புதன், 1 ஜனவரி, 2020

காந்தியின் செயலாளர் மஹாதேவ தேசாய் - ஜனவரி 1நாடு சுதந்திரம் அடைய மிகச் சரியாக ஐந்தாண்டுகள் இருந்தது. 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் அது. ஐம்பது வயதான அந்த மனிதர் உயிரற்ற உடலாக ஆகாகான் மாளிகையில் கிடத்தப்பட்டு இருந்தார். எழுபத்தி மூன்று வயதான முதியவர் "மஹாதேவ், மஹாதேவ்" என்று குரல் கொடுத்து அவரை எழுப்ப முயற்சி செய்துகொண்டிருந்தார். " இருபத்தி ஐந்தாண்டுகளாக எனது எந்த ஆணையையும் இவன் மீறியதே இல்லை, இன்றுதான் பதில் சொல்லாமல் இருக்கிறான்" என்று கூறியபடி உயிரற்ற அந்த உடலை குளிப்பாட்டி, தன் மகனைப் போல இருந்தவனுக்கு அந்த முதியவர் தந்தைக்கு மகன் செய்வது போல இறுதிச் சடங்குகளை முன்னின்று செய்தார். தந்தை இருக்கும்போது மகன் இறக்க நேரிடும் இல்லங்களில் நாம் காணும் காட்சிதான் இது. ஆனால் அங்கே இறந்து கிடந்தவர் மஹாதேவ தேசாய், இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்தியவர் காந்தி.

காந்தியின் செயலாளராக, அவரின் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சராக, காந்தியின் வாழ்வின் முக்கியமான கட்டத்தைப் பதிவு செய்தவராக, பல நேரங்களில் காந்தியின் சமையல்காரராக, காந்தியின் மகனாக  இருந்த மஹாதேவ தேசாயின் பிறந்ததினம் இன்று. இன்றய குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியைச் சேர்ந்த ஹரிபாய் தேசாய் - ஜம்னாபென் தம்பதியரின் மகனாக 1892ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் பிறந்தவர் மஹாதேவ் தேசாய். எளிய குடும்பத்தில் பிறந்த தேசாய், தனது ஆரம்ப கல்வியை சூரத்தில் முடித்து பின்னர் மும்பை எலிபென்டைன் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், பின்னர் சட்டப் படிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து மும்பை மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளராகப் பணியில் அமர்ந்தார். இதற்கிடையில் அன்றய வழக்கத்தின்படி தனது பதின்மூன்றாம் வயதில் மஹாதேவ தேசாய் துர்காபென் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

தென்னாபிரிக்காவில் இருந்து காந்தி அப்போதுதான் பாரதம் திரும்பி இருந்தார். 1915ஆம் ஆண்டு முதல்முறையாக மஹாதேவ தேசாய் காந்தியை சந்திக்கச் சென்றார். ஜான் மோர்லே என்பவர் எழுதிய ஆங்கிலப் புத்தகம் ஒன்றை அவர் அப்போது குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்திருந்தார். அதனைப் பிரசுரம் செய்வது பற்றி காந்தியின் ஆலோசனையை அவர் கேட்க விரும்பினார். அந்த சந்திப்பு பின்னர் பலமுறை காந்தியை நேரில் கண்டு பழகும் வாய்ப்பை தேசாய்க்கு அளித்தது. 1917ஆம் ஆண்டு தேசாயை தன்னோடு தங்கி இருக்கும்படி காந்தி கேட்டுக்கொண்டார். 1917ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி முதல் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் நாள், அதாவது தான் இறப்பதற்கு முன்தினம் வரை முழுமையாக தேசாய் பதிவு செய்துள்ளார்.

காந்தியோடு இணைந்த பிறகு தேசாய் முதன்முதலாக பிஹார் மாநிலத்திற்கு காந்தியோடு சென்றார். அநேகமாக தேசாய் இல்லாது காந்தி யாரையும் சந்தித்ததே இல்லை என்று சொல்லலாம். காந்தி இங்கிலாந்து சென்றபோது, அன்றய பிரிட்டிஷ் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தார், அந்த சந்திப்பில் உடனிருந்த ஒரே ஒருவர் தேசாய்தான் என்றால் காந்தியின் மனதில் தேசாயின் இடம் என்ன என்பது நமக்குப் புரியும். சொல்லப்போனால் விடுதலைப் போரில் காந்தியின் முக்கியத் தளபதிகளாக இருந்த நேரு, படேல் இவர்களைக் காட்டிலும் தேசாய் காந்திக்கு நெருக்கமாக இருந்தார். காந்தியோடு இருப்பது என்பது எந்த நேரத்திலும் சிறை செல்லத் தயாராக இருப்பது என்றுதான் பொருள். தேசாயும் பலமுறை சிறை செல்ல வேண்டி இருந்தது. தான் எழுதிய கட்டுரைக்காக 1921ஆம் ஆண்டு முதன்முதலில் சிறையான தேசாய், பின்னர் உப்பு சத்தியாகிரஹம், சட்ட மறுப்பு போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்தார்.

மஹாதேவ தேசாய் ஒரு சிறந்த எழுத்தாளருமான இருந்தார். குஜராத்தி, ஆங்கிலம், வங்காள மொழிகளில் அவர் பல கட்டுரைகளை எழுதி உள்ளார். நவஜீவன், எங் இந்தியா, ஹரிஜன், ஹிந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஆனந்த பஜார் பத்திரிகா ஆகிய பத்திரிகைகளில் அவரது கட்டுரைகள் வெளியாகி உள்ளது. பர்தோலி சத்தியாகிரஹம் பற்றிய புத்தகம் ஒன்றை அவர் எழுதினார். காந்தி தனது தாய்மொழியான குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரித்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது தேசாய்தான். கீதை பற்றி காந்தி பல்வேறு இடங்களில் பேசியதையும் எழுதியதையும் தொகுத்து காந்தியின் பார்வையில் கீதை என்ற நூலை அவர் எழுதினார். வல்லபாய் படேல், கான் அப்துல் கபார் கான் ஆகியோர் பற்றிய வரலாற்று நூல்கள், வங்கத்தின் புகழ்பெற்ற நாவலாசிரியர் சரத்சந்திர சட்டோபாத்யாய எழுதிய பல்வேறு சிறுகதைகள், மற்றும் ஜவஹர்லால் நேருவின் சுயசரிதம் ஆகியவற்றை தேசாய் குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து உள்ளார்.

காந்தியோடு அவர் இருந்த காலத்தில் எழுதிய நாள்குறிப்புகள் இருபத்தி இரண்டு தொகுதி கொண்ட மஹாதேவபாய் டைரி என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இது தேசாயின் மரணத்திற்குப் பிறகு பிரசுரமானது. காந்தியின் வாழ்வைப் பற்றியும், பாரத நாட்டின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் பல முக்கியமான தகவல்கள் கொண்ட களஞ்சியமாக இது விளங்குகிறது. இந்த நூலுக்காக சாஹித்ய அகாடமி விருது தேசாய்க்கு அவரின் மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்டது. 

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் நாள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி தொடங்கினார். செய் அல்லது செத்து மடி என்று மக்களுக்கு அறிவுரை பிறந்தது. இந்த நாட்டை யாரிடம் கொடுப்பது என்று கேட்கிறார்கள்,யாரிடம் வேண்டுமானாலும் கொடுங்கள், திருடனிடமோ, கொள்ளைக்காரனிடமோ யாரிடம் வேண்டுமானாலும் கொடுங்கள் ஆனால் நீங்கள் வெளியேறுங்கள் என்று ஆங்கிலேயர்களிடம் கூறப்பட்டது. முழு பலத்தோடு ஆங்கில அரசு போராட்டத்தை ஒடுக்க முடிவு செய்தது. நாட்டின் பல்வேறு தலைவர்கள் உடனைடியாகக் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 9ஆம் நாள் காந்தி கைதானார். மஹாதேவ தேசாயும் அவரோடு கைது செய்யப்பட்டார். அவர்கள் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். ஆறே நாட்களில் மாரடைப்பால் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் தேசாய் காலமானார்.

நாட்டின் முக்கியமான தேசபக்தர்களில் ஒருவரான மஹாதேவ தேசாயின் பிறந்ததினத்தில் ஒரே இந்தியா தளம் அவருக்கு தன் மரியாதையை செலுத்துகிறது.