ்க்கையை அர்பணித்துள்ளார். அப்படியான வீரர்களை நாம் என்றும் நினைவில் கொள்வோம். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்.