சனி, 30 நவம்பர், 2019

ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்தநாள் - நவம்பர் 30.

பாரத நாட்டின் புகழ்மிக்க அறிவியல் அறிஞர்கள் பெயர்களைக் கூறு என்று சொன்னால் அநேகமாக அனைவரும் முதலில் கூறும் பெயர் ஜெகதீஷ் சந்திர போஸ் என்றுதான் இருக்கும். இயற்பியல், உயிரியல், தாவிரவியல், உயிர் இயற்பியல் என்று அறிவியலின் பல்வேறு துறைகளில் வல்லுநராகவும், அதோடு வங்காள மொழியில் அறிவியல் சார்ந்து புனைகதைகளை எழுதும் துறையின் ஆரம்பகால எழுத்தாளராகவும் விளங்கிய ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்ததினம் இன்று. 


வங்காள காயஸ்தா பிரிவைச் சார்ந்த பகவான் சந்திர போஸ் இந்திய ஆட்சிப்பணியில் துணை ஆணையாளராகவும் துணை நீதிபதியாகவும் பணியாற்றிக்கொண்டு இருந்தவர். அவர் ப்ரம்மசமாஜத்தின் முக்கியமான உறுப்பினராகவும் இருந்தவர். 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் பிறந்தவர் ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்கள். தாய் மொழியில்தான் குழந்தைகள் தங்கள் ஆரம்பக்கல்வியை பயிலவேண்டும் என்ற எண்ணம் தந்தைக்கு இருந்ததால் ஜெகதீஷ் சந்திர போஸ் வங்காள மொழியில்தான் தனது ஆரம்பிக் கல்வியை முடித்தார். சமுதாயத்தின் பல்வேறு படிநிலையில் உள்ள மாணவர்களோடு சேர்ந்து படித்ததால், போஸின் சிந்தனை விசாலமாக உருவானது. 

இதனைத் தொடர்ந்து சவேரியார் பள்ளியிலும், சவேரியார் கல்லூரியிலும் தனது படிப்பைத் தொடர்ந்தார் போஸ். அருள் தந்தை யூகினே லபோர்ட் என்பவரின் வழிகாட்டுதல் உயிரியல் துறையில் போஸுக்கு ஈடுபாடு அதிகமானது. இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு எழுத லண்டன் செல்லவேண்டும் என்பது ஜெகதீஸ் சந்திர போஸின் விருப்பம். ஆனால் தன் மகன் பிறரால் கட்டுப்படுத்தப் படாது சுயேட்சையாக இருக்கவேண்டும் என்பது அவர் தந்தையின் ஆசை. எனவே லண்டன் சென்று மருத்துவம் படிக்கலாம் என்று போஸ் முடிவு செய்தார். ஆனால் உடல்நலம் இல்லாத காரணத்தால் மருத்துவத்தை கைவிட்டு விட்டு உயிரியல் துறையில் சேர்ந்து படித்து முனைவர் பட்டம் பெற்றார் போஸ். 

பாரதம் திரும்பிய போஸ், கல்கத்தா நகரில் உள்ள மாநிலக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆங்கிலேயர்களின் நிறவெறியும், அதனால் போஸின் ஆராய்ச்சிகளுக்கு போதுமான பொருளாதார உதவி கிடைக்காததும் என்று பல்வேறு சவால்களை போஸ் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் செயல் வீரர்கள் இந்த பிரச்சனைகளை ஒருநாளும் பொருள்படுத்துவது இல்லை. 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி என்பது அறிவியல் பல்வேறு துறைகளில் பெரும் முன்னேற்றத்தை அடைந்த காலம். முதலில் ஒரு அறிஞர் ஒரு கருத்தை கோட்பாடாக முன்மொழிவார். பிறகு ஆராய்ச்சிகள் மூலம் அது சரியா இல்லை தவறா என்று வேறு யாராவது கண்டுபிடித்து உலகுக்கு அறிவிப்பார்கள். இப்படி ஜேம்ஸ் மாக்ஸ்வெல் என்ற அறிஞர் மின்காந்த அலைகள் பற்றிய கோட்பாட்டை அறிவித்தார். ஹென்ரிச் ஹெர்ட்ஸ் என்பவர் மின்காந்த அலைகள் இருப்பதை அதிகாரபூர்வமாக கண்டைந்து சொன்னார். மின்காந்த அலைகளின் அலைவரிசையை குறுக்குவதன் மூலம் சுவர்களைத் தாண்டி அந்த அலைகளை அனுப்ப முடியும், அதன் மூலம் கம்பி இல்லாமலே தந்தியை அனுப்பலாம் என்பதை போஸ் நிரூபித்துக் காட்டினார்.  படைப்போ அல்லது கண்டுபிடிப்போ இயற்கை ஒரு தனி மனிதன் மூலம் வெளிப்படுத்துவதுதான் என்ற பாரத எண்ணத்தின் படி வாழ்ந்த போஸ் தனது கண்டுபிடிப்புகளுக்கு எந்தவிதமான காப்புரிமையையும் கோரவில்லை. வானொலிப் பெட்டியில் இருந்து கைபேசி வரை, கணினி வரை இன்று செயல்படும் பல்வேறு சாதனங்களின் பின்னால் போஸின் பங்கு உள்ளது என்பது பாரத மக்களான நமக்கு பெருமையான ஓன்று. 

தாவரங்களுக்கு உயிர் உண்டு, வலி உண்டு என்பதையும் தன் ஆராய்ச்சி மூலம் போஸ் நிரூபித்தார். போஸின் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பொருளாதார உதவிகளைத் திரட்டவும், அவரது கட்டுரைகளை மொழி பெயர்க்கவும் ஸ்வாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா பேருதவி செய்தார். அறிவியல் சார்ந்து சில சிறுகதைகளையும் போஸ் எழுதி உள்ளார். 

ஒரு நல்ல ஆசிரியரின் பெருமை என்பது சிறந்த மாணவர்களை உருவாக்குவது. அப்படி சத்யேந்திரநாத் போஸ், மேகநாத் சாகா, பி சி மஹலனோபிஸ் சிசிர் குமார் மித்ரா போன்ற புகழ்பெற்ற அறிஞர்களை போஸ் வார்த்தெடுத்தார். 

பல்துறை விற்பன்னராக விளங்கிய ஜெகதீஷ் சந்திர போஸ் தனது எழுபத்தி எட்டாம் வயதில் 1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள் காலமானார்.