சனி, 11 நவம்பர், 2017

விதி சமைப்போர் வருக

பல்லாண்டுகளுக்கு முன் நாம் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். . அரைகுறையாக அல்ல முழுமையாக அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றும் காலம் இன்று கனிந்து இருக்கிறது. நள்ளிரவு நேரத்தில், உலகமே உறங்கிக்கொண்டு இருக்கும்போது இந்தியா உயிர் துடிப்போடு விடுதலைக்காக விழித்து எழுந்து இருக்கிறது. வரலாற்றின் பக்கங்களில் மிக அரிதாகவே நடக்கக்கூடிய நிகழ்ச்சி இது. பல்லாண்டுகளாக அடக்கப்பட்ட ஒரு நாட்டின் ஆன்மா இன்று விழித்தெழுகின்றது. ஒரு யுகத்தின் முடிவாக பழமையில் இருந்து புதுமைக்கு நாம் நடக்க இருக்கிறோம். இந்த நேரத்தில் இந்தியாவுக்காகவும், அதன் மக்களுக்காகவும் அதைவிட மானுட சமுதாயத்திற்க்காகவும் நாம் நம்மை அர்பணித்துக்கொள்வோம். 

வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த வாசகங்கள் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேருவால் இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது கூறப்பட்ட வாசகங்கள். ஆனால் நேருவின் இந்தக் கனவு நனவாக இந்தியா ஏறத்தாழ அறுபத்தி ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.

2014ஆம் ஆண்டு மே மாதம் ஒரு புது யுகத்தின் தொடர்ச்சியாக அமைந்தது. எந்த கூட்டணியும் இல்லாது அறுதிப் பெரும்பான்மையோடு திரு நரேந்திரதாஸ் மோதி அவர்களின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி  ஆட்சியை அமைத்தது. மூன்றாண்டுகளில் பாஜகவின் சாதனைகள் என்ன என்றும், அதைவிட இன்னும் எதையெல்லாம் செய்யவேண்டும் என்பதையும் சற்றே பார்ப்போம்.

நெடுஞ்சாலைத்துறை : 

ஒரே இடத்தில் தேங்கி நிற்காமல், பயணங்களை மேற்கொண்ட மனிதர்களே நாகரிகத்தை உலகெங்கும் பரப்பினார்கள். பயணம் மேற்கொள்ள முக்கியமான தேவை நல்ல சாலைகள். அதனால்தான் இரண்டாயிரம் வருடங்கள் கழிந்த பின்னரும் அசோகரைப் பற்றியும் இன்ன பிற சிறந்த அரசர்களைப் பற்றியும் படிக்கும் போது அவர்கள் பயணிகள் செல்ல சாலைகளை அமைத்தார்கள், அதில் நிழல் தரும் மரங்களை நட்டனர் என்று படித்துக்கொண்டு இருக்கிறோம்.

இந்தியா முழுவதையும் நான்குவழிச் சாலைகளால் இணைக்க வேண்டும் என்று யோசிக்க அதனை உருவாக்க பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாய் ஆட்சிக்கு வரவேண்டி இருந்தது. 1980 ஆண்டில் 29,23 கிலோமீட்டர் அளவில் இருந்த தேசிய நெடுஞ்சாலை 2012ஆம் ஆண்டு முடிவில் 76, 818 கிலோமீட்டராக உயர்ந்தது. ஏறத்தாழ 47,000 கிலோமீட்டர் என்ற அளவில் புதியதாக தேசிய நெடுஞ்சாலை முப்பத்தி இரண்டு ஆண்டுகளில் அமைக்கப்பட்டது. அதில் 23,800 கிலோமீட்டருக்கான சாலை 1997 - 2002 காலகட்டத்தில், அதாவது வாஜ்பாய் பிரதமராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அமைக்கப்பட்டது. அதாவது ஆறில் ஒரு பங்கு காலமே ஆட்சி செய்த வாஜ்பாய் ஐம்பது சதவிகிதமான சாலைகளை அமைத்தார். ( 1 ) இது யாரோ சங்கிகளோ அல்லது பக்தர்களோ தரும் தகவல் அல்ல. உச்சநீதிமன்றத்தில் 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு தாக்கல் செய்த தகவல் இது.

மோதி தலைமையிலான அரசு நாள் ஒன்றுக்கு 41 கிலோமீட்டர் சாலை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடங்கி நாள் ஒன்றுக்கு 22 கிலோமீட்டர் என்ற அளவில் சாலைகளை அமைத்து இருக்கிறது. 2016 - 2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 8,200 கிலோமீட்டர் அளவில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது ( 2 )


துறைமுகங்கள் : 

நளி இரு முந்நீர் நாவாய் ஒட்டி 
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக !  ( புறம் 66 ) 

காற்றின் ஆற்றலை வென்று அதனை அடக்கி ஆண்டு அலைக்கடலில் கப்பல் ஒட்டியவர்களின் வாரிசே என்று கரிகால்பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடும் பாடல் இது. அப்படி திசையெங்கும் கப்பல் ஒட்டவும், அதன்மூலம் வாணிபத்தைப் பெருக்கவும் பாஜக அரசு புதியதாக 12 துறைமுகங்களை உருவாகும் பணியில் இருக்கிறது ( 3)
 அதோடு இணைந்து 14 கடற்கரை பொருளாதார மண்டலங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன ( 4 ). சரக்குகளை கையாளும் செலவு சீனாவை ஒப்பிடும்போது இந்தியாவில் 35% அதிகமாக உள்ளது. இதனால் நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களின் விலைகளும் அதிகமாக உள்ளது. சாகர்மாலா என்ற இந்த திட்டத்தினால் பொருள்களைக் கையாளும் செலவு கணிசமான அளவிற்கு குறைக்கப்படும்.

விமானப் போக்குவரத்து: 

இந்தியாவில் 499 விமானநிலையங்களும், விமானம் ஏறி இறங்க வசதியான ஓடுதளங்களும் உள்ளன. அதில் 80 விமானநிலையங்களே இன்று பயன்பாட்டில் உள்ளன. பயன்பாட்டில் இல்லாத பல விமான நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் பாஜக அரசு ஈடுபட்டு உள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக அதாவது 500 கிலோமீட்டர் தொலைவுக்கான பயணத்தை ரூபாய் 2,500/- என்ற அளவில் பயணிக்கும் கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது ( 5 )

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவையில் சர்வதேச விமான நிலையங்களும் ஓசூர், நெய்வேலி, சேலம், தூத்துக்குடி, வேலூர் ஆகிய நகரங்களில் உள்நாட்டு விமான நிலையங்களும் உள்ளன. ( 6 ) சரியான திட்டமிடல் இருந்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் வேலைக்காக தலைநகர் சென்னைக்கு பயணிக்கும் நேரமும், அங்கே தங்கி இருக்கும் செலவும் இல்லாமலேயே போய் விடும்தானே.

மோதி அரசில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது ரயில்வே துறை என்றால் அது மிகை அல்ல. 2009 - 2014ஆம் ஆண்டு காலகட்டத்தில் சராசரியாக 1500 கிலோமீட்டர் அகல ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால் 2015 - 2016ஆம் ஆண்டில் மட்டும் 2,800 கிலோமீட்டர் அளவில் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இதே காலகட்டத்தில் சராசரியாக 1184 கிலோமீட்டர் அளவில் நடைபெற்றுவந்த மின்மயமாக்கல் ( Electrification ) 1730 கிலோமீட்டராக உயர்ந்து உள்ளது. சமுதாய வலைத்தளங்கள் மூலம் பயணிகள் தெரிவிக்கும் குறைகள் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. பல்லாண்டுகளாக இணைக்கப்படாமல் இருந்த வடகிழக்கு மாநிலங்களுக்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ( 7 )உள்கட்டுமானப் பணிகள் 

குஜராத் மாநிலத்தில் தொடங்கி ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் வழியாக  உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பிஹார், மேற்கு வங்காளம் என்று தொடர்ந்து சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம் என்று கடந்து மணிப்பூர் மிசோரம் வரை சாலை வழியாக இணைக்கும் பாரதமாலா திட்டம் என்றும்இந்தியாவின் துறைமுகங்களை நவீனமயமாக்கி, புதிய துறைமுகங்களை அதோடு இணைந்த கடல்சார் பொருளாதார மண்டலங்களையும் உருவாகும் சாகர்மாலா திட்டம் எனவும் இந்தியாவின் உள்கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்துகொண்டு இருக்கின்றன.சேது பந்தனம் என்ற பெயரில் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் ரெயில்வே பாதைகளில் மேம்பாலம் மற்றும் 1500 இடங்களில் உள்ள பழைய மேம்பாலங்களை விரிவாக்கும் பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

இந்தியாவில் உள்ள நதிகளின் வழியாக சரக்கு மற்றும் ஆட்கள் போக்குவரத்தை முன்னெடுக்கும் முயற்சிகளும் ஆரம்பமாகி உள்ளது. ( 8 )


அனைவருக்குமான வங்கி சேவை : 

பல்லாண்டுகளாக இந்தியாவின் ஏழை எளிய மக்கள் நெருங்காமலே இருந்த நிலையை மாற்றி அவர்களையும் வங்கி சேவைக்குள் கொண்டு வந்தது மோதி அரசின் மிகப்பெரும் சாதனை. இன்றய தேதியில் ( 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பது கோடி மக்கள் வங்கி சேவைக்குள் வந்து உள்ளனர். அவர்கள் மூலம் ஏறத்தாழ 67 ஆயிரம் கோடி ரூபாய்கள் சேமிக்கப்பட்டு உள்ளது. அநேகமாக இன்றய நிலைமையில் வங்கி கணக்கு இல்லாத குடும்பமே இல்லை என்று கூறி விடலாம் ( 9 )
முத்திரை பாதிக்கும் முத்திரா திட்டம் : 

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில் அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியமில்லாத ஓன்று. அதுபோக நமது பொருளாதாரம் என்பதே சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களை நம்பியே உள்ளது. அப்படிப்பட்ட தொழில்முனைவோர்களை உருவாக்கவும் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவவும் உருவானதே முத்திரா திட்டம். இதன்படி ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ரூபாய் பத்து லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு செப்டம்பர் வரை மூன்றரைக் லட்சம் கோடி ரூபாய்கள் கடனாக வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலமாக ஐந்தரை கோடி வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கிறது ( 10 )

அதிலும் தமிழகத்தில் மட்டும் ஐம்பத்திமூன்று லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு ரூபாய் பதினெட்டாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேலாக கடன் வழங்கப்பட்டு உள்ளது. ( 10 a ) \
சமையல் எரிவாயு : 

இந்தியாவில் உள்ள 24 கோடி குடும்பங்களில் ஏறத்தாழ 10 கோடி குடும்பங்கள் தங்களின் உணவைத் தயாரிக்க விறகு, கரி போன்றவற்றையே நம்பி உள்ளனர். அவர்களுக்கு சமையல் எரிவாயு உருளை தரும் திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு உள்ளன ( 11 ) இதனால் புதிதாக 5000 எரிவாயு உருளைகள் விநியோகஸ்தர்களும் உருவாகி உள்ளனர்


மோதி ஆட்சிக்கு வரும்வரை சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் என்பது எல்லோருக்கும் வழங்கப்பட்டு வந்தது. மோதி வசதி படைத்த மக்களை அந்த மானியத்தை வேண்டாம் என்று விட்டுக் கொடுக்குமாறு கோரினார். அதோடு மானியவிலையில் வாங்கி அதனை உணவுவிடுதி / தொழில் செய்ய என்று பயன்படுத்தி வந்ததை தடுத்து நிறுத்தினார். இதனால் பொதுமக்கள் பணம் 21,000 கோடி ரூபாய்க்கும் மேலாக சேமிக்கப்பட்டு உள்ளது


சூரிய ஒளியின் மூலமாக மின் உற்பத்தி :

நாடு வளர்ச்சி அடையும் போது அதோடு இணைந்தே மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கும். அதனை சமாளிக்கவும் வேண்டும், அதே நேரத்தில் அதற்காக நிலக்கரியையோ அல்லது பெட்ரோலையோ இறக்குமதி செய்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்த பிரச்சனைக்கு தீர்வாக மாற்று வழிகளில் மின்சார உற்பத்தி என்பது முன்னெடுக்கப்பட்டு உள்ளது. சூரிய ஒளியைப் பயன்படுத்தி இன்று பன்னிரெண்டாயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்தப்படுகிறது. மோதி பதவியேற்கும் ஆண்டில் இது இரண்டாயிரத்து அறுநூறு மெகாவாட்டாக இருந்தது. அதாவது மூன்று ஆண்டுகளில் ஆறு பங்கு வளர்ச்சி. ( 12 )

அதுமட்டுமல்ல தூய்மையானதும், செலவு குறைவானதுமான மாற்று வழிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் மோதி அரசு நிலக்கரியால் இயங்கும் பதினாலாயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யத் திட்டமிட்ட மின் நிலையங்களை தேவை இல்லை என்று நிறுத்தி விட்டது. ( 13 ) இதன் மூலமாக தேவையில்லாத நிலக்கரி இறக்குமதியும் அதனால் ஏற்படும் நமது பணம் வெளிநாடுக்குச் செல்வதும் தடுக்கப்பட்டு உள்ளது.


மின்சேமிப்பு :

மின்சார உற்பத்தியைப் பெருக்குவது என்பது ஓன்று, அதே நேரத்தில் மின்சாரத்தை சரியாக பயன்படுத்தி, அதனால் மின்சாரத்தை சேமிப்பது என்பது இன்னொரு வழி. அதற்கான உத்திதான் LED பல்புகள் மற்றும் மின்விசிறிகள் வழங்கும் திட்டம். இதன்படி நாடெங்கும் 25 கோடிக்கும் மேலான LED பல்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பதினாலாயிரம் கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் பணம் சேமிக்கப்பட்டு உள்ளது. ( 14 )சுகாதாரம் :

தான் பதவியேற்ற ஆண்டிலேயே மோதி தனது குறிக்கோளாக குறிப்பிட்டது நாடு முழுவதும் கழிப்பறைகள் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்பதுதான். ஸ்வட்ச் பாரத் திட்டத்தின்கீழ் இரண்டரை கோடிக்கும் மேலான கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. ( 15)இதுமட்டும் அல்ல நாட்டுமக்கள் அனைவருக்கும் ஆதார் எண் கொடுத்தாலும், அதனை அவர்கள் வங்கி கணக்கோடு இணைத்ததாலும், மக்களுக்கான மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கே செலுத்துவதன் மூலம் மூன்றாண்டுகளில் பாஜக அரசு ஏறத்தாழ ஐம்பதினாயிரம் கோடி ரூபாயை முறைகேடாக செல்வதைத் தடுத்து இருக்கிறது. ( 16 ) மானிய விலையில் யூரியாவை வாங்கி அதனை வெளிச்சந்தையில் விற்பதை தடுக்கும் விதமாக விவசாயத்திற்குப் பயன்படும் யூரியாவில் வேப்பெண்ணெய்யை கலப்பதன் மூலம், அதனை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலைமையை இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது. தேவையில்லாதவர்களுக்கு மானியங்கள் செல்வதைத் தடுக்கும் இந்த முயற்சியும் மிகச் சிறந்த பலனை உருவாக்கி உள்ளது.

இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகள் எவையெல்லாம், அதில் எதெல்லாம் நிறைவேறி உள்ளது, எவையெல்லாம் நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றது. எவை எல்லாம் இன்னும் சிறப்பாக செய்யப்படவேண்டும், எவை முன்னெடுக்கப்படவில்லை என்ற தகவல்கள் இந்த இணையத்தளத்தில் உள்ளன. ( 17 )

இவை எல்லாவற்றையும்விட முக்கியமான முன்னேற்றம் என்பது இந்த மூன்றாண்டு காலத்தில் இந்த அரசின்மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்பதுதான்.

அதைவிட முக்கியானது என்று நான் கருதுவது இந்த மூன்றாண்டில் இணையதளங்களின் புழங்கும் பலரை மிகக்குறுகிய காலத்தில் பொருளாதார நிபுணர்களாக, அரசியலமைப்பு வல்லுனர்களாக, கல்வியாளர்களாக, வெளியுறவுத்துறை வித்தகர்களாக, பாதுகாப்புத்துறை அறிஞர்களாக, சுற்றுப்புறச்சூழல் வல்லுனர்களாக அதைவிட முக்கியமாக கேலிச்சித்திரங்கள் ( மீம்ஸ் ) உருவாக்குபவர்களாக மாற்றியதுதான்.

இந்த அரசு இன்னும் என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் தனிப்பட்ட முறையில் வருமானவரி வரம்பு குறைந்தபட்சம் வருடம் ஒன்றுக்கு ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்தப்படவேண்டும். சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்படவேண்டும் அல்லது சுங்கம் குறைக்கப்பட வேண்டும். பயன்படாமல், அழுகிப்போகும் உணவுப்பொருள்களை பத்திரப்படுத்தும் குளிரூட்டி நிலையங்கள் எல்லா தாலுகா அளவிலும் நிறுவப்படவேண்டும்.இதுபோன்ற செயல்களை இந்த அரசு செய்யும் என்று நான் நம்புகிறேன்.

விதி சமைக்கும் வழியில் உள்ள பிரதமருக்கு நமது நல்வாழ்த்துகளை, ஆதரவை வழங்குவோம். ஒருவேளை தவறு செய்வதுபோல் தெரிந்தால் அதனை சுட்டிக்காட்டுவோம். நாட்டின் முன்னேற்றம் என்பது நம் எல்லோரின் பொறுப்பும்தான். அதனைவிட்டுவிட்டு வெறும் வெறுப்பை உமிந்துகொண்டு இருப்பதில் எந்தப்பயனும் இல்லை.


தரவுகள்


சாலைகள்

1, https://timesofindia.indiatimes.com/india/NDA-regime-constructed-50-of-national-highways-laid-in-last-30-years-Centre/articleshow/20869113.cms

2 (a) http://www.hindustantimes.com/india-news/government-constructs-22-km-of-roads-per-day-misses-target-of-41-km-by-half/story-nLLJazVO6TZlzgx7lIu7iO.html

2 (b) http://www.thehindu.com/business/Industry/pace-of-laying-of-roads-rises-to-22-km-daily-in-2016-17/article18113295.ece

துறைமுகம்

3, https://www.joc.com/international-trade-news/infrastructure-news/asia-infrastructure-news/indian-port-development-program-makes-strides_20170110.html

4, http://www.firstpost.com/india/sagarmala-project-proposes-14-coastal-economic-zones-across-india-3130866.html

4 ( a ) http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=159037

விமானப் பயணம் 

5, http://www.india.com/news/india/udan-scheme-list-of-45-new-airports-over-70-new-routes-announced-today-5-airlines-make-the-cut-1976363/

6, https://en.wikipedia.org/wiki/List_of_airports_in_India#Tamil_Nadu

ரயில்வேத்துறை

7, http://trak.in/info/2790-indian-railways-suresh-prabhu-achievements/

உள்கட்டுமானம் :

8 ( a ) http://www.financialexpress.com/india-news/narendra-modis-top-10-signature-infrastructure-projects-to-power-new-india/613121/

8 ( b ) https://www.macquarie.com/cn/about/newsroom/2016/infrastructure-improvement-in-india

8 ( c ) https://www.bloomberg.com/news/articles/2017-02-01/modi-plans-59-billion-rail-road-push-as-bombardier-ge-invest

அனைவருக்குமான வங்கி சேவை : 

9 ( a ) https://www.pmjdy.gov.in/account

9 ( b ) http://www.livemint.com/Opinion/wfertnZlyGRTmGiyGnJLrI/The-admirable-success-of-the-JanDhan-Yojana.html

முத்திரா திட்டம் 

10,  https://economictimes.indiatimes.com/news/economy/policy/narendra-modis-mudra-yojana-generates-5-5-crore-jobs-says-report/articleshow/60435774.cms

10 ( a ) http://www.newindianexpress.com/states/andhra-pradesh/2017/oct/09/at-10th-rank-andhra-pradesh-lags-in-mudra-loan-disbursal-1668849.html


சமையல் எரிவாயு : 

11 ( a )  http://www.livemint.com/Industry/cTycVe4kwGtmRNjvowf8BO/Ujjwala-scheme-for-LPG-connections-now-has-25-crore-benefic.html

11 ( b ) https://timesofindia.indiatimes.com/business/india-business/plugging-lpg-subsidy-leaks-leads-to-rs-21000-crore-savings/articleshow/57022255.cms


சூரிய ஒளியின் மூலமாக மின் உற்பத்தி 

12,  http://www.newindianexpress.com/business/2017/apr/10/indias-solar-power-generation-capacity-crosses-12-gw-energy-minister-1592126.html

13, http://www.independent.co.uk/environment/india-solar-power-electricity-cancels-coal-fired-power-stations-record-low-a7751916.html

மின்சேமிப்பு 

14,  https://economictimes.indiatimes.com/industry/energy/power/over-25-crore-led-bulbs-distributed-under-ujala-scheme-eesl/articleshow/59635515.cms

சுகாதாரம் 

15, http://swachhindia.ndtv.com/httpswachhindia-ndtv-com5-year-report-card-shows-massive-growth-indias-sanitation-coverage-6232-6232/

16, https://economictimes.indiatimes.com/news/economy/finance/direct-benefit-transfer-leads-to-rs-50000-crore-savings-for-government-in-3-years/articleshow/57240387.cms

17, http://www.electionpromisestracker.in/governments/central-government/