திங்கள், 2 டிசம்பர், 2019

அம்புலிமாமாவின் மாமா - B நாகி ரெட்டி - டிசம்பர் 2


இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளுக்கு முன்னர் தங்கள் பாலியத்தை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அது ஒரு சுகமான காலம் என்று. தொலைபேசியும் இணையத் தொடர்போடு கூடிய கைபேசியும் இல்லாத காலம் அது. குழந்தைகள் பிறந்த உடனேயே படிக்கவேண்டும், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கவேண்டும், கணினித் துறையில் வேலைக்குச் சேரவேண்டும், உடனே வெளிநாடு செல்லவேண்டும் என்ற அழுத்தம் இல்லாமல் இருந்த காலம். வீடுகளில் தாத்தாவும் பாட்டியும், மாதத்தில் பாதி நாட்கள் தங்கி இருக்கும் உறவினர்களும் என்று பேசவும் பகிரவும் ஆள்கள் எப்போதும் இருந்த காலம். ஆங், அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்தினபாலா,  லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என்று பாடத்தைத் தாண்டியும் படிக்க புத்தகங்கள் இருந்த காலம் அது. சிறுவர்களுக்கான நூல்களில் முன்னோடியும், அறுபதாண்டுகளுக்கு மேலாக ஆங்கிலத்தோடு சேர்த்து பதின்மூன்று மொழிகளில் வெளியான அம்புலிமாமா என்ற பத்திரிகையை நடத்தி வந்த திரு நாகி ரெட்டியின் பிறந்தநாள் இன்று.

இன்றய ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தைச் சார்ந்தவர் திரு நாகி ரெட்டி அவர்கள். இவரின் தந்தை சென்னையில் தங்கி இருந்து வெளிநாடுகளுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்துகொண்டு இருந்தார். நாகி ரெட்டியின் மூத்த சகோதரர் நரசிம்ம ரெட்டி. திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்த நரசிம்ம ரெட்டியைப் பின்தொடர்ந்து நாகி ரெட்டியும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடலானார். நாகி ரெட்டி தனது நண்பரான சக்ரபாணி என்பவரோடு இணைந்து தமிழிலும், தெலுங்கிலும் பல்வேறு வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற வெற்றிப்படங்களை நாகி ரெட்டி தயாரித்து வெளியிட்டார். சென்னையின் முக்கியமான திரைப்படத் தளமாக விளங்கிய விஜயா வாகினி ஸ்டுடியோவும் இந்த இரட்டையர்களுக்கு சொந்தமானதுதான். கன்னடம், மற்றும் ஹிந்தி மொழியிலும் இந்த நிறுவனம் திரைப்படங்களைத் தயாரித்து உள்ளது.

ஆனால் இது அனைத்தையும் விட நாகி ரெட்டியின் மகத்தான பங்களிப்பு என்பது ஏறத்தாழ அறுபதாண்டு காலத்திற்கும் மேலாக சந்தமாமா என்ற சிறுவர் பத்திரிகையை பல மொழிகளிலும் நடத்தியதுதான். 1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாந்தாமாமா என்று தெலுங்கிலும் அம்புலிமாமா என்று தமிழிலும் ஒரே நேரத்தில் சிறார் பத்திரிகையை நாகி ரெட்டி தொடங்கினார். 


1949ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கன்னட மொழியில், 1949 ஆகஸ்ட் மாதம் ஹிந்தியில், 1952ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மராத்தி மற்றும் மலையாள மொழியில், 1954ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில், 1955ஆம் ஆண்டு ஆங்கிலத்தில், 1956ஆம் ஆண்டு ஒரிய மற்றும் சிந்தி மொழியில், 1972ஆம் ஆண்டு வங்காள மொழியில், 1975ஆம் ஆண்டு பஞ்சாபி மொழியில், 1976ஆம் ஆண்டு அஸ்ஸாமிய மொழியில், 1978ஆம் ஆண்டு சிங்கள மொழியில், 1984ஆம் ஆண்டு ஸமிஸ்க்ரித மொழியில், சந்தாலி மொழியில் 2004ஆம் ஆண்டு என்று பாரதத்தின் முக்கிய மொழிகளில் எல்லாவற்றிலும் இந்தப் பத்திரிகை வெளிவந்தது.

பாரத நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் கதைகள், பல்வேறு மொழிகளில் உள்ள நீதிக்கதைகள் என்று பாரதத்தின் பாரம்பரியத்தை சிறுவர்களிடம் எடுத்துச் சென்றதில் சந்தமாமா பத்திரிகை பெரும் பங்காற்றியது.

இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு நாகி ரெட்டியின் குடும்பத்தினர் பத்திரிகையின் பங்குகளை வேறு சிலரோடு பகிர்ந்து கொண்டார்கள். தொழிலாளர் பிரச்னை காரணமாக ஓராண்டு இந்தப் பத்திரிகை வெளிவராமல் இருந்தது. மீண்டும் வெளிவரத் தொடங்கிய சந்தமாமா பத்திரிகை இன்று வெளிவருவது இல்லை. ஆனாலும் அறுபதாண்டுகளாக கலாச்சாரத்தை சிறுவர்களுக்கு போதித்த ஒரு பெரும் பங்களிப்பு எல்லாக் காலத்திலும் திரு நாகி ரெட்டியை நம் மனதில் நீங்காத இடத்தில் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

திரைத்துறையில் நாகி ரெட்டியின் பங்களிப்பை பல்வேறு மாநில அரசாங்கங்கள் அங்கீகரித்து பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளன. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, கன்னட மொழியின் சிறந்த திரைப்படத்திற்கான விருது, பிலிம்பேர் விருதுகள் என்று பல விருதுகள் இவரை வந்தடைந்தன. அனைத்திலும் சிகரம் போல பாரத அரசு திரைதுறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை நாகி ரெட்டிக்கு 1986ஆம் ஆண்டு வழங்கியது.

ஆசிரியர் குழுவின் இளமைப் பருவத்தை இனியதாக மாற்றிய திரு நாகி ரெட்டி அவர்களை இன்று நாங்கள் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.