சனி, 27 ஜூன், 2020

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் பிறந்தநாள் - ஜூன் 27.


இந்திய மொழிகளின் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஞானபீட விருதை தனது சித்திரப்பாவை நாவலுக்காகப் பெற்ற எழுத்தாளர் அகிலனின் பிறந்தநாள் இது.

இன்றய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் 1922ஆம் ஆண்டு பிறந்தவர் திரு அகிலன். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர் தனது பள்ளிப்படிப்பை பெருங்காளூரில் முடித்தார். படிக்கும் வயதிலேயே காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நாடு விடுதலை அடைந்த பிறகு ரயில்வே அஞ்சல் துறையிலும் பின்னர் அனைத்திந்திய வானொலி நிலையத்திலும் வேலை பார்த்தார்.

பள்ளியில் படிக்கும்போதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய அகிலனுக்கு அவரது படைப்புகளை எழுதும் களமாக வானொலி நிலையம் விளங்கியது. இவரது முதல் புதினம் 'மங்கிய நிலவு" 1944ஆம் ஆண்டு வெளிவந்தது. 20 புதினங்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள் மொழிபெயர்ப்பு என்று எழுத்தின் எல்லா வகைகளிலும் அகிலன் தனது முத்திரையைப் பதித்தார்.

இவர் எழுதிய சித்திரப்பாவை புதினத்திற்காக ஞானபீட விருது, ராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பின் பின்னணியில் எழுதிய வேங்கையின் மைந்தன் புதினத்திற்கு சாஹித்ய அகாடமி விருது, எங்கே போகிறோம் என்ற சமூக நாவலுக்கு ராஜா சர் அண்ணாமலை விருது, கண்ணான கண்ணன் என்ற சிறுவர் நூலுக்கு தமிழக அரசின் கல்வித்துறையின் சிறப்பு பரிசு என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இவரது பல படைப்புகள் ஆங்கிலம், மலாய், சீனம் என்று பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

சோவியத் ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளை சுற்றிப்பார்த்து அவை பற்றிய பயணக் கட்டுரைகளையும் அகிலன் எழுதி உள்ளார்.
இவரது பாவை விளக்கு அதே பெயரிலும், கயல்விழி என்ற நாவல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற பெயரிலும் திரைப்படமாகவும் வெளிவந்தன.

எழுத்தாளர் அகிலன் தனது 66ஆம் வயதில் 1988ஆம் ஆண்டு காலமானார்.