திங்கள், 23 செப்டம்பர், 2019

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி - மஹாசமாதி தினம் - செப்டம்பர் 23

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அத்வைத வேதாந்த ஆசிரியர்களில் முக்கியமானவராக விளங்கிய பூஜ்யஸ்ரீ ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் மஹாசமாதி தினம் இன்று. 



1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் திருவாரூரை அடுத்துள்ள மஞ்சக்குடி கிராமத்தில் கோபாலய்யர்-வாலாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் ஸ்வாமி தயானந்தர். இவரது இயற்பெயர் நடராஜன் என்பதாகும். இவரது எட்டு வயதிலேயே இவர் தந்தை கோபாலய்யர் இறந்து விட, இவரது தாயார் இவரையும் இவரது சகோதர்களையும் வளர்த்தார். பள்ளிப்படிப்பை குடவாசல் கிராமத்தில் முடித்த நடராஜன், பிழைப்பைத் தேடி சென்னைக்கு வந்தார். சென்னையில் தார்மிக ஹிந்து என்ற பத்திரிகையில் செய்தியாளராகப் பணியாற்றினார். 

1953ஆம் ஆண்டு ஸ்வாமி சின்மயானந்தர் சென்னைக்கு விஜயம் செய்தார். அங்கே அவர் கீதை பற்றியும் உபநிஷதங்கள் பற்றியும் தொடர் சொற்பொழிவுகளை நடத்திக்கொண்டு இருந்தார். அடிப்படையிலேயே ஆன்மீக நாட்டம் உடைய நடராஜன், ஸ்வாமி சின்மயானந்தாவால் ஈர்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அப்போதுதான் உருவாகி இருந்த சின்மயா மிஷனில் தன்னை இணைத்துக் கொண்டார். வெகு விரைவில் அவர் சின்மயா மிஷனின் காரியதரிசியாக நியமிக்கப்பட்டார். ஸ்வாமி சின்மயானந்தாவின் ஆணைக்கு இணங்க மதுரையில் சின்மயா மிஷனை உருவாக்கினார். 

ஸ்வாமி சின்மயானந்தாவுடன் நடராஜன் ரிஷிகேஷ் சென்று அங்கே ஸ்வாமிஜி பகவத்கீதைக்கு எழுதிய உரையைத் தொகுத்துக் கொடுத்தார். அதன் பின்னர் சின்மயா மிஷன் வெளியிட்டு வந்த தியாகி என்ற பத்திரிகையை அவர் பொறுப்பேற்று நடத்தினார். இதனிடையில் பல்வேறு அறிஞர்களிடமும், பல்வேறு சன்யாசிகளிடமும் அவர் வேதாந்தப் பாடங்களையும் பயின்று வந்தார். 1962ஆம் ஆண்டு ஸ்வாமி சின்மயானந்தா நடராஜனுக்கு சன்யாசம் வழங்கி ஸ்வாமி தயானந்த சரஸ்வதி என்ற யோக பட்டதை வழங்கினார். 

ஸ்வாமி தயானந்தர் மீண்டும் ரிஷிகேஷ் சென்று அங்கே பிரம்மசூத்திரத்தைப் பயின்றார். தனது குருவின் ஆணைக்கிணங்க 1967 முதல் 1970வரை பாரத நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கே கீதை பேருரைகளை நிகழ்த்தினார். வேதாந்த விளக்கங்களைக் கற்றுக்கொடுக்கும் முப்பது மாத பாடத்திட்டத்தை வடிவமைத்து அதனை மும்பையில் உள்ள சின்மயா மிஷனின் சாந்தீபினி சாதனாலயாவில் பல்வேறு மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். 

பாரதம் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து அங்கெல்லாம் வேதாந்த ஞானத்தைப் பரப்பினார். உத்திராகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ், தமிழ்நாட்டின் கோவையை அடுத்துள்ள ஆணைக்கட்டி, மஹாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர் மற்றும் அமெரிக்காவில் பென்சில்வேனியா ஆகிய இடங்களில் ஆசிரமம் அமைத்து அங்கெல்லாம் வேதாந்த வகுப்புகளை தொடர்ந்து ஸ்வாமி தயானந்தர் நடத்திவந்தார். சமிஸ்க்ரிதம், பாணினியின் இலக்கணம், அத்வைத வேதாந்தம், யோகா, ஆயுர்வேதம் போன்ற துறைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இங்கே நடைபெறுகின்றன. ஒரு விளக்கு இன்னும் ஆயிரம் விளக்குகளை ஏற்றுவது போல, ஸ்வாமியின் சீடர்கள் பலர் உலகம் எங்கிலும் பாரத ஞானத்தை இன்று சென்று கொண்டு இருக்கிறார்கள். 

வெறும் வேதாந்த ஆசிரியராக மட்டும் அல்லாது ஹிந்து தர்மத்தை காக்கும் பல்வேறு பணிகளிலும் ஸ்வாமிஜி தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருந்தார். AIM for SEVA என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பொருளாதாரரீதியில் நலிவடைந்த மாணவர்களுக்கு கல்வியும், தங்குமிடமும் வழங்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ ஐயாயிரம் மாணவர்களின் கல்வியை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. வசிப்பிடத்திற்கு அருகாமையில் பள்ளிகள் இல்லாததால் பல பிள்ளைகள் தங்கள் படிப்பைத் தொடரமுடியாமல் போய் விடுகிறது. இந்த நிலையை மாற்ற பள்ளிகளுக்கு அருகே பிள்ளைகள் வசிக்கும் வசதியை பதினாறு மாநிலங்களில் நூற்றி நான்கு இடங்களில் இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. 

வேத - ஆகம பாடசாலைகளை நடத்துதல், பல்வேறு கோவில்களில் தேவாரம், திருவாசகம் பாடும் ஓதுவார்களை நியமித்து அவர்களுக்கு மாதா மாதம் சம்பளம் வழங்குதல், தர்ம ரக்ஷக சமிதி என்ற அமைப்பின் மூலம் புராதனமான கோவில்களை சீரமைத்தல், மதமாற்றத்தை தடுத்தல் என்று பல்வேறு தளங்களில் ஸ்வாமியின் செயல்பாடுகள் இருந்தன. 

பகவத் கீதை, பல்வேறு உபநிஷதங்கள், அத்வைத வேதாந்தம் போன்றவைகள் பற்றி ஸ்வாமிஜி பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார். 

பலனில் பற்று வைக்காமல் ஸுதர்மத்தை கர்ம சந்நியாசமாகச் செய்து கொண்டிரு என்று பகவான் கிருஷ்ணன் கூறியது போல வாழ்ந்து காட்டிய பூஜ்யஸ்ரீ ஸ்வாமி தயானந்த சரஸ்வதி 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள் மஹாசமாதி அடைந்தார். 

வந்தே குரு பரம்பராம்.