சனி, 19 அக்டோபர், 2019

நாமக்கல் கவிஞர் பிறந்தநாள் - அக்டோபர் 19

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு.
தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா 

இன்று திராவிட இயக்கத்தினராலும், தமிழ்த்தேசியவாதிகளாலும் அடிக்கடி கூறப்படும் இந்த சொற்தொடர்கள் ஒரு தேசியவாதியால் எழுதப்பட்டவை என்பது பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம். 



தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர், தேசியப் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டவர், மஹாகவி பாரதியால் பாராட்டப்பட்டவர், மூதறிஞர் ராஜாஜியின் தோழர், சிறந்த ஓவியர், உப்பு சத்யாகிரஹப் போரில் "கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஓன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்" என்ற வழிநடைப் பாடலை எழுதியவர் என்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் நாமக்கல் கவிஞர் என்னும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள். 

1888ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாள் காவல்துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த வெங்கடராம பிள்ளை - அம்மணி அம்மாள் தம்பதியினரின் எட்டாவது மகனாகப் பிறந்தவர் ராமலிங்கம் பிள்ளை. ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு ராமேஸ்வரத்தில் பிரார்தனை செய்து அதன் பலனாகப் பிறந்ததால் இவருக்கு ராமலிங்கம் என்று பெயரிட்டார்கள். சிறுவயதிலேயே இதிகாச புராணங்களை சொல்லி இவர் தாயார் வளர்த்தார். 

தொடக்கக்கல்வியை நாமக்கல்லிலும், பின்னர் கோவையிலும், கல்லூரிப் படிப்பை திருச்சியிலும் பயின்றார். 1909ஆம் ஆண்டு தனது அத்தை மகளை மணந்து கொண்டார். இயற்கையிலேயே ஓவியம் வரையும் திறமை இவருக்கு இருந்தது. இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியத்தை பார்த்து மகிழ்ந்த மன்னரின் குடும்பம் இவருக்கு தங்கப்பதக்கம் ஒன்றை பரிசளித்து பாராட்டியது. 

1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய “கத்தியின்றி” பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது “சுதந்திரச் சங்கு” பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

காரைக்குடிக்கு பாரதியார் வந்திருப்பதாக அறிந்த நாமக்கல் கவிஞருக்கு பாரதியாரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஓவியம் வரைவதிலும் கெட்டிக்காரர் என்று பாரதியாருக்கு நாமக்கல் கவிஞரை அறிமுகப்படுத்தினர். கவிதையும் எழுதுவார் என்று குறிப்பிட்டனர். கவிதை ஒன்று சொல்லுமாறு பாரதியார் கேட்டார். எஸ்.ஜி.கிட்டப்பா நாடகத்துக்காக தாம் எழுதிக் கொடுத்த ‘தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்’ என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். பாடல் முழுவதையும் கேட்ட பாரதியார், ‘பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்... பலே, பலே இந்த ஓர் அடியே போதும்’ என்று பாராட்டித் தட்டிக் கொடுத்தார்.

1932ஆம் ஆண்டில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட நாமக்கல் கவிஞர், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.1937ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். கவிஞர் சேலம் நகராட்சி உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து கவிஞரின் காங்கிரஸ் பணி தீவிரமானது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு ‘பத்மபூஷன்’ விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய “மலைக்கள்ளன்” எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடித்த இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்ற ஒன்றாகும்.

சூரியன் வருவது யாராலே ?
சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?
பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

அல்லா வென்பார் சிலபேர்கள் ;
அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’
என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்

எதைக் கேட்டாலும் இல்லையில்லை என்றும் சொல்லும் கண்மூடித்தனமான நாத்திகத்தையே பகுத்தறிவு என நினைக்கும் பலரின் மத்தியில் உண்மையான பகுத்தறிவு என்ன என்பதை விளக்கிட இதைவிடத் தெளிவான வெளிப்பாடு ஒன்று இருக்குமா எனத் தெரியவில்லை. பகுத்தறிவு மட்டுமல்லாமல், எல்லா மதங்களும் கூறும் உயர்வான பரம்பொருள் ஒன்றே என்பதையும் தெள்ளத்தெளிவாக விளக்கும் கவிதை இதுவே.

இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணி அளவில்  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தமிழ் கவிதைகளை ரசிப்பவர்கள் உள்ளமட்டும் நாமக்கல் கவிஞரும் உயிரோடுதான் இருப்பார்.