விடுதலைப் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலைப் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஜனவரி, 2026

ஜனவரி 1 - காந்தியின் செயலாளர் மஹாதேவ தேசாய் பிறந்ததினம்



நாடு சுதந்திரம் அடைய மிகச் சரியாக ஐந்தாண்டுகள் இருந்தது. 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் அது. ஐம்பது வயதான அந்த மனிதர் உயிரற்ற உடலாக ஆகாகான் மாளிகையில் கிடத்தப்பட்டு இருந்தார். எழுபத்தி மூன்று வயதான முதியவர் "மஹாதேவ், மஹாதேவ்" என்று குரல் கொடுத்து அவரை எழுப்ப முயற்சி செய்துகொண்டிருந்தார். " இருபத்தி ஐந்தாண்டுகளாக எனது எந்த ஆணையையும் இவன் மீறியதே இல்லை, இன்றுதான் பதில் சொல்லாமல் இருக்கிறான்" என்று கூறியபடி உயிரற்ற அந்த உடலை குளிப்பாட்டி, தன் மகனைப் போல இருந்தவனுக்கு அந்த முதியவர் தந்தைக்கு மகன் செய்வது போல இறுதிச் சடங்குகளை முன்னின்று செய்தார். தந்தை இருக்கும்போது மகன் இறக்க நேரிடும் இல்லங்களில் நாம் காணும் காட்சிதான் இது. ஆனால் அங்கே இறந்து கிடந்தவர் மஹாதேவ தேசாய், இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்தியவர் காந்தி.

காந்தியின் செயலாளராக, அவரின் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சராக, காந்தியின் வாழ்வின் முக்கியமான கட்டத்தைப் பதிவு செய்தவராக, பல நேரங்களில் காந்தியின் சமையல்காரராக, காந்தியின் மகனாக  இருந்த மஹாதேவ தேசாயின் பிறந்ததினம் இன்று. இன்றய குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியைச் சேர்ந்த ஹரிபாய் தேசாய் - ஜம்னாபென் தம்பதியரின் மகனாக 1892ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் பிறந்தவர் மஹாதேவ் தேசாய். எளிய குடும்பத்தில் பிறந்த தேசாய், தனது ஆரம்ப கல்வியை சூரத்தில் முடித்து பின்னர் மும்பை எலிபென்டைன் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், பின்னர் சட்டப் படிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து மும்பை மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளராகப் பணியில் அமர்ந்தார். இதற்கிடையில் அன்றய வழக்கத்தின்படி தனது பதின்மூன்றாம் வயதில் மஹாதேவ தேசாய் துர்காபென் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

தென்னாபிரிக்காவில் இருந்து காந்தி அப்போதுதான் பாரதம் திரும்பி இருந்தார். 1915ஆம் ஆண்டு முதல்முறையாக மஹாதேவ தேசாய் காந்தியை சந்திக்கச் சென்றார். ஜான் மோர்லே என்பவர் எழுதிய ஆங்கிலப் புத்தகம் ஒன்றை அவர் அப்போது குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்திருந்தார். அதனைப் பிரசுரம் செய்வது பற்றி காந்தியின் ஆலோசனையை அவர் கேட்க விரும்பினார். அந்த சந்திப்பு பின்னர் பலமுறை காந்தியை நேரில் கண்டு பழகும் வாய்ப்பை தேசாய்க்கு அளித்தது. 1917ஆம் ஆண்டு தேசாயை தன்னோடு தங்கி இருக்கும்படி காந்தி கேட்டுக்கொண்டார். 1917ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி முதல் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் நாள், அதாவது தான் இறப்பதற்கு முன்தினம் வரை முழுமையாக தேசாய் பதிவு செய்துள்ளார்.

காந்தியோடு இணைந்த பிறகு தேசாய் முதன்முதலாக பிஹார் மாநிலத்திற்கு காந்தியோடு சென்றார். அநேகமாக தேசாய் இல்லாது காந்தி யாரையும் சந்தித்ததே இல்லை என்று சொல்லலாம். காந்தி இங்கிலாந்து சென்றபோது, அன்றய பிரிட்டிஷ் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தார், அந்த சந்திப்பில் உடனிருந்த ஒரே ஒருவர் தேசாய்தான் என்றால் காந்தியின் மனதில் தேசாயின் இடம் என்ன என்பது நமக்குப் புரியும். சொல்லப்போனால் விடுதலைப் போரில் காந்தியின் முக்கியத் தளபதிகளாக இருந்த நேரு, படேல் இவர்களைக் காட்டிலும் தேசாய் காந்திக்கு நெருக்கமாக இருந்தார். காந்தியோடு இருப்பது என்பது எந்த நேரத்திலும் சிறை செல்லத் தயாராக இருப்பது என்றுதான் பொருள். தேசாயும் பலமுறை சிறை செல்ல வேண்டி இருந்தது. தான் எழுதிய கட்டுரைக்காக 1921ஆம் ஆண்டு முதன்முதலில் சிறையான தேசாய், பின்னர் உப்பு சத்தியாகிரஹம், சட்ட மறுப்பு போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்தார்.

மஹாதேவ தேசாய் ஒரு சிறந்த எழுத்தாளருமான இருந்தார். குஜராத்தி, ஆங்கிலம், வங்காள மொழிகளில் அவர் பல கட்டுரைகளை எழுதி உள்ளார். நவஜீவன், எங் இந்தியா, ஹரிஜன், ஹிந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஆனந்த பஜார் பத்திரிகா ஆகிய பத்திரிகைகளில் அவரது கட்டுரைகள் வெளியாகி உள்ளது. பர்தோலி சத்தியாகிரஹம் பற்றிய புத்தகம் ஒன்றை அவர் எழுதினார். காந்தி தனது தாய்மொழியான குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரித்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது தேசாய்தான். கீதை பற்றி காந்தி பல்வேறு இடங்களில் பேசியதையும் எழுதியதையும் தொகுத்து காந்தியின் பார்வையில் கீதை என்ற நூலை அவர் எழுதினார். வல்லபாய் படேல், கான் அப்துல் கபார் கான் ஆகியோர் பற்றிய வரலாற்று நூல்கள், வங்கத்தின் புகழ்பெற்ற நாவலாசிரியர் சரத்சந்திர சட்டோபாத்யாய எழுதிய பல்வேறு சிறுகதைகள், மற்றும் ஜவஹர்லால் நேருவின் சுயசரிதம் ஆகியவற்றை தேசாய் குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து உள்ளார்.

காந்தியோடு அவர் இருந்த காலத்தில் எழுதிய நாள்குறிப்புகள் இருபத்தி இரண்டு தொகுதி கொண்ட மஹாதேவபாய் டைரி என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இது தேசாயின் மரணத்திற்குப் பிறகு பிரசுரமானது. காந்தியின் வாழ்வைப் பற்றியும், பாரத நாட்டின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் பல முக்கியமான தகவல்கள் கொண்ட களஞ்சியமாக இது விளங்குகிறது. இந்த நூலுக்காக சாஹித்ய அகாடமி விருது தேசாய்க்கு அவரின் மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்டது. 

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் நாள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி தொடங்கினார். செய் அல்லது செத்து மடி என்று மக்களுக்கு அறிவுரை பிறந்தது. இந்த நாட்டை யாரிடம் கொடுப்பது என்று கேட்கிறார்கள்,யாரிடம் வேண்டுமானாலும் கொடுங்கள், திருடனிடமோ, கொள்ளைக்காரனிடமோ யாரிடம் வேண்டுமானாலும் கொடுங்கள் ஆனால் நீங்கள் வெளியேறுங்கள் என்று ஆங்கிலேயர்களிடம் கூறப்பட்டது. முழு பலத்தோடு ஆங்கில அரசு போராட்டத்தை ஒடுக்க முடிவு செய்தது. நாட்டின் பல்வேறு தலைவர்கள் உடனைடியாகக் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 9ஆம் நாள் காந்தி கைதானார். மஹாதேவ தேசாயும் அவரோடு கைது செய்யப்பட்டார். அவர்கள் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். ஆறே நாட்களில் மாரடைப்பால் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் தேசாய் காலமானார்.

நாட்டின் முக்கியமான தேசபக்தர்களில் ஒருவரான மஹாதேவ தேசாயின் பிறந்ததினத்தில் ஒரே இந்தியா தளம் அவருக்கு தன் மரியாதையை செலுத்துகிறது. 

சனி, 15 நவம்பர், 2025

நவம்பர் 15 - ஆச்சார்ய வினோபா பாவே நினைவுநாள்

"எனது சீடனாக வந்து எனது ஆசிரியராக மாறியவர்" என்று காந்தியால் புகழப்பட்டவர், தனிநபர் சத்தியாகிரஹத்தின் முதல் போராளி,  நாடு முழுவதும் சுற்றிவந்து நிலச்சுவான்தார்கள் இடமிருந்து நிலங்களைப் பெற்று அதனை நிலமற்ற ஏழைத் தொழிலாளிகளுக்கு அளித்த பூதான இயக்கத்தின் தந்தை, பலமொழி அறிஞர், காந்தியின் ஆன்மீக வாரிசு என்று அறியப்படும்  ஆச்சாரிய வினோபா பாவேயின் நினைவுநாள் இன்று.



இன்று மும்பையின் பகுதியாக விளங்கும் கொலாபா பகுதியில் வசித்து வந்த நரஹரி சம்புராவ் - ருக்மணி தேவி தம்பதியரின் மூத்த மகனாக 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் பிறந்தவர் விநாயக் நரஹரிராவ் என்னும் வினோபா பாவே. இறைநம்பிக்கையை கொண்ட தாயாலும் பாட்டியாலும் வளர்க்கப்பட்டதால் சிறுவயதிலேயே இதிகாச புராணங்களையும், கீதையையும் வினோபா முழுமையாகக் கற்று இருந்தார்.

1916ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வு எழுத மும்பைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய  இருந்த வினோபா  தனது கல்விச் சான்றிதழ்கள் எல்லாவற்றையும் தீயில் வீசிவிட்டு மும்பை செல்லாமல் காசிக்கு பயணமானார். ஆன்மீக சாதனையில் ஈடுபடத்தான் அவர் நினைத்து இருந்தார். ஆனால் காலம் அவர்க்கு வேறு வழியைக் காட்ட தீர்மானித்தது. காசியில் இருந்தபடி காந்தியோடு கடித தொடர்பை ஏற்படுத்தினார். காந்தி அவரை அஹமதாபாத் நகரில் அவர் தங்கி இருந்த கோசரப் ஆசிரமத்திற்கு வருமாறு அழைத்தார். அந்த சந்திப்பு வினோபாவை முழுவதுமாக மாற்றியது.

தனிப்பட்ட ஆன்மீக சாதனைகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அவர் தேசப்பணிக்கு தன்னை அர்ப்பணம் செய்துகொண்டார். காந்தியின் அறிவுரையின்படி மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வார்தா பகுதியில் அமைந்துள்ள ஆஸ்ரமத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அங்கே அவர் மஹாராஷ்டிரா தர்மா என்ற மராட்டி மாத இதழை நடத்தலானார். பின்னர் அந்த இதழ் வார இதழாக வெளிவரத் தொடங்கியது. அதில் தொடர்ந்து உபநிஷதங்களின் உரைகளை எழுதலானார். கதர், கைத்தொழில், சுகாதாரம், கல்வி என்று காந்தியின் பல்வேறு தேச புனர்நிர்மாணப் பணிகளை வினோபா மேற்கொண்டார். கேரள மாநிலம் வைக்கம் நகரில் உள்ள வைக்கம் நகரில் கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதற்கான போராட்டத்திற்காக அனுப்பப்பட்டார். காந்தி தொடங்கிய தனிநபர் சத்தியாகிரஹப் போராட்டத்தின் முதல் வீரராக வினோபா காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்ற நூற்றாண்டின் இருபதுகளிலும் முப்பதுகளில் வினோபா பல முறை கைது செய்யப்பட்டார். சிறையில் படிப்பதும் எழுதுவதும் அவரது வேலையாக மாறியது. இஷாவாக்கிய விருத்தி, ஸ்திரப் ப்ரகிய தர்ஷன், ஸ்வராஜ்ய சாஸ்திரா  ஆகிய நூல்களை அவர் சிறையில் இருந்த போது எழுதினார். சிறையில் மற்ற கைதிகளுக்கு அவர் மராட்டி மொழியில் கீதையைப் பற்றி பேசியதின் தொகுப்பு கீதைப் பேருரைகள் என்ற பெயரில் புத்தகமாக பல்வேறு மொழிகளில் இன்று கிடைக்கிறது. கீதைக்கான சிறந்த உரைகளில் வினோபாவேயின் உரை முக்கியமான ஒன்றாகும். தமிழகத்தின் வேலூர் சிறையில் இருந்த காலத்தில் நான்கு தென்னிந்திய மொழிகளையும் கற்றுக்கொண்டார்.

நாடு விடுதலையான பிறகு நேரடி அரசியலில் ஈடுபடாமல் சமுதாயப் பணிகளிலேயே வினோபா தொடர்ந்து செயல்பட்டார். இன்றய தெலுங்கானா மாநிலத்தில் அன்று கம்யூனிஸ்ட் கட்சி செயல்பாட்டாளர்கள் நிலச் சுவான்தார்களை கொன்று நிலமற்ற ஏழை மக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அவர்களை அடக்க ராணுவமும் காவல்துறையும் களமிறங்கியது. இருவருக்கும் நடுவே மக்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தனர். இந்த சமயத்தில் வினோபா அந்தப் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நிலமற்ற நாற்பது  தாழ்த்தப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை அவர் அங்கே உள்ள மக்களிடம் முன்வைத்தார். தனக்கு சொந்தமான நிலத்தில் நூறு ஏக்கர் நிலத்தை ராமச்சந்திர ரெட்டி என்ற நிலச்சுவான்தார் அந்த மக்களுக்கு அளிக்க முன்வந்தார். குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் போதும் எனவே எண்பது ஏக்கர்களை மட்டும் பெற்றுக் கொள்கிறோம் என்று அந்த ஹரிஜன சகோதர்கள் கூறினார்கள். இந்த சிறிய விதை பூதான இயக்கமாக உருவானது.

நிலமற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்றால் ஏறத்தாழ ஐந்து கோடி ஏக்கர் நிலம் வேண்டும் என்று கணக்கிடப்பட்டது. கிராமம் கிராமமாகச் சென்று "நான் உங்கள் ஐந்தாவது மகன், எனக்கான பங்கைக் தாருங்கள்" என்று வினோபா கோரிக்கை வைத்தார். சராசரியாக ஒரு நாளுக்கு இருநூறில் இருந்து முன்னூறு ஏக்கர் நிலம் அவருக்கு அளிக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கிய அவரது பாதயாத்திரை 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் நிறைவு பெற்றது. ஏறத்தாழ 40 லட்சம் ஏக்கர் நிலத்தை அவர் பெற்று மக்களுக்கு அளித்தார். தானமும் தர்மமும் பாரதநாட்டின் பிரிக்க முடியாத அம்சம் என்று வினோபா நிரூபித்தார். மீண்டும் 1965ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு பிஹார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மக்களிடம் தற்சார்ப்பு பொருளாதாரம் பற்றிய ஆவலை உருவாக்கினார். சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த கொள்ளைக்காரர்கள் பலர் வினோபாவின் அறிவுரையினை ஏற்று அரசிடம் சரணடைந்தார்கள்.

1970ஆம் ஆண்டு முதல் ஒரே இடத்தில் தங்கி ஆத்ம சாதனையை மேற்கொள்ளப் போவதாக வினோபா அறிவித்தார். 1974ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு டிசம்பர் 25வரை ஓராண்டு பேசாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தது அதனை செயல்படுத்தினார்.

பாரத நாட்டு வரலாற்றில் அது ஒரு சோதனையான காலகட்டம். உயரிய விழுமியங்களை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சி பதவியாசை கொண்டு விளங்கியது. லஞ்சமும், ஊழலும், வேலையில்லா திண்டாட்டமும் நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. சர்வோதயா இயக்கத்தில் ஆச்சாரிய வினோபாவின் தளபதியாக விளங்கிய ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் மாணவர்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். பிரதமர் இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்திரா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். நாட்டின் ஜனநாய உரிமைகள் எல்லாவற்றையும் அவர் இல்லாமல் செய்தார். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் தளபதிகளாக செயல்பட்ட தலைவர்கள் அனைவரும் இதனை எதிர்த்தனர். ஆனால் எனோ வினோபா இந்திராவை ஆதரித்தார். மிகப் பெரும் மனிதர்களும் தவறிழைக்கும் நேரங்கள் உண்டு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல

1982ஆம் ஆண்டு உணவருந்த மறுத்து சமண முறைப்படி உபவாசம் இருந்து நவம்பர் 15ஆம் தேதி ஆச்சாரிய வினோபா பாவே தனது உடலைத் துறந்தார். இறப்பிற்கு பிறகு அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மரியாதை செலுத்தியது.

இப்படிப்பட்ட மக்களையும் பாரதத் தாய் ஈன்றெடுத்துள்ளாள் என்பதையாவது நாம் அறிந்து கொள்வோம். 

செவ்வாய், 11 நவம்பர், 2025

நவம்பர் 11 - அபுல் கலாம் ஆசாத் பிறந்ததினம்



உலகத்தின் ஞான ஒளியாக பாரதம் என்றுமே திகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆப்கானிய வம்சாவளியைச் சார்ந்த ( பாரதம் என்பது இன்றய ஆப்கானிஸ்தான் வரை பரவி இருந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ) டெல்லியில் வசித்து வந்த மௌலானா சையத் முஹம்மத் கைருதீன் பின் அஹமத் அல் ஹுசைனி என்பவர் இஸ்லாமிய தத்துவத்தில் பெரும் அறிஞராக இருந்தார். அவரை இஸ்லாத்தின் அஸ்திவாரமாக மெக்கா நகருக்கு வரவழைத்து அவரிடம் அரேபியர்கள் இஸ்லாமிய தத்துவத்தின் விளக்கத்தை கேட்டறிந்தார்கள் என்றால் அவரது ஆழ்ந்த புலமையை நாம் அறியலாம். மெக்கா நகரில் அவர் வசித்து வந்த காலத்தில் அரேபிய நாடு முழுவதும் அறியப்பட்ட அறிஞரான ஷேக் முஹம்மத் பின் சாஹீர் அல்வட்ரி என்பவரின் மகளான ஆலா பின்த் முஹம்மத் என்பவரை மணந்து கொண்டார். இந்த தம்பதியரின் மகனாக இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா நகரில் 1888ஆம் ஆண்டு பிறந்தவர்தான் செய்யத் குலாம் முஹைதீன் அஹமத் பின் கைருதீன் அழ ஹுசைனி என்ற மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள்.

1890ஆம் ஆண்டே ஆசாத்தின் பெற்றோர்கள் பாரதம் திரும்பி கொல்கத்தா நகரில் வசிக்கத் தொடங்கினார்கள். அபுல் கலாம் ஆசாத் தனது படிப்பை தனது வீட்டிலேயே ஆரம்பித்தார். தகுதியான ஆசிரியர்கள் அவருக்கு ஹிந்தி, பாரசீகம், ஆங்கிலம், வங்காளம், அரபி உருது ஆகிய மொழிகளையும், கணிதம், வரலாறு, அறிவியல் தத்துவம் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கவியல்  ஆகிய பாடங்களையும் கற்றுக் கொடுத்தனர். இயல்பிலேயே சூட்டிகையான மாணவனாக இருந்த ஆசாத், மிக விரைவில் பல்மொழி புலவராகவும், பல துறை அறிஞராகவும் அறியப்பட்டார். பதின்ம வயதிலேயே பத்திரிகை நடத்தவும், தனக்கு மூத்த மாணவர்களுக்கு பாடம் நடத்தவும் அவர் ஆரம்பித்தார்.

படித்த படிப்பின் படி அவர் ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞராகத்தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் அவரது படிப்பு அவரை ஒரு பத்திரிகையாளராக மாற்றியது. இளம் பருவத்தில் அவர் ஆயுதம் தாங்கிப் போராடும் போராளிகளின் கூட்டத்தில் ஒருவராகத்தான் இருந்தார். ஷியாம் சந்திர சக்கரவர்த்தி, அரவிந்த கோஷ் போன்ற வீரர்களின் நண்பராக இருந்தார். பல முஸ்லிம்களின் எண்ணத்திற்கு எதிராக வங்காளப் பிரிவினையை அவர் எதிர்த்தார்.

அமிர்தஸர் நகரில் இயங்கிக்கொண்டு இருந்த வக்கீல் என்ற செய்தித்தாளில் ஆசாத் பணியாற்றினார். பின்னர் 1912ஆம் ஆண்டு அல் ஹிலால் என்ற உருது மொழி நாளிதழை தொடங்கினார். அதில் தொடர்ந்து  ஆங்கில ஆட்சியை எதிர்த்தும், ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதின் அவசியம் பற்றியும் எழுதிக்கொண்டு இருந்தார். முதலாம் உலகப் போர் தொடங்கியதை அடுத்து ஆங்கில அரசு இந்தப் பத்திரிகையை தடை செய்தது. சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல ஆசாத் அல் பலாஹ் என்ற பத்திரிகையை ஆரம்பித்து ஆங்கில ஆட்சியைத் தாக்கி எழுதலானார். வழக்கம் போல ஆங்கில அரசு இவரை கைது செய்து ராஞ்சி சிறையில் அடைத்தது. மும்பை, பஞ்சாப், டெல்லி, ஆக்ரா ஆகிய மாகாணங்கள் தங்கள் எல்லைக்குள் ஆசாத் வரக்கூடாது என்று ஆணை பிறப்பித்தது.

சிறைவாசம் முடித்து ஆசாத் விடுதலையாகும் சமயம் பாரதத்தின் அரசியல் களம் மொத்தமாக மாறி இருந்தது. அடக்குமுறையின் உச்சமாக ரௌலட் சட்டம் அமுலில் இருந்தது. ஜாலியன்வாலாபாக் நகரில் அப்பாவி பொதுமக்களை காக்கை குருவி சுடுவது போல அரசு சுட்டுக் தள்ளி இருந்தது. அரசியல் களத்தின் தலைமை சந்தேகமே இல்லாமல் காந்தியின் கையில் வந்து சேர்ந்திருந்தது. ஆசாத் காந்தியின் நெருங்கிய தோழரும் தொண்டருமாக உருவானார். அன்னியத் துணிகளைத் துறந்து ராட்டை சுற்றி, நூல் நூற்று காந்தியோடு ஆசிரமங்களில் தங்கி எளிய வாழ்க்கை வாழ்ந்து என்று ஆசாத் முழுவதுமாக மாறிப் போனார். காந்திக்கு மட்டுமல்ல ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, நேதாஜி ஆகிய தலைவர்களின் தோழராகவும், நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் ஆசாத் அறியப்படலானார்.

1922ஆம் ஆண்டு ஆசாத் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் கட்சிக்கு புது தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவது வழக்கம். மிக இளைய வயதில் தேர்வான தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆசாத். மீண்டும் 1940ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜின்னா சுதந்திரம் அடையும் சமயத்தில் நாடு மதரீதிரியாகப் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்திருந்த நேரம் அது. அந்த குரலுக்கு முஸ்லீம் மக்கள் பலரின் ஆதரவும் இருந்தது.ஆனால் கணிசமான இஸ்லாமியர்கள் அதனை எதிர்த்து நின்றதும் வரலாறு. அதில் முக்கியமான குரல் ஆசாத்தின் குரல்.

" இந்த நாட்டு மக்களின் மதமாக ஹிந்து மதம் பல்லாயிரம் ஆண்டுகளாக விளங்குகிறது, அது போலவே ஆயிரம் ஆண்டுகளாக இஸ்லாம் மதமும் இந்த நாட்டின் மக்களின் மதமாக உள்ளது. நான் ஹிந்து மதத்தைப் பின்பற்றும் இந்தியன் என்று பெருமையோடு கூறுவது போல, நான் இஸ்லாம் மார்கத்தைப் பின்பற்றும் பாரதீயன் என்றும் நான் கிறிஸ்துவை வழிபடும் இந்தியன் என்று பெருமையோடு கூறலாம். நமது வழிபாடு முறைகள்தான் வேறுபட்டு உள்ளது, ஆனால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்களே" இது ஆசாத் அளித்த தலைமையுரையில் ஒரு பகுதி.

தவிர்க்க முடியாமல் நாடு மதத்தின் அடிப்படையில் துண்டாடப் பட்டது. இஸ்லாமின் பிறப்பிடமான மெக்கா நகரில் பிறந்த அபுல் கலாம் ஆசாத் உள்பட பல இஸ்லாமியர்கள் பாரத நாட்டிலேயே இருப்பது என்ற முடிவை எடுத்தனர். ஆசாத் நேருவின் நண்பராகவும், உற்ற தோழராகவும், அமைச்சரவை சகாவாகவும் விளங்கினார். நாட்டின் கல்வி அமைச்சராக அவர் பணியாற்றினார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஐ ஐ டிகள் போன்ற பல கல்வி நிறுவனங்கள் அவரின் முயற்சியால் உருவானவைதான். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் கல்விக்காக பெரிதாக எதுவும் செய்யவில்லை. விடுதலை அடையும் சமயத்தில் மக்களில் கல்வி பெற்றவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. தொடக்கக்கல்வி, முதியோர் கல்வி, பெண்கள் கல்வி, தொழிற்கல்வி என்று பல்வேறு தளங்களில் பெரும் சவால்களை ஆசாத் எதிர்கொண்டு நாட்டின் கல்வித் திட்டத்தை வடிவமைத்தார்.

அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளை நாடு தேசிய கல்வி நாளாக அனுசரிக்கிறது.

திங்கள், 10 நவம்பர், 2025

நவம்பர் 10 - முதுபெரும் தலைவர் சுரேந்திரநாத் பானர்ஜி பிறந்ததினம்

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அன்னியர்கள் ஆட்சியை எதிர்த்துப் போராடியதுதான் பாரத நாட்டின் உண்மையான வரலாறு. தொடர் ஓட்டம் போல அந்தந்த காலகட்டத்தில் வெவ்வேறு தேசபக்தர்கள் தோன்றி சுதந்திர கனலை அணையவிடாமல் தகுதியான அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்கி அவர்கள் வசம் அந்த புனிதப் பணியை விட்டுவிட்டுச் சென்ற நெடிய வரலாறு நம் தேசத்தின் வரலாறு. அவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்காளத்தில் தோன்றிய முதுபெரும் தலைவர் சுரேந்திரநாத் பந்தோபாத்யாவின் பிறந்ததினம் இன்று.



 கொல்கத்தா நகரில் வசித்துவந்த துர்காசரண் பானர்ஜி என்ற மருத்துவரின் மகனாக 1848ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் பிறந்தவர் சுரேந்திரநாத் பானர்ஜி. கொல்கத்தா நகரில் இன்று மாநிலக் கல்லூரி என்று அறியப்படும் ஹிந்து கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த சுரேந்திரநாத் பானர்ஜி 1868ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை எழுத லண்டன் சென்றார். 1869ஆம் ஆண்டு அந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் அவர் வயதில் எழுத சர்ச்சையால் ஆங்கில அரசு அவரின் வெற்றியை செல்லாது என அறிவித்தது. எனவே மீண்டும் 1871ஆம் ஆண்டு அதே தேர்வை எழுதி வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து ஆங்கில அரசு அவரை இன்று பங்களாதேஷ் நாட்டில் இருக்கும் சில்ஹெட் நகரின் உதவி ஆட்சித் தலைவராக நியமித்தது. ஆனால் மிகச் சிறிய தவறை காரணம் காட்டி அரசு அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது. பாரத மக்கள் யாருக்கும் ஆட்சி செய்யும் தகுதி இல்லை என ஆங்கில அரசின் கருத்துதான் இதற்கான பின்புலம். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சுரேந்திரநாத் பானர்ஜி மீண்டும் லண்டன் சென்றார். ஆனால் அவருக்கு ஆங்கில ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை. ஆனால் லண்டன் நகரில் தங்கியிருந்த காலத்தில் அவர் படித்த புத்தகங்கள் அவரின் சிந்தனைப் போக்கை மாற்றி அமைத்தது.

1875ஆம் ஆண்டு நாடு திரும்பிய பானர்ஜி வித்யாசாகர் கல்லூரி ( மெட்ரோபாலிட்டன் கல்லூரி ) ஸ்காட் சர்ச் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் அவர் ரிப்பன் கல்லூரி என்ற என்ற கல்வி நிலையத்தை நிறுவினார். இன்று அது சுரேந்திரர்நாத் பானர்ஜி கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. 1876ஆம் ஆண்டு அவர் இந்திய தேசிய இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் கூட்டங்களில் மதங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள், நாட்டின் முன்னேற்றத்திற்க்காக நாம் அனைவரும் இணைத்து செயல் புரிய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசினார்.

1879ஆம் ஆண்டு பெங்காலி என்ற ஆங்கிலப் பத்திரிகையை நிறுவினார். அதன் அவர் எழுதிய தலையங்கம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்டார்.அவரை விடுதலை செய்யக் கோரி வங்காளத்தில் மட்டுமல்லாமல் டெல்லி, ஆக்ரா, பூனா, லாகோர் ஆகிய நகரங்களிலும் கடையடைப்பு நடைபெற்றது என்றால் அவரது ஆளுமையை நாம் புரிந்துகொள்ளலாம். பானர்ஜி உருவாக்கிய இந்திய தேசிய இயக்கம் வருடம்தோறும் அந்த ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தை நடத்துவது வாடிக்கையாக இருந்தது.

ஒத்த கருத்தோடு உருவான இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் பானர்ஜி தனது இயக்கத்தை 1886ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டார். 1895 மற்றும் 1902ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகள் இவர் தலைமையில்தான் நடைபெற்றது. 1905ஆம் ஆண்டு கார்ஸன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். அதனை எதிர்த்து முழுமூச்சில் சுரேந்திரநாத் பானர்ஜி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அடுத்த தலைமுறை தலைவர்களாக உருவான கோபால கிருஷ்ண கோகுலே, சரோஜினி நாயுடு ஆகியோரின் குருநாதராக சுரேந்த்ரநாத் பானர்ஜி விளங்கினார். பானர்ஜி மிதவாதிகளின் தலைவராக இருந்தார். அந்நிய துணி மறுப்பு, சுதேசி இயக்கம் ஆகியவைகள் அவர் முன்னெடுத்த முக்கியமான செயல்களாகும். அன்றய வங்காளத்தின் முடிசூடா மன்னர் என அவர் புகழப்பெற்றார்.

போராட்ட களம் மனுக்களை எழுதி, அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் மிதவாதிகள் கையில் இருந்து பால கங்காதர திலகர்,  லாலா லஜபதி ராய் போன்ற தீவிர செயல்பாட்டில் நம்பிக்கை வைத்த தலைவர்கள் கைக்கு மாறியது. பல்வேறு இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்ட வீரர்கள் தோன்ற ஆரம்பித்தனர். தென்னாபிரிக்கா நாட்டில் இருந்து காந்தி பாரதம் வந்தார். காட்சிகள் மாறின, காலங்கள் மாறின, மக்களின் எண்ணம் மாறியது. மிண்டோ மார்லி சீர்திருத்தங்களை பானர்ஜி வரவேற்றார். ஆனால் பெருவாரியான மக்கள் அந்த சீர்திருத்தங்களால் எந்தப் பயனும் இல்லை என்று எண்ணினார்கள். காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் பலன் தராது என்றும் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று பானெர்ஜி கூறினார். பல்வேறு புதிய தலைவர்கள் அரசியல் வானில் சுடர்விட்டுப் பிரகாசிக்க, பானர்ஜி மெல்ல மெல்ல தனது முக்கியத்தை இழந்தார். 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் நாள் சுரேந்தர்நாத் பானர்ஜி காலமானார்.

பெரும் கட்டிடங்களின் அஸ்திவாரங்கள் வெளியே தெரிவதில்லை, ஆனால் அவை இல்லாமல் கட்டிடங்கள் இல்லை. அதுபோல பாரத நாட்டின் ஆங்கில அரசை எதிர்த்து நடந்த போராட்டங்களில் சுரேந்திரநாத் பானர்ஜி போன்றவர்களின் ஆரம்பகால செயல்பாடு இல்லாமல் இருந்திருந்தால், சுதந்திரம் இன்னும் பல பத்தாண்டுகள் பின்னால் சென்றிருக்கும் என்பதுதான் உண்மை.

நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேந்திரநாத் பானர்ஜிக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கத்தையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறது. 

புதன், 5 நவம்பர், 2025

நவம்பர் 5 - தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் பிறந்ததினம்

பாரத நாட்டின் மறுமலர்ச்சி அலை என்பது முதலில் வங்காளத்தில்தான் தொடங்கியது. பெரும் அறிவாளிகளும், கவிஞர்களும், சிந்தனையாளர்களும், வழக்கறிஞர்களும்,  தத்துவ ஞானிகளும் விடுதலைப் போராட்ட வீரர்களும் என்று அலையலையாக தோன்றி பாரதத்தின் பாதையை வங்காளிகளே சமைத்தனர். வங்காளத்தில் தோன்றிய விடுதலைப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் சித்தரஞ்சன் தாஸ். தேசத்தின் தேச மக்களின் நண்பர் என்ற பொருள்படும் தேசபந்து என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் அவர்.


இன்றய பங்களாதேஷ் நாட்டில் உள்ள டாக்கா நகரில் பூபன் மோகன் தாஸ் - நிஷாரிணி தேவி தம்பதியரின் 1870ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் நாள் பிறந்தவர் சித்தரஞ்சன் தாஸ். தனது சகோதர்கள் அடியொற்றி சித்தரஞ்சன் தாஸும் வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்காக லண்டன் மாநகரம் சென்றார். அன்றய லண்டன் நகரம் பாரத நாட்டின் தேசபக்தர்களை உருவாக்கும் இடமாகவும் இருந்தது. லண்டன் நகரில் அரவிந்த கோஷ், சரோஜினி நாயுடு, அதுல் பிரசாத் சென் ஆகிய தேசபக்தர்கள் நட்பு சித்தரஞ்சன் தாஸுக்கு ஏற்பட்டது.

வழக்கறிஞர் பட்டம் பெற்று நாடு திரும்பிய சித்தரஞ்சன் தாஸ் வங்காளத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞராக உருவானார். நீதிபதி கிங்ஸ்போர்ட என்பவரை கொலை செய்ய நடந்த முயற்சியை விசாரிக்கும் அலிப்பூர் சதி வழக்கில் அரவிந்த கோஷுக்கு வாதாடி வெற்றி பெற்று அவரை சிறைத்தண்டனையில் இருந்து தாஸ் விடுவித்தார். அன்றய வங்காளத்தில் இயங்கிக்கொண்டு இருந்த அனுசீலன் சமிதியின் செயல்பாடுகளுக்கு சித்தரஞ்சன் தாஸ் மிகவும் உதவிகரமாக இருந்தார்.

அதனைத் தொடர்ந்து காந்தியின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்ட சித்தரஞ்சன் தாஸ் அன்னியத் துணி பகிஷ்கரிப்பு, கதர் துணியை ஆதரித்தல், ஒத்துழையாமை இயக்கம் என்று போராடத் தொடங்கினார். சட்டமன்றங்களில் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற கருத்துக்கு எதிராக காந்தி இருந்ததால் மோதிலால் நேருவுடன் இணைந்து ஸ்வராஜ்யா கட்சியை தாஸ் ஆரம்பித்தார். கொல்கத்தா மாநகராட்சி அமைக்கப்பட்ட போது, தேர்தலில் போட்டியிட்டு அதன் முதல் மேயராகப் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் சித்தரஞ்சன் தாஸின் சீடராகவும், உதவியாளராகவும் இருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்.

தாஸின் மனைவி பஸந்தி தேவி  அம்மையார். தன்னளவிலேயே அவரும் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக விளங்கினார். 1921ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு பஸந்தி தேவியும் சித்தரஞ்சன் தாஸின் சகோதரி ஊர்மிளா தேவியும் கைதானார்கள். பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு குறிப்பாக சுபாஷ் சந்திரபோஸுக்கு அவர் காட்டிய பாசம் பலர் பஸந்தி தேவியை தங்கள் தாயாகவே எண்ண வைத்தது.

சித்தரஞ்சன் தாஸ் மிகச் சிறந்த கவிஞரும் கூட. அவரது கவிதைகள் சாகர் சங்கீத் என்ற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு உள்ளது. அரவிந்தர் வங்காள மொழியில் அமைந்த இந்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

சுதந்திரம் என்ற பெயரில் நாளிதழையும் நாராயணா என்ற பெயரில் நாளிதழ் ஒன்றையும் சித்தரஞ்சன் தாஸ் நடத்திவந்தார். பிபின் சந்திர பால், சரத்சந்திர சட்டோபாத்யாய, ஹரிப்ரசாத் சாஸ்திரி உள்ளிட்ட வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் இந்த பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தார்கள்.

தொடர்ச்சியான செயல்பாட்டால் சித்தரஞ்சன் தாஸின் உடல்நலம் சீர்கெட்டது. ஓய்வெடுக்கவும் உடல்நலத்தைப் பேணவும் அவரை மலைப்பிரதேசத்தில் சிறுது காலம் இருக்கச் சொல்லி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். சித்தரஞ்சன் தாஸ் டார்ஜலிங் நகருக்குச் சென்றார். 1925ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் டார்ஜிலிங் நகரில் தாஸ் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் கொல்கத்தா நகரில் நடைபெற்றது. சித்தரஞ்சன் தாஸின் இறுதி ஊர்வலம் காந்தியின் தலைமையில் நடந்தது.

தனது சொத்துக்களை எல்லாம் நாட்டு மக்களுக்கு எழுதி வைத்திருந்தார் சித்தரஞ்சன் தாஸ். அவர் அளித்த நிலத்தில் இன்று சித்தரஞ்சன் தாஸ் புற்றுநோய் மருத்துவமனை இயங்கி வருகிறது.
ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளே வாழ்ந்தாலும் அதற்குள் மகத்தான சேவைகளை புரிந்த தலைவரை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது. 

செவ்வாய், 4 நவம்பர், 2025

நவம்பர் 4 - தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் பிறந்ததினம்



தாளாற்றித் தந்த  பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள் 212.

அறத்தின் வழிநின்று ஒருவன் ஈட்டிய பொருள் எல்லாம் தகுதியானவர்களுக்கு, தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்கே ஆகும். சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் பிரதமர் மோதி சுட்டிக் காட்டிய குறள் இது. இதன்படி வாழ்ந்த பெருமகனார் தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் அவர்கள்.

கனிராம் பிரடிபாய் தம்பதியரின் மூன்றாவது மகனாக ராஜஸ்தான் மாநிலத்தில் காசி கா பாஸ் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஜம்னாலால். இயல்பாகவே தொழில்முனைவோர்களான மார்வாடி வகுப்பைச் சேர்ந்தவர் இவர். வசதியான குடும்பத்தைச் சாராத ஜம்னாலாலை பஷிராஜ் - சாதிபாய் தம்பதியினர் தங்கள் வாரிசாக தத்து எடுத்துக் கொண்டனர். ராஜஸ்தானைச் சார்ந்த இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தாவில் வசித்து வந்தனர்.

சேத் பஷிராஜ் மேற்பார்வையில் ஜம்னாலால் வியாபார நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். சரியான நேரத்தில் சரியான விலையில் பொருள்களை வாங்கவும், அதனை லாபத்தில் விற்கவும், அதற்கான கணக்குகளை பராமரிக்கவும் திறமைசாலியாக விளங்கினார். ஜம்னாலால் தொடங்கிய தொழில்கள்தான் இன்று பஜாஜ் குழுமமாக பரந்து விரிந்து நிற்கிறது.

பொதுவாகவே வியாபாரிகளும் தொழிலதிபர்களும் கூடியவரை அரசைப் பகைத்துக் கொள்ளாமலே இருப்பார்கள். ஜம்னாலாலும் அப்படிதான் இருந்தார். முதல் உலகப் போரில் அவர் ஆங்கில அரசுக்கு அளித்த ஒத்துழைப்பை அங்கீகாரம் செய்யும் விதமாக அரசு அவரை கவுரவ நீதிபதியாக நியமித்தது. ஜம்னாலாலுக்கு ராவ் பகதூர் என்ற பட்டத்தையும் அளித்தது.

திலகர், கோகுலே இவர்களின் சகாப்தம் முடிந்து காந்தியின் காலம் தொடங்கிய நேரம் அது. ஜம்னாலால் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அஹிம்சை, தாழ்த்தப்பட்ட சகோதர்களின் நல்வாழ்வு, எளிய வாழ்க்கை என்ற கொள்கைகளை அந்த தொழிலதிபர் பேசவில்லை, செயல்படுத்தத் தொடங்கினார். காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் தன் குடும்பத்தினரோடு வாழ ஆரம்பித்தார்.

காந்தியின் நெருக்கம் ஜம்னாலாலை ஆங்கில அரசு அளித்த ராவ் பகதூர் பட்டத்தையும் கௌரவ நீதிபதி பதவியையும் துறக்கத் தூண்டியது. அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம், கொடி சத்தியாகிரக போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு ஜம்னாலால் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

காந்தி சேவா சங்கத்தின் தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு  உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பல்லாண்டு பொறுப்பு வகித்தார்.

தேசத்தின் புனர்நிர்மாணப் பணி என்பது ஹரிஜன சகோதர்களை விட்டு விட்டு நடக்க முடியாது என்பதை உளப்பூர்வமாக நம்பிய ஜம்னாலால் தங்கள் குடும்ப கோவிலை ஹரிஜன மக்களின் தரிசனத்திற்காக திறந்து விட்டார். பல்வேறு கோவில்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவரின் தொடர்ந்த முயற்சியால் திறக்கப்பட்டது. பல்வேறு குளங்களிலும், கிணறுகளிலும் ஹரிஜன சகோதர்கள் பயன்பாட்டுக்கு இருந்த தடை நீங்கியது.

தென்னக மக்களும் ஹிந்தி மொழியைப் படிக்க வேண்டும் என்பதற்காக தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சாரக் சபா என்ற அமைப்பை ஜம்னாலால் நிறுவினார். கதர் துணி உற்பத்தி, கைத்தொழில் வழியாக கிராம முன்னேற்றம் ஆகிய துறைகளில் ஜம்னாலால் தொடர்ந்து இயங்கி வந்தார்.

தொழிலில் தனது பங்கு முழுவதையும் ஆதாரமாகக் கொண்டு ஜம்னாலால் பஜாஜ் தொண்டு நிறுவனம் என்ற அமைப்பை நிறுவினார். இந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்களை வழக்கறிஞர் என்ற முறையில் காந்திதான் எழுதினார் என்றால் காந்திக்கு ஜம்னாலால் மீதான அன்பும் மரியாதையும் புலனாகிறதுதானே.

தனது நான்கு குழந்தைகளோடு ஜம்னாலால் பஜாஜை காந்தி தனது ஐந்தாவது மகனாகவே நடத்திவந்தார். "நான் தர்மகர்த்தா முறையில் பாரத தொழிலதிபர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எழுதும் போதெல்லாம் என் கண்ணில் நிழலாடுவது இந்த தொழில்துறை இளவரசர்தான்" என்று ஜம்னாலாலைப் புகழ்ந்து அவரின் இறப்பிற்குப் பின்னர் காந்தி எழுதி உள்ளார்.

தனது ஐம்பத்தி ஏழாவது வயதில் 1942ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் ஜம்னாலால் பஜாஜ் காலமானார்.

ஜம்னாலால் பஜாஜ் தொடங்கிய நிறுவனங்கள் இன்று பல்வேறு தொழில்களில் காலூன்றி பஜாஜ் குழுமமாக உருவாகி உள்ளது. 


ஞாயிறு, 26 அக்டோபர், 2025

அக்டோபர் 26 - புரட்சிவீரர் மன்மதநாத் குப்தா நினைவுநாள் -

அக்டோபர் 26, வருடம் 2000. அது ஒரு தீபாவளி திருநாள். பதின்ம வயதிலேயே  சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அந்நிய ஆட்சியை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி அதனால் தனது நாற்பதாம் வயதுக்குள் இருபதாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பெரும் போராளி தீபவரிசை நாட்டை அலங்கரித்து வழியனுப்ப தொண்ணுற்றி ஒன்றாம் வயதில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட நாள் இன்றுதான்.



"எங்களை புரட்சியாளர்கள் என்று மக்கள் சொல்கிறார்கள், ஆனால் உண்மையில் நாங்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யத் துணிந்த சாதாரண மனிதர்கள்தான்" என்று கூறிய மன்மதநாத் குப்தாவின் நினைவுநாள் இன்று.

வங்காளத்தை தங்கள் பூர்விகமாகக் கொண்ட, வாரணாசியில் வசித்து வந்த  வீரேஸ்வர் குப்தாவிற்கு மகனாக 1908ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் நாள் பிறந்தவர் மன்மதநாத் குப்தா. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் மன்மதநாத். 1921ஆம் ஆண்டு அன்றய வேல்ஸ் இளவரசரான எட்டாம் எட்வர்ட் வருகையை ஒட்டி வாரணாசியில் மன்னர் வரவேற்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் மக்களைக் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறி அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கும் துண்டு பிரசுரங்களை 13 வயதான மன்மதநாத் விநியோகிக்கும் செய்துகொண்டு இருந்தார். அரசுக்கு எதிரான நடவடிக்கை என்று அன்றய காவல்துறை அவரை கைது செய்தது. மூன்று மாத சிறைவாசம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விடுதலைப் போருக்கும், சிறைவாழ்வுக்கும் மன்மதநாத் குப்தாவுக்குமான நீண்ட உறவு அன்றுதான் தொடங்கியது.

விடுதலையாகி வந்த மன்மதநாத் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தி அழைப்பு விடுத்தார். ஆனால் சவுரி சவுராவில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து போராட்டத்தை காந்தி திரும்பப் பெற்றார். மனம் வெறுத்த இளைஞர்கள் தீவிரவாத நடவடிக்கைதான் சரியாக இருக்கும் என்று எண்ணத் தலைப்பட்டனர். பலர் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் அஸோஸியேஷன் என்ற அமைப்பில் இணைந்தனர். ராம் பிரசாத் பிஸ்மி, அஷ்பாகுல்லாகான், சந்திரசேகர ஆசாத், பகத்சிங் என்ற பெரும் வீரர்கள் ஒரே அணியாகத் திரண்டனர். அவர்களில் ஒருவராக மன்மதநாத் குப்தாவும் இருந்தார்.

போராட்டத்திற்கு ஆயுதம் வேண்டும், ஆயுதம் வாங்கப் பணம் வேண்டும், பணத்தை ஆங்கில ஆட்சியிடமே கொள்ளை அடிக்கலாம் என்ற திட்டம் உருவானது. அரசின் பணத்தோடு வந்த புகைவண்டி ஒன்றை ககோரி என்ற இடத்தில் வீரர்கள் கொள்ளை அடித்தனர். ஆனால் ஆட்சியாளர்களின் கைகள் புரட்சிவீரர்கள் பலரை கைது செய்தது. மன்மதநாத் குப்தாவும் கைதானார். பதினெட்டு வயதை எட்டவில்லை என்பதால் பதினாலு ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1937ஆம் ஆண்டு விடுதலையான மன்மதநாத் மீண்டும் ஆங்கில ஆட்சியை எதிர்த்து எழுதத் தொடங்கினார். 1939ஆம் ஆண்டு மீண்டும் சிறை, இந்தமுறை அந்தமான் சிறைக்கொட்டடியில், எட்டாண்டுகள் கழித்து 1946ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். முப்பத்தி எட்டு வயதுக்குள் சரிபாதி வாழ்வை சிறையில் கழித்த வீரர் மன்மதநாத்.

சுதந்திரம் அடைந்த நாட்டில் மன்மதநாத் எழுத்தாளராக உருமாறினார். ஏறத்தாழ நூற்றி இருபது புத்தகங்களுக்கு மேலாக அவர் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் வங்காள மொழியில் எழுதியுள்ளார். கத்தியின்றி ரத்தமின்றி கிடைக்கவில்லை சுதந்திரம் என்பது, அதில் ஆயுதம் தாங்கி போராடிய வீரர்களின் பங்கு மிகப் பெரியது என்ற உண்மையை போராளிகளின் பார்வையில் இருந்து அவர் பதிவு செய்து உள்ளார். அவர்கள் அபாயகரமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் ( They lived dangerously ) என்ற அவரது புத்தகம் அன்றய விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வை பதிவு செய்துள்ளது. சந்திரசேகர ஆசாத், காந்தியும் அவர் காலமும், பகத்சிங்கும் அவர் காலமும், விடுதலைப் போராட்டத்தில் போராளிகளின் வரலாறு என்பவை அவர் எழுதிய முக்கியமான நூல்களில் சில.

செய்தி ஒளிபரப்பு துறையில் பணியாற்றிய மன்மதநாத் குப்தா திட்டக்குழுவின் சார்பில் பல்வேறு புத்தகங்களை / கையேடுகளை எழுதி வெளியிட்டுள்ளார். பால பாரதி என்ற சிறுவர் பத்திரிகை மற்றும் ஆஜ்கல் என்ற இலக்கிய பத்திரிகை மற்றும் திட்டக்குழுவின் சார்பில் வெளியான யோஜனா ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் மன்மதநாத் குப்தா இருந்தார்.

நாட்டின் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட தியாகிகளில் ஒருவரான மன்மதநாத் குப்தா 2000ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் நாள் இந்திய மண்ணோடு கலந்தார்.

விடுதலை வீரர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்கள் 

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

அக்டோபர் 19 - நாமக்கல் கவிஞர் பிறந்தநாள்

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு.
தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா 

இன்று திராவிட இயக்கத்தினராலும், தமிழ்த்தேசியவாதிகளாலும் அடிக்கடி கூறப்படும் இந்த சொற்தொடர்கள் ஒரு தேசியவாதியால் எழுதப்பட்டவை என்பது பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம். 



தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர், தேசியப் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டவர், மஹாகவி பாரதியால் பாராட்டப்பட்டவர், மூதறிஞர் ராஜாஜியின் தோழர், சிறந்த ஓவியர், உப்பு சத்யாகிரஹப் போரில் "கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஓன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்" என்ற வழிநடைப் பாடலை எழுதியவர் என்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் நாமக்கல் கவிஞர் என்னும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள். 

1888ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாள் காவல்துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த வெங்கடராம பிள்ளை - அம்மணி அம்மாள் தம்பதியினரின் எட்டாவது மகனாகப் பிறந்தவர் ராமலிங்கம் பிள்ளை. ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு ராமேஸ்வரத்தில் பிரார்தனை செய்து அதன் பலனாகப் பிறந்ததால் இவருக்கு ராமலிங்கம் என்று பெயரிட்டார்கள். சிறுவயதிலேயே இதிகாச புராணங்களை சொல்லி இவர் தாயார் வளர்த்தார். 

தொடக்கக்கல்வியை நாமக்கல்லிலும், பின்னர் கோவையிலும், கல்லூரிப் படிப்பை திருச்சியிலும் பயின்றார். 1909ஆம் ஆண்டு தனது அத்தை மகளை மணந்து கொண்டார். இயற்கையிலேயே ஓவியம் வரையும் திறமை இவருக்கு இருந்தது. இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியத்தை பார்த்து மகிழ்ந்த மன்னரின் குடும்பம் இவருக்கு தங்கப்பதக்கம் ஒன்றை பரிசளித்து பாராட்டியது. 

1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய “கத்தியின்றி” பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது “சுதந்திரச் சங்கு” பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

காரைக்குடிக்கு பாரதியார் வந்திருப்பதாக அறிந்த நாமக்கல் கவிஞருக்கு பாரதியாரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஓவியம் வரைவதிலும் கெட்டிக்காரர் என்று பாரதியாருக்கு நாமக்கல் கவிஞரை அறிமுகப்படுத்தினர். கவிதையும் எழுதுவார் என்று குறிப்பிட்டனர். கவிதை ஒன்று சொல்லுமாறு பாரதியார் கேட்டார். எஸ்.ஜி.கிட்டப்பா நாடகத்துக்காக தாம் எழுதிக் கொடுத்த ‘தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்’ என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். பாடல் முழுவதையும் கேட்ட பாரதியார், ‘பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்... பலே, பலே இந்த ஓர் அடியே போதும்’ என்று பாராட்டித் தட்டிக் கொடுத்தார்.

1932ஆம் ஆண்டில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட நாமக்கல் கவிஞர், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.1937ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். கவிஞர் சேலம் நகராட்சி உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து கவிஞரின் காங்கிரஸ் பணி தீவிரமானது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு ‘பத்மபூஷன்’ விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய “மலைக்கள்ளன்” எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடித்த இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்ற ஒன்றாகும்.

சூரியன் வருவது யாராலே ?
சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?
பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

அல்லா வென்பார் சிலபேர்கள் ;
அரன் அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’
என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லாமிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்

எதைக் கேட்டாலும் இல்லையில்லை என்றும் சொல்லும் கண்மூடித்தனமான நாத்திகத்தையே பகுத்தறிவு என நினைக்கும் பலரின் மத்தியில் உண்மையான பகுத்தறிவு என்ன என்பதை விளக்கிட இதைவிடத் தெளிவான வெளிப்பாடு ஒன்று இருக்குமா எனத் தெரியவில்லை. பகுத்தறிவு மட்டுமல்லாமல், எல்லா மதங்களும் கூறும் உயர்வான பரம்பொருள் ஒன்றே என்பதையும் தெள்ளத்தெளிவாக விளக்கும் கவிதை இதுவே.

இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணி அளவில்  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தமிழ் கவிதைகளை ரசிப்பவர்கள் உள்ளமட்டும் நாமக்கல் கவிஞரும் உயிரோடுதான் இருப்பார்.

சனி, 4 அக்டோபர், 2025

அக்டோபர் 4 - வீரத் துறவி சுப்ரமணிய சிவா பிறந்ததினம்

வரலாற்றைப் பதிவு செய்து வைப்பது என்பது நமது மரபணுக்களிலேயே இல்லாத ஓன்று என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது. அதனால்தான் தகுதியில்லாதவர்களை தலைவர்களாக நாம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். கொண்டாடப்பட வேண்டியவர்களை நம் நினைவில்கூட இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதுபற்றிய சிந்தனையே இல்லாமல் நாமும் பிழைத்துக்கொண்டு இருக்கிறோம். 

பாரதநாட்டின் விடுதலைப் போராட்ட வரலாறு என்பது இன்னும் எழுதி முடிக்கப்படாத மஹாகாவியமாகும். எண்ணற்ற தேசபக்தர்களின் பெயர்கள் கூட இன்னும் அதில் முழுமையாகச் சேர்க்கப்படவில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளை பற்றிய வரலாறு ஆவணப்படுத்தப்படவில்லை. பலரைப் பற்றிய தகவல்கள் ஒப்புக்கு சேர்க்கப்பட்டுள்ளதே அன்றி முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படவில்லை. 

வரலாற்றின் பக்கங்களில் புதைந்து போய் இருக்கும் தியாகி சுப்ரமணியசிவத்தின் பிறந்தநாள் இன்று. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் தேசபக்தி கனலை மூட்டிய மூவேந்தர்கள் பாரதி, சிதம்பரம், சிவம் என்ற மூவர்தாம். சுதந்திரப் போராட்ட வீரராக, பத்திரிகையாளராக, சுதேச கிளர்ச்சியாளராக, சமூக சீர்திருத்தவாதியாக, தமிழ் ஆர்வலராக, தனித்தமிழ் முயற்சியின் ஆரம்பப்புள்ளியாக, சந்நியாசியாக, செத்த பிணத்தையும் எழுந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட வைக்கும் வல்லமைகொண்ட சொற்பொழிவாளராக என்ற பன்முக ஆளுமையாளர் சுப்ரமணிய சிவம்.   




சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884 ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார்...இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார். பின்னர் கோயம்புத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் (அவற்றில் ஒன்று கூட இப்பொது நமக்கு கிடைக்கவில்லை )... 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை

1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த தாவுர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார். இதனை கேட்ட சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூவுர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியெற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்து வந்தார்.

இரும்பு காந்தத்தை ஈர்ப்பதுபோல தேசபக்தி வ உ சிதம்பரம் பிள்ளை, பாரதி, சுப்ரமணிய சிவாவை ஒன்றாகப் பிணைந்தது. வ உ சி கப்பல் மற்றும் ஓட்டவில்லை, தொழிலார்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களையும் அவர் முன்னெடுத்தார். அவருக்கு உறுதுணையாக தனது பேச்சாற்றலால் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி போராட்டத்திற்கு தூண்டும் பணியை சிவம் செய்தார். தேசபக்தர்களை சிறையில் அடைத்து அவர்களுக்கு ஆங்கில அரசு மரியாதை செலுத்தியது. மாட்சிமை பொருந்திய மன்னரின் ஆட்சியை எதிர்த்த குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை, சிவத்தை ஆதரித்து உணவளித்து, இடமளித்த குற்றத்திற்காக சிதம்பரம் பிள்ளைக்கு இன்னும் ஒரு ஆயுள் தண்டனை, என்று இரட்டை ஆயுள் தண்டனை அதனை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கவேண்டும் என்று தீர்ப்பானது. 

" நான் ஒரு சந்நியாசி, முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வது என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி, அதனை அடையும் மார்க்கத்தை போதிப்பது என் வேலை. சகலவிதமான வெளிபந்தங்களில் இருந்தும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். 

இதே போன்று ஒரு தேசத்தின் முக்தியாவது அந்நிய நாடுகளின் பிடிப்பில் இருந்து விடுவித்துக் கொள்வது, பரிபூரண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாடு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது சுதேச கல்வி, சுதந்திர லட்சியம், அதை அடையும் மார்க்கம், சுதந்திரப் பாதையில் நிற்கும் எதையும் சாத்வீக முறையில் எதிர்ப்பது, புறக்கணிப்பது இவையே ஆகும்". இது நீதிமன்றத்தில் சுப்ரமணிய சிவா அளித்த வாக்குமூலம். 

விசாரணை முடிந்தது. சிவாவுக்கு 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட சிவா, கம்பளி மயிர் வெட்டும் பணியிலும், மாவு அரைக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டார். இதுவே, அவருக்குப் பின்னாளில் தொழுநோயாக  மாறியது. 

சிறையில் இருந்து விடுதலையான சிவம் ஞானபானு என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அன்றய தமிழ் கவிஞர்கள் நிலையை, பணத்திற்காக செல்வந்தர்களை தகுதிக்கு மேலாக அவர்கள் புகழுவதை கிண்டல் செய்யும் விதத்தில் பாரதி எழுதிய சின்ன சங்கரன் கதை இந்தப் பத்திரிகையில்தான் வெளியானது. பாரதி, வ உ சி, வ வே சு ஐயர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஞானபானு இதழில் தொடர்ந்து எழுதினார்கள். 

திருவளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல்லறிவு வீரம்
மருவுபல் கலையின் வல்லமை என்பவெல்லாம்
வருவது ஞானத்தாலே வையகமுழுதுமெங்கள்
பெருமைதான் நிலவிநிற்கப் பிறந்தது ஞானபானு

கவலைகள் சிறுமை நோவு கைதவம் வறுமைத்துன்பம்
அவலமாமனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமையச்சம்
இவையெல்லாம் அறிவிலாமை என்பதோர் இருளிற்பேயாம்.
நவமுறு.ஞானபானு நண்ணுக, தொலைக பேய்கள்

அனைத்தையும் தேவர்க்காக்கிஅறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்புத் தெய்வம்
தினத்தொளி ஞானம் கண்டிர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடிவாழ்வர் மனிதர் என்றிவைக்கும் வேதம்

பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கு மாங்கே,
எண்ணிய எண்ணமெல்லாம் எளிதிலே வெற்றியெய்தும்
திண்ணிய கருத்தினோடும் சிரித்திடும் முகத்தினோடும்
நண்ணிடு ஞானபானு அதனை நாம் நன்கு போற்றின்" 

ஞானபானு பத்திரிகைக்கு பாரதி எழுதிய வாழ்த்துப் பாடல் இது. 

தொழுநோயால் பீடிக்கப்பட்ட போதிலும் தேசசேவையை சிவம் கைவிடவில்லை அவரின் நோயைக் காரணம் காட்டி, சுப்ரமணிய சிவாவை ரயிலில் பயணம் செய்யக்கூடாது என்று அரசு தடை விதித்தது. கட்டை வண்டியிலும், கால்நடையாகவும் பயணம் செய்து மக்களுக்கு அந்நிய ஆட்சியின் கொடுமையை விளக்கி பிரச்சாரம் செய்தார். 

தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாசைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் சிலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்...சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர்.இவர்களிடையே வந்து சேர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வாழ்வை நீத்தார். 

 சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முடித்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியை பரப்பினார். அவரும் நாடகத்தில் பங்கெற்று நடித்துள்ளார். ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். 

திங்கள், 22 செப்டம்பர், 2025

செப்டம்பர் 22 - ரைட் ஆனரபிள் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி பிறந்ததினம்

வலங்கைமான் சங்கர நாராயண ஸ்ரீனிவாச சாஸ்திரி காங்கிரசின் தொடக்க கால மிதவாத காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவர். இவர்களும் தீவிரவாத காங்கிரஸ்காரர்களுக்கு எந்த விதத்திலும் தேசபக்தியில் குறைந்தவர்கள் அல்ல. மிதவாதிகள் என்று பார்த்தால், அவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்து, பதவி இவற்றில் இருந்தவர்களாகத்தான் இருக்கும். அவர்கள் தங்கள் சமூக நிலைமையிலிருந்து இறங்கி வந்து சாலையில் நின்று போராடுவதில்லை. தங்கள் அறிவுத் திறன், வெள்ளை அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய வசதி இவற்றைக் கொண்டு மேல் நிலையில் இருந்து பாடுபட்டவர்கள். 


வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி என்று சொன்னவுடன் ஆங்கிலத்தில் இவரை “வெள்ளி நாக்கு சாஸ்திரி” என வழங்குவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காரணம் இவரது ஆங்கிலப் பேச்சாற்றல். பிறக்கும் போதே அந்தத் திறமையுடன் பிறந்தவர் என்பதைக் குறிக்க அவரைப் பற்றி அப்படிச் சொல்லி வந்தார்கள். 

அண்ணாமலை பல்கலைக் கழக துணை வேந்தர், வட்டமேஜை மா நாட்டுப் பிரதி நிதி, காங்கிரஸ் இயக்கத்தில் தொடர்பு என்று பல்முனை ஆற்றல் படைத்த இவர் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகிலுள்ள வலங்கைமான் எனும் சிற்றூரில் மிகச் சாதாரண புரோகிதத் தந்தைக்கு 1869 செப்டம்பர் 22இல் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை சங்கர நாராயண சாஸ்திரி.அவர் இருந்த ஊரிலேயே ஆரம்பக் கல்வி கற்ற இவர் பின்னர் கும்பகோணம் சென்று அங்குள்ள நேட்டிவ் உயர் நிலைப் பள்ளியிலும், தொடர்ந்து கல்லூரி படிப்பை கும்பகோணம் அரசு கல்லூரியிலும் பயின்று 1887இல் பட்டம் பெற்றார். ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் இவர் புலமை பெற்று விளங்கினார். 

சிலகாலம் சேலம் முனிசிபல் கல்லூரியில் ஆசிரியர் பணியில் ஈடுபட்டார். பின்னர் சென்னை திருவல்லிக்கேணியில் இந்து உயர் நிலைப் பள்ளியில் 1894இல் தலைமை ஆசிரியராகவும் இருந்தார். அங்கு இவர் 1902 வரை சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றி யிருக்கிறார். அந்த காலகட்டத்தில் இவருடைய ஆங்கிலப் புலமை நாட்டுக்குத் தெரிய வந்தது. நிர்வாகத்திலும் முத்திரை பதித்தவர் ஸ்ரீனிவாச சாஸ்திரி. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பின்னாளில் துணை வேந்தராகப் பணியாற்றி பெருமை சேர்த்தவர். இவர் பணியாற்றிய காலத்தில் அங்கு பெரும் புலவர்கள் குறிப்பாக ரா.ராகவ ஐயங்கார், சோமசுந்தர பாரதியார் போன்றவர்களும் இருந்திருக்கிறார்கள்.

இவர் அரசியலுக்கு வந்தது 1905ஆம் வருடம். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், அவர் அரசியலுக்கு வந்த காலத்தில் காங்கிரசில் மகாத்மா காந்தி வரவில்லை. திலகர், கோகலே போன்றவர்கள் இருந்தாலும் நமது கோரிக்கை பரிபூரண சுதந்திரம் என்ற அறிவிப்பு வராத காலம். சுதந்திரத்தை அடைய எந்த வழியில் போராடப் போகிறோம் என்று அறியாத நிலையில் அப்போதைய காங்கிரஸ் பிரிட்டிஷ் அரசருக்கு வாழ்த்துப்பா பாடி மகா நாடுகள் நடத்தி, அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்த மிதவாத காங்கிரஸார் வாழ்ந்த காலம். இதை மனத்தில் வைத்துக் கொண்டால் நிலைமை நன்கு புரிந்து கொள்ளலாம்.

1908இல் இவர் காங்கிரசில் உறுப்பினர் ஆனார். இது 1922 வரை தொடர்ந்தது. பின்னர் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போது இவர் காங்கிரசிலிருந்து விலகிவிட்டார். இந்தியன் லிபரல் கட்சி என்றோரு கட்சியை இவரோடு கருத்து ஒற்றுமை உடையவர்களோடு சேர்ந்து தொடங்கினார். பின்னாளில் இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தார்.

சென்னை லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் இவர் 1913 முதல் 1916 வரை உறுப்பினராக இருந்தார். 1916 முதல் 1919 வரை இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சில் எனும் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1920 முதல் 1925 வரை கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் எனும் அமைப்பிலும் இவர் பணியாற்றினார்.

முதல் உலக யுத்தத்துக்குப் பிறகு உருவான சர்வதேச அமைப்பான லீக் ஆஃப் நேஷன்ஸ் இது இப்போதைய ஐக்கிய நாடுகள் சபையைப் போன்றது. அதில் இவர் இந்தியப் பிரதி நிதியாக இருந்தார். இந்தியாவில் நடக்கும் வழக்குகள் இந்திய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீடு செய்ய வேண்டுமானால் இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சிலுக்குப் போக வேன்டும். அந்த பிரிவி கவுன்சிலில் இவர் உறுப்பினராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவின் பிரதி நிதியாகவும் இருந்திருக்கிறார்.

இப்போதெல்லாம் மிகப் பெரிய நகரங்களில் வாழ்வோர் மட்டுமே ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக பேசுகிறார்கள் என்கிற எண்ணம் உண்டு. அப்போது கும்பகோணத்தில் அரசு கல்லூரியில் படித்த ஸ்ரீனிவாச சாஸ்திரியின் ஆங்கிலம், ஆங்கிலேயர்களே கேட்டு வியக்கும் வண்ணம் இருந்ததாகப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். சரளமாக ஆங்கிலத்தில் பேசுவார். இதனையொட்டியே வெள்ளி நாக்கு படைத்தவர் எனப் பெயர் பெற்றார். மகாத்மா காந்தியோடும், கோபாலகிருஷ்ண கோகலே யுடனும் இவருக்கு நல்ல பழக்கமும் தொடர்பும் இருந்தது. மகாத்மா இவரைத் தன் அண்ணன் என்று அழைப்பது வழக்கம். பிரிட்டிஷ் நகரங்கள் பல இவருக்குப் பல விருதுகளைக் கொடுத்து கெளரவித்திருக்கின்றன.
சென்னை ஆசிரியர்கள் கில்டு எனும் அமைப்பை இவர் தோற்றுவித்தார். தமிழ் நாட்டின் கூட்டுறவு இயக்கம் உருவாகக் காரணகர்த்தர்களில் ஒருவராகவும் இவர் இருந்தார். திருவல்லிக்கேணி அர்பன் கோ ஆபரேடிவ் சொசைட்டி எனப்படும் டியுசிஎஸ் 1904 உருவானது இவரது முன்முயற்சியால்தான்.

1906இல் இவர் கோபாலகிருஷ்ண கோகலேயைச் சந்தித்தார். அவர் தொடங்கிய சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டியில் இவர் உறுப்பினர் ஆனார். 1915இல் இவர் அதன் தலைவராகவும் ஆனார். 1908 முதல் 1911 வரை இவர் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார். 1913இல் இவர் சென்னை லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் உறுப்பினர் ஆனார். பிரிட்டிஷ் இந்திய அரசு பிறப்பித்த ரவுலட் சட்டத்தை இவர் தீவிரமாக எதிர்த்தார். இந்தச் சட்டத்தின்படி அரசு யாரை வேண்டுமானாலும் விசாரணையின்றி சிறையில் அடைக்க முடியும். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் சாஸ்திரி இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆற்றிய உரை வரலாற்றில் போற்றப்படும் உரைகளில் ஒன்று.

1930-31இல் லண்டனில் நடந்த வட்டமேஜை மகா நாட்டில் இவரும் மகாத்மா காந்தியுடன் கலந்து கொண்டார். மகா நாடு தோல்வியில் முடிந்தாலும் 1935இல் காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட காரணமாக இருந்தார். இவர் 1946 ஏப்ரல் 17ஆம் தேதி தனது 76ஆம் வயதில் சென்னை மைலாப்பூரில் தனது இல்லத்தில் காலமானார். 

வாழ்க ஸ்ரீனிவாச சாஸ்திரி புகழ்!

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 1 - ராஜரிஷி புருஷோத்தமதாஸ் டான்டன் பிறந்ததினம்

உத்திரப்பிரதேசத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரர், உத்திரப்பிரதேச மாகாணத்தின் சட்டசபையின் நீண்டகால சபாநாயகர், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர், அரசியலமைப்பு நிர்மாண சபையின் உறுப்பினர், வழக்கறிஞர், பாரதரத்னா விருது பெற்றவர் என்ற பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் திரு புருஷோத்தமதாஸ் டான்டன் அவர்களின் பிறந்த தினம் இன்று 

1982ஆம் ஆண்டில் ப்ரயாக்ராஜ் நகரில் திரு சாலிக்ராம் டான்டன் அவர்களின் மகனாகப் பிறந்தவர் திரு புருஷோத்தமதாஸ் டான்டன். வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டமும் அதனோடு சட்டப் படிப்பையும் முடித்து விட்டு ப்ரயாக்ராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத்  தொடங்கினார்.முன்னணி வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான தேஜ் பகதூர் சப்ருவின் வழிகாட்டுதலில் புருஷோத்தமதாஸ் டான்டன் தனது வழக்கறிஞர் சேவையை நடத்தினார். 1906ஆம் ஆண்டில் தனது வழக்கறிஞர் சேவையைத் தொடங்கிய டான்டன் 1921ஆம் ஆண்டு அந்தத் தொழிலில் இருந்து விலகி முழுநேர மக்கள் பணிக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டார். 



மிக இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில்  தன்னை இணைத்துக் கொண்ட டான்டன் ஜாலியன்வாலாபாக் படுகொலையை விசாரிக்க காங்கிரஸ் கட்சி நியமித்த குழுவில் பணியாற்றினார். ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரஹம் போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார். 1937ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகள் உத்திரப்பிரதேச சட்டசபையின் சபாநாயகர் பொறுப்பில் பணியாற்றனார்.

1948ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தலில் - ஆமாம் அப்போதெல்லாம் ஆண்டுதோறும் தேர்தல் வைத்து தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது - பட்டாபி சீதாராமையாவை எதிர்த்துப் போட்டி இட்டார். ஆனால் அந்த ஆண்டு அவர் வெற்றி பெற முடியவில்லை. பின்னர் 1950ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆச்சாரிய கிருபளானியை எதிர்த்துப் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். ஆனால் நேரு அவர்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நாடு பிளவுபடுவதை கடுமையாக எதிர்த்தார். பிரிவினை என்பது உறுதியான பிறகு இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானில் உள்ள எல்லா ஹிந்துக்களை இந்தியாவிற்கும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராக தேர்வானார்.  1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகவும் பின்னர் 1956ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

இந்தியாவின் தேசிய மொழியாக காந்தி பரிந்துரைத்த ஹிந்தியும் உருதுவும் கலந்த ஹிந்துஸ்தானி மொழிக்கு பதிலாக தேவநாகரி எழுத்தில் உள்ள ஹிந்தியைத்தான் நாட்டின் தேசியமொழியாக அறிவிக்க வேண்டும் என்று வாதாடினார்.

மதமாற்ற தடுப்பு சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் புருஷோத்தமதாஸ் டான்டனும், குலபதி முன்ஷியும் பரிந்துரைத்தனர்.

இவரது சேவைகளைப் பாராட்டும் விதமாக பாரத அரசு நாட்டின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதை இவருக்கு வழங்கி மரியாதை செலுத்தியது.

தனது எழுபத்தி ஒன்பதாவது வயதில் 1962ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் டான்டன்  காலமானார்.  

ஞாயிறு, 27 ஜூலை, 2025

ஜூலை 27 - வீராங்கனை கல்பனா தத்தா பிறந்ததினம்

பாரதநாட்டு விடுதலைக்கு ஆண்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் பாடுபட்ட பல்வேறு பெண்களும் உண்டு. அந்த வரிசையில் ஒளிவிடும் தாரகையாக விளங்கிய கல்பனா தத்தாவின் பிறந்தநாள் இன்று.


இன்று பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதியாக உள்ள சிட்டகாங் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் 1913ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் பிறந்தவர் கல்பனா தத்தா . தனது பள்ளியிறுதித் தேர்வில் வெற்றிபெற்ற பிறகு கல்பனா கல்கத்தா நகரில் அமைந்துள்ள பெதுன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பீனாதாஸ், பிரிதிலதா வடேகர் ஆகியோரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தில் கல்பனாவும் இணைந்து கொண்டார்.

பபுகழ்பெற்ற புரட்சியாளர் சூர்யாசென் தலைமையிலான குழு ஓன்று ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. கல்பனா அதில் ஐக்கியமானார். 1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிட்டகாங் நகரில் உள்ள ஆங்கில ஆயுதக் கிடங்கை புரட்சியாளர்கள் தாக்கி அங்கே உள்ள ஆயுதங்களை கொள்ளை அடித்தார்கள். போராளிகளைக் கைது செய்ய ஆங்கில அரசு தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. 1931ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கூடும் கிளப் ஒன்றில் தாக்குதல் நடத்த போராளிகள் முடிவு செய்தனர். அங்கே இடத்தை வேவு பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த கல்பனாவை அரசு கைது செய்தது. பிணையில் விடுதலையான கல்பனா தலைமறைவானார்.

1933ஆம் வருடம் பிப்ரவரி மாதம் சூரியாசென் கைது செய்யப்பட்டார். ஆனால் அங்கே இருந்த கல்பனா தப்பியோடி விட்டார்.  1933ஆம் வருடம் மே மாதம் கல்பனா கைது செய்யப்பட்டார். சிட்டகாங் சதி வழக்கு மறுபடி விசாரணைக்கு வந்தது. கல்பனாவை நாடுகடத்துமாறு நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்தது. ஆனால் 1939ஆம் ஆண்டு கல்பனா விடுதலை செய்யப்பட்டார்.

இயல்பாகவே அன்றய போராளிகள் கம்யூனிச சித்தாந்தத்தில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள். விடுதலையான கல்பனாவும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1940ஆம் ஆண்டு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து தனது பட்டப்படிப்பையை கல்பனா முடித்தார். 1943ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான பூரண சந்திர ஜோஷியைத் திருமணம் செய்து கொண்டார். 1943ஆம் ஆண்டு ஏற்பட்ட வங்காள பஞ்சத்திலும், பின்னர் தேசப் பிரிவினையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் நிவாரணப் பணிகளியில் கல்பனா செயலாற்றினார்.

கணவர் ஜோஷியோடு இணைந்து கல்பனா சிட்டகாங் ஆயுதக் கிடங்கை கொள்ளையடித்தது பற்றிய தனது அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டார். கொல்கத்தா நகரில் இயங்கி வரும் புள்ளியியல் கல்லூரியில் பணியாற்றிய கல்பனா 1995ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் காலமானார்.

கால ஓட்டத்தில் கல்பனா தத்தா போன்ற தியாகிகள் நினைவு கொள்ளப்படாமல் போகலாம், ஆனாலும் அவர்களின் தியாகங்கள் வீணாகிவிடாது என்பதில் ஐயமில்லை   

திங்கள், 26 மே, 2025

மே 26 - ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை - நினைவு தினம்

பாரதநாட்டின் விடுதலைக்காக நாட்டின் உள்ளிருந்து போராடியவர்கள் ஒருபுறம் என்றால், அதற்காக வெளிநாட்டில் இருந்து முயற்சி செய்தவர்கள் மறுபுறம். அகிம்சை வழியில் பாடுபட்டவர்கள் ஒருபக்கம், ஆயுதம் ஏந்தி பாடுபட்டவர்கள் ஒருபுறம். அப்படி வெளிநாட்டில் இருந்து ஆயுதம் ஏந்தி போராடிய வீரர்களில் முக்கியமானவர் செண்பகராமன் பிள்ளை. தமிழகத்தைச் சார்ந்த இவரின் வாழ்க்கை சாகசங்களும், அதிரடிகளும், எதிர்பாரா திருப்புமுனைகளும், வியப்பும் கொண்டது.

திருவனந்தபுரத்தில் வசித்து வந்த சின்னசாமி பிள்ளை - நாகம்மாள் தம்பதியரின் மகன் இவர். பள்ளிப்பருவத்திலேயே ஸ்ரீ பாரதமாதா வாலிபர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி தனது தேசபக்தியை வெளிக்காட்டியவர் பிள்ளை. ஜெய் ஹிந்த் என்ற போர் முழக்கத்தை முதலில் பயன்படுத்தி, அதனை பிரபலப்படுத்தியதால் இவரை ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை என்று மக்கள் அழைத்தார்கள்.

அந்தக் காலகட்டத்திலேயே இத்தாலி, சுவிட்ச்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கல்வி பயின்று பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் செண்பகராமன் பிள்ளை. அந்தக் காலத்தில் பாரத நாட்டு விடுதலைக்காக இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் பல போராளிகள் இயங்கிக்கொண்டு இருந்தார்கள். ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அரசர் மற்றும் ரஷிய அரசோடு இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்க்கவேண்டும் என்று பலர் முயற்சி செய்து கொண்டு இருந்த காலம் அது. 

1914ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் நாள் - ஆஸ்திரிய நாட்டு இளவரசரும் அவர் மனைவியும் செர்பியாவைச் சேர்ந்த ஒரு இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆஸ்ட்ரியா செர்பியாமீது படையெடுத்தது. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் எதோ ஒரு அணியில் இணைய முதல் உலகப் போராக சண்டை மாறியது. பல நாடுகளின் எல்லைக்கோடுகள் மாற்றியமைக்கப் பட்டன. ஏற்கனவே ஜெர்மனியில் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் என்ற அமைப்பை செண்பகராமன் பிள்ளை நடத்திவந்தார். அமெரிக்காவிலும் கனடாவிலும் இருந்த கதர் இயக்கத்தினரோடு இணைந்து ஜெர்மனியின் உதவியோடு ஆயுதங்களை பாரத நாட்டுக்கு கடத்தி, அங்கே பெரும் ராணுவப் புரட்சியை உருவாக்க போராளிகள் திட்டமிட்டனர். 

இதன் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் நாட்டில் போராளிகள் தற்காலிக சுதந்திர பாரத அரசு ஒன்றை நிறுவினார்கள். ராஜா மகேந்திரபிரதாப் ஜனாதிபதியாகவும் மௌலானா பரகத்துல்லா பிரதமமந்திரியாகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக செண்பகராமன் பிள்ளை பணியாற்றினார். முதலாம் உலகப் போரின் போது எம்டன் என்ற கப்பலில் வந்து சென்னையின் மீது அதிரடியாக குண்டு வீசி ஆங்கில அரசை அதிரவைத்தவர் செண்பகராமன் பிள்ளை
பாரதநாட்டில் உருவாக்க எண்ணிய ஆயுதப்புரட்சி ஆங்கில உளவுத்துறையால் கண்டு பிடிக்கப்பட்டது. ரஷ்யப் புரட்சி காரணமாக போரில் இருந்து ரஷ்யா விலகிக்கொள்ள ஜெர்மனி தோற்க நேர்ந்தது. பிரிட்டிஷ் அரசின் நெருக்கடி காரணமாக தற்காலிக இந்திய அரசு  ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற நேர்ந்தது. 

1933-ம் ஆண்டு பெர்லினில் வாழ்ந்த மணிப்பூரைச் சேர்ந்த லட்சுமிபாய் என்ற பெண்ணை, செண்பகராமன் திருமணம் செய்து​கொண்டார். அந்த காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை செண்பகராமன் பிள்ளை சந்தித்தார். பிள்ளை உருவாகியிருந்த பாரத தேசிய தன்னார்வப் படை நேதாஜியைக் கிளர்ச்சியூட்டியது. அந்த வழியில்தான் நேதாஜி தனது இந்திய தேசிய ராணுவத்தை வடிவமைத்தார். பிள்ளை உருவாகியிருந்த ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் நேதாஜியின் போர் முரசாக மாறியது. பல ஆயிரம் தேசபக்தர்களை உற்சாகமூட்டும் கோஷமாக இன்றும் அதுவே திகழ்கிறது. 
முதல் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி உருவானது. செண்பகராமன், ஹிட்லருடன் நெருக்கமாகப் பழகி வந்தார். பாரதம் குறித்து ஹிட்லருக்குள் இருந்த ஆழமான வெறுப்பை உணர்ந்த செண்பகராமன், வெளிப்படையாகத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார். ஆகவே, நாஜிக்களின் நெருக்கடிக்கு ஆளானார்.

ஒரு விருந்தில் செண்பகராமன் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது. அதை அறியாமல் சாப்பிட்டுவிட்டு நோய்மையுற்ற இவர், சிகிக்சை பெற இத்தாலி சென்றார். தீவிர சிகிக்சை அளித்தும் செண்பகராமன் இறந்து போனார். அவருக்குத் தரப்பட்ட உணவில் யார் விஷம் கலந்தது? அல்லது அது ஒரு கட்டுக்கதையா என்பது தெளிவற்ற தகவலாகவே இன்றும் இருந்து வருகிறது.

1934-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி செண்பகராமனின் உயிர் பிரிந்தது. தனது இறுதி விருப்பமாக, 'என்னுடைய சாம்பலை பாரத நாட்டுக்கு எடுத்துச் சென்று, எனது தாயாரின் சாம்பலைக் கரைத்த, கேரளாவில் உள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது மனைவி லட்சுமிபாயால் அதை எளிதாக நிறைவேற்ற முடியவில்லை. கணவனின் அஸ்தியைப் பாதுகாப்பாக வைத்திருந்தபோதும், லட்சுமி பாய் மீது நாஜி அரசு குற்றம் சுமத்தி அவரை மனநலக் காப்பத்தில் அடைத்தது. அவரைச் சித்ரவதைகள் செய்தது. கணவனின் அஸ்தியை வைத்துக்கொண்டு, லட்சுமிபாய் 30 வருடங்கள் போராடினார்.

முடிவில், அஸ்தியோடு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். மும்பையில் தங்கி இருந்த அவர், இந்திய அரசின் மரியாதையோடு அந்த அஸ்தி கரைக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடினார். அதுவும் எளிதாக நடக்கவில்லை. ஒரு கட்டத்தில், இந்திரா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இந்திரா ஒரு சிறுமியாக தனது வீட்டுக்கு வந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி, தனது கணவனின் இறுதி ஆசையை நிறைவேற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார்.
இந்திய அரசு சார்பில், செண்பகராமனின் அஸ்தியைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1966-ம் ஆண்டு, இந்தியாவின் போர்க் கப்பல் ஒன்றில் செண்பகராமனின் அஸ்தியை எடுத்துக் கொண்டு மும்பையில் இருந்து கொச்சிக்குப் பயணமானார் லட்சுமிபாய். செண்பகராமன் விரும்பியபடியே அவரது அஸ்தி கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது. எந்த நதியின் நீரில் தனது தாயின் அஸ்தி கரைந்து போனதோ, அதே நதியில் செண்பகராமனும் கரைந்து போனார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு செண்பகராமனுக்கு சிலை வைத்துக் கொண்டாடி இருக்கிறது. 1972-ம் ஆண்டு லட்சுமி பாய் மும்பையில் காலமானார்.

வெள்ளி, 9 மே, 2025

மே 9 - காந்தியின் குரு கோபால கிருஷ்ண கோகுலே பிறந்ததினம்

பாரதநாட்டின் சுதந்திரப் போராட்டம் என்பது ஆயுதம் தாங்கிப் போராடிய வீரர்களாலும், ஆங்கிலச் சட்டத்தின் துணையோடு ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரர்களாலும் ஒரே நேரத்தில் நடைபெற்ற ஒன்றாகும். அந்த வீரர்கள் தீவிரவாதிகள் என்றும் மிதவாதிகள் என்றும் அறியப்பட்டனர். ஏற்றுக்கொண்ட பாதை வேறாக இருந்தாலும் அவர்களின் தியாகம் என்பது சமமானதுதான். மிதவாதிகளின் முன்னோடியாக அறியப்பட்ட கோபாலகிருஷ்ண கோகுலே அவர்களின்பிறந்ததினம் இன்று.


மஹாராஷ்டிர மாநிலத்தின் ரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு சாதாரண சித்பவன் ப்ராமண குடும்பத்தில் கிருஷ்ணாராவ் கோகுலே - சத்தியபாமாபாய் தம்பதியரின் மகனாக 1866 ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள் பிறந்தவர் கோபாலகிருஷ்ண கோகுலே அவர்கள். பொருளாதார வசதி இல்லாமல் இருந்தாலும் அவர் குடும்பம் கல்வியின் முக்கியத்தை அறிந்தே இருந்தது. ஆங்கிலக் கல்வி அரசு இயந்திரத்தில் எங்காவது வேலைக்குச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் குடும்பம் கோகுலேயின் கல்விக்கு உறுதுணையாக இருந்தது. கோல்காபூர் நகரின் ராஜாராம் கல்லூரியிலும் அதனைத் தொடர்ந்து மும்பையின் எலிபைன்ஸ்டோன் கல்லூரியிலும் கோகுலே கல்வி பயின்றார். ஆங்கிலக் கல்வி கோகுலேவிற்கு அரசியல் அறிவையும் சேர்த்தே அளித்தது. தனது படிப்பை முடித்த கோகுலே பூனா நகரில் உள்ள பார்கூசன் கல்லூரியில் கணிதப் பேராசிரிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

மஹாதேவ கோவிந்த ராணடேயின் சீடராக கோகுலே காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ச்சியான விவாதங்களின் மூலமாகவும், ஆங்கிலச் சட்டத்தின் மூலமாகவும் பாரதியர்களுக்கு அரசியலில் போதுமான பிரதிநிதித்துவம் பெறலாம் என்பது அவரின் கருத்தாக இருந்தது. அதே காலகட்டத்தில் அதே சித்பவன் ப்ராமண வகுப்பில் தோன்றிய திலகர் பூரண ஸ்வராஜ்யம் எங்கள் பிறப்புரிமை என்று முழங்கிக்கொண்டு இருந்தார். நேரடியான போராட்டங்களின் மூலம் ஆங்கில ஆட்சியை அகற்ற முடியும் என்று நம்பிய தேசபக்தர்கள் திலகரின் வழியைப் பின்பற்றினர். 1895ஆம் ஆண்டு கோகுலேவும் திலகரும் காங்கிரஸ் கட்சியின் துணைச்செயலாளர்களாகப் பணிபுரிந்தனர். அதனைத் தொடர்ந்து 1905ஆம் ஆண்டு கோகுலே காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் போக்கை மிதவாதிகளா அல்லது தீவிரவாதிகளா யார் நிர்ணயிப்பது என்ற கருத்து வேறுபாடு முற்றி 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கட்சி இரண்டாகப் பிளவு பட்டது. 1908ஆம் ஆண்டு திலகர் கைது செய்யப்பட்டு பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ காங்கிரஸ் கட்சி மிதவாதிகளின் கைகளுக்குச் சென்றது. கொள்கைரீதியாக வேறுபட்டு இருந்தாலும் தேசபக்தர்கள் ஒருவர்மீது ஒருவர் வைத்திருந்த மரியாதை குறையவே இல்லை என்பதுதான் உண்மை.

பாரத நாட்டின் மக்கள் அனைவர்க்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பது கோகுலேவின் விருப்பமாக இருந்தது. பாரத்தின் பொருளாதாரத்தை ஆய்வு செய்யவும், தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட பஞ்சங்கள் பற்றி ஆராயவும்  அமைக்கப்பட்ட வெல்பி கமிஷனிடம் தேவையற்ற பல செலவுகளை ஆங்கில அரசு செய்கிறது என்றும், போதுமான அளவு கல்விக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் கோகுலே வாதாடினார். குறைந்தபட்சம் நான்காம் வகுப்புவரையாவது கட்டாய இலவசக் கல்வி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்.

சிறந்த கல்வியை அளித்து தகுதியான தலைவர்களை உருவாக்க கோகுலே இந்தியாவின் பணியாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.  அன்றய ஆங்கில சட்டத்துக்கு உள்பட்டு சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது என்பதுதான் கோகுலேவின் வழிமுறையாக இருந்தது.  1899 முதல் பல்லாண்டுகள் மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கும், பின்னர் நாடாளுமன்றத்திற்கும் கோகுலே தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் நாட்டின் பட்ஜெட் பற்றிய அவரது விவாதங்கள் செறிவு மிகுந்ததாக இருந்தது.

காந்தி கோகுலேவைதான் தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டு இருந்தார். தென்னாபிரிக்காவில் இருந்து பாரதம் திரும்பிய காந்தியை நாடு முழுவதும் சுற்றி வந்து, நேரடியாக நாட்டின் நாட்டுமக்களின் நிலைமையை அறிந்து கொண்டு அரசியலில் ஈடுபடுமாறு கோகுலே அறிவுறுத்தினார். பளிங்கைப் போன்ற தூய்மை, சிங்கத்தைப் போன்ற துணிவு, அரசியல் வானில் குறையே சொல்லமுடியாத சரியான மனிதர் என்று காந்தி கோகுலேவைப் புகழ்ந்து எழுதினார்.

பாரத நாட்டின் புகழ்வாய்ந்த தலைவர்களில் ஒருவரான கோபால கிருஷ்ண கோகுலே தனது 48ஆம் வயதில் 1915ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் காலமானார்.

தேசியத் தலைவருக்கு ஒரே இந்தியா தளம் தனது அஞ்சலியை செலுத்துகிறது.