ஞாயிறு, 13 அக்டோபர், 2019

சகோதரி நிவேதிதா மஹா சமாதி நாள் - அக்டோபர் 13.

பாரதிய மெய்யியல் ஞானத்தை நம்மவர்கள் புரிந்துகொள்வதற்கு முன்பே மேலைநாட்டவர்கள் கண்டுகொள்கிறார்கள். அப்படி கண்டுகொண்டு பாரத நாட்டுக்கும், பாரத பண்பாட்டிற்கும் தன்னலமற்ற சேவை புரிந்த சீமாட்டி, ஸ்வாமி விவேகானந்தரின் ஆன்மீக வாரிசு, மஹாகவி பாரதியின் குரு சகோதரி நிவேதிதையின் மஹாசமாதி தினம் இன்று. பாரத நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தது போலவே, அயர்லாந்து நாட்டையும் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆளுமைக்குள் வைத்திருந்தார்கள். தங்கள் நாட்டை அடிமைப்பிடியில் இருந்து மீட்கப் போராடிய போராளிகளின் பரம்பரையில் பிறந்தவர் மார்கரெட் எலிசபெத் நோபிள். மத போதகராகப் பணியாற்றி வந்த சாமுவேல் ரிச்மன்ட் நோபிள் - மேரி இசபெல் ஹாமில்டன் தம்பதியினரின் மகளாக 1867ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் நாள் பிறந்தவர் மார்கெரெட் எலிசபெத் நோபிள். 

தனது கல்லூரிப் படிப்பை முடித்தபின் மார்கெரெட் நோபிள் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். சிறுவயதில் இருந்தே ஏசு கிருஸ்து மீது உளமார்ந்த ஈடுபாடு கொண்டவராகவே நோபிள் விளங்கினார். மதம் என்பது கோட்பாடுகளை நம்புவதில் இல்லை, மெய்ஞானப் பொருளைக் கண்டடைவது என்ற தெளிவில் இருந்த அவரின் தேடல்களுக்கு கிருஸ்துவத்தில் பதில் கிடைக்கவில்லை. அதனால் புத்தரின் போதனைகளை கற்கத் தொடங்கினார். புத்தரின் வாழ்க்கையால் கவரப்பட்டாலும், அவரது ஆழமான கேள்விகளுக்கு பௌத்த சித்தாந்தத்திலும் அவரால் விடை காண முடியவில்லை. 

1895ஆம் ஆண்டு தோழி ஒருவரின் வீட்டில் ஸ்வாமி விவேகானந்தரின் சொற்பொழிவை கேட்க நோபிள் சென்றார். முதலில் அந்தப் பேச்சில் எந்த புதிய கருத்துக்களும் இல்லை என்றுதான் அவர் நினைத்தார். ஸ்வாமியின் கருத்துக்களோடு பல்வேறு இடங்களில் முரண்பட்ட நோபிள் ஸ்வாமியோடு தொடர்ச்சியான விவாதங்களில் ஈடுபடத் தொடங்கினார். மாணவர் தயாராக இருக்கும்போது, ஆசிரியர் தோன்றுவார் என்ற கருத்துக்கு ஏற்ப, நோபிளின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஸ்வாமி விவேகானந்தர் விளக்கங்களை அளித்தார். 

பாரத நாட்டின் பெண்களுக்கு சரியான கல்வியை மார்கரெட் நோபிளால் வடிவமைத்து அளிக்க முடியும் என்று எண்ணிய ஸ்வாமி விவேகானந்தர், அவரை பாரத நாட்டிற்கு வருமாறு அழைத்தார். அதனை ஏற்று நோபிள் பாரதம் வந்தார். 1898ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாரதம் வந்த எலிசபெத் நோபிளுக்கு அதே ஆண்டு மார்ச் மாதம் சன்யாசம் அளித்து அவருக்கு நிவேதிதை என்ற பெயரையும் விவேகானந்தர் சூட்டினார். 

1898 -ம் ஆண்டு. கல்கத்தாவின் ஸ்டார் தியேட்டர் அரங்கம்.ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த சபையில்தான் சுவாமி விவேகானந்தர் அந்தப் பெண்மணியை அறிமுகப்படுத்தினார்...

``இந்தியாவுக்கு இங்கிலாந்து பல நன்கொடைகளை வழங்கி உள்ளது. அவற்றுள் மிகவும் மதிப்புடையதாக சகோதரி நிவேதிதையைக் குறிப்பிடலாம். இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற இங்கே வந்திருக்கிறார். இந்தியாவைத் தன் தாய்நாடாக அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனவே, அவரை நம்முடைய உற்றார் உறவினர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வது நம் கடமை.''

அந்த அரங்கத்திலோ, பெண்மணிகளின் பிரதிநிதியாக ஒருவர்கூட இல்லை. அதைக் கண்டதுமே நிவேதிதைக்கு நம் தேசத்துப் பெண்களின் நிலை புரிந்துவிட்டது. அதேநேரம், `இங்கிலாந்தில் இருந்து வந்திருக்கும் இவர் எங்கே நம் தேசத்தைப் புரிந்துகொண்டு சேவை செய்யப்போகிறார்... ஒருவேளை தன் மத பிரசாரத்துக்காக வந்திருக்கிறாரோ’ என்றெல்லாம் அரங்கில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டதை அவர்களுடைய முகபாவனையில் இருந்தே நிவேதிதை  தெரிந்துகொண்டார்.

மெல்லிய புன்னகையோடு அந்த அரங்கத்தில் பேச ஆரம்பித்தார் நிவேதிதை. அந்தப் பேச்சு அவர்களின் ஐயத்தைப் போக்கியது; அவரிடத்தில் நம்பிக்கையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது.

``உங்களுடைய கலாசாரமும் பண்பாடும் மிகத் தொன்மையானது. கடந்த ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் அதைக் கட்டிக் காப்பாற்றி வருகிறீர்கள். சுவாமிஜி இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்பு, எங்கள் மக்கள் இந்தியாவைப் பற்றி மிகத் தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள். மதப் பிரசாரகர்கள் புகட்டியதை எல்லாம் அவர்கள் நம்பினார்கள். பலர், இந்தியாவைப் பற்றி விபரீத கட்டுக்கதைகளை எல்லாம் பரப்புகின்றனர். ஆனால், இந்தியாவின் சிறப்புகளைப் பற்றிப் பேசுவதற்கு ஒருவருமே இல்லை.

ஐரோப்பா கண்டம் இன்று செல்வத்தில் திளைத்துக்கிடக்கிறது. வெற்று மோகத்தில் மூழ்கிக்கிடக்கிறது. ஆனால், எளிய வாழ்க்கையிலும் உயர்ந்த எண்ணங்களிலுமே நிலையான இன்பம் நிறைந்திருக்கும் என்பதை இந்தியாவிடம் இருந்து ஐரோப்பா அறிந்துகொள்ளும் காலம் விரைவிலேயே வரும். அதற்கு முன்னோட்டமாக அமைந்துவிட்டது சுவாமிஜியின் ஐரோப்பிய விஜயம்.''அரங்கத்தில் ஒலித்த கரவொலி,  நிவேதிதையை நம் தேசத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டதை நிரூபித்தது.

நிவேதிதை, முதலில் கல்கத்தாவில் ஒரு வீட்டில் பெண்களுக்கான பள்ளியைத் திறந்தார். ஒரு தாய் கற்றால், அந்தக் குடும்பமே பயனடை யும் என்ற எண்ணத்தில்  தாய்மார்களுக்கு கல்வி வழங்கினார். சித்திரம் வரைதல், மண் பொம்மைகள் செய்தல் போன்ற நுண்கலைகளையும் கற்றுக் கொடுத்தார். தான் எழுதிய புத்தகங்களில் இருந்து கிடைக்கும் ராயல்டி தொகையையும், தன்னுடைய இங்கிலாந்து நண்பர்கள் கொடுத்த நன்கொடைகளையும் இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தினார்.

கல்விப்பணி மட்டுமல்லாது, மருத்துவ சேவைகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ஒருமுறை கல்கத்தாவில் பிளேக் நோய் தாக்கியபோது, குடிசைப் பகுதிகளுக்கெல்லாம் சென்று அங்கிருந்த மக்களோடு மக்களாக நின்று  உதவிகள் செய்தார்.

1899-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றார். அங்கு தனது பள்ளிக்கான நிதியைத் திரட்டினார். மேலும் இந்தியாவைப் பற்றி மேலைநாட்டினர் கொண்டிருந்த பல தவறான நம்பிக்கைகளை மறுத்து, இந்தியாவின் பெருமைகளை விளக்கிப் பேசினார்.. லண்டன் பத்திரிகைகள், சகோதரி நிவேதிதாவை 'இந்தியாவின் போராட்ட வீராங்கனை' என்று போற்றிப் புகழ்ந்தது.

தனது வெளிநாட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிவேதிதா 1901-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். சமூகப் பணிகளோடு தனது ஆன்மிகம் குறித்தத் தேடலையும் தொடங்கினார். கல்விப்பணி, சமூக சேவை என்று அயராது பாடுபட்ட சகோதரி நிவேதிதாவுக்கு 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் பெரும் சோகத்தைத் தந்தது. அவருடைய குருவான சுவாமி விவேகானந்தரின் மறைவு. குருவை இழந்த நிவேதிதா சோர்ந்து விடாமல், அவரது பணிகளை இன்னும் வேகமாகச் செய்யத் தொடங்கினார். சுவாமி விவேகானந்தர் தனக்கு எழுதிப் பரிசளித்த 'நல்வாழ்த்து' என்ற கவிதையை ஒரு பொக்கிஷமாகவே கருதி பாதுகாத்தார்.  

"தாயின் இதயமும் தலைவனின் உள்ளமும்  

ஆய தென்றலின் அற்புத இனிமையும் 

ஆரிய பீடத் தழகொளி விரிக்கும் 

சீரிய எழிலும் திகழும் வலிமையும் 

கனவிலும் முன்னோர் கண்டிரா வகையில் 

உனதென ஆகி ஓங்குக மென்மேல்! 

எதிர்காலத்தில் இந்திய மகனின் 

சீர்சால் தலைவியாச் செவிலியாய்த் தோழியாய் 

நேரும் ஒருமையில் நீயே ஆகுக!" 


நிவேதிதாவின் எழுத்தும் சிந்தனையும் எப்போதும் இந்திய விடுதலை குறித்தும், மக்களின் விழிப்புஉணர்வு குறித்தும் இருந்தது. இது இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. பெண் கல்விக்கு பெரிதும் பாடுபட்ட நிவேதிதா, பழைமையான கல்வி முறையை மாற்றி, நவீன முறையில் கல்வி அமைப்பு உருவாகப் போராடினார். `இயற்கையோடு இணைந்து குழந்தைகள் பாடம் கற்க வேண்டும்’ என்று குரல் எழுப்பினார். இந்தியாவின் பாரம்பரியம், புராணங்கள், நம்பிக்கைகள் குறித்து அறிந்துகொண்ட பின் அவற்றின் பின்னணியில் இருந்த நல்ல கருத்துகளை மேலைநாட்டினர் புரிந்துகொள்ளும் வகையில் எழுதினார். நிவேதிதாவின் பேச்சும் எழுத்துகளும்தான் அந்த நாளில் இந்தியாவைப் பற்றி அமெரிக்கர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கின. நிவேதிதா காலத்தில்தான் வங்காளம் கற்றறிந்த மேதைகளின் இடமாக மாறத் தொடங்கியது.

இந்தியக் கலைகளை பெரிதும் போற்றி, அவை வளரத் தூண்டுகோலாக இருந்தார். குறிப்பாக இந்திய ஓவியங்களை புனரமைக்க பாடுபட்டார். 1907-ம் ஆண்டு கொல்கத்தாவில் காங்கிரஸ் தலைவர் ஆனந்தமோகன் போஸின் வீட்டில்தான் முதன்முதலாக மகாகவி பாரதியார் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். முதல் சந்திப்பே அவரைப் பெரிதும் பாதிப்படையச் செய்தது. அப்போதுதான் பாரதியார் தனது பாடல்கள் யாவும் இனி தேச விடுதலைக்காகவே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தார்.

பாரதியாரின் பாடல்களைப் பாராட்டிய சகோதரி நிவேதிதா அவரிடம் 'எங்கே உங்கள் மனைவி?' என்று கேட்டார். அவர் 'எங்கள் வழக்கப்படி பெண்களை வெளியே அழைத்து வருவதில்லை' என்று கூறினார். இதைக் கேட்டு நிவேதிதா `உங்கள் மனைவிக்கே விடுதலை கொடுக்காத நீங்கள், இந்தியாவின் விடுதலையைப் பெறுவது எப்படி சாத்தியம்?' என்று கேட்டார். அந்த ஒரு கேள்விதான் பாரதியை பழைமைவாதத்தில் இருந்து மீட்டு, புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்தது.

"ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்கு பாரததேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என 1908 ஆம் ஆண்டு தாம் எழுதிய ’ஸ்வதேச கீதங்கள்’ முதல் பகுதியை பாரதியார் நிவேதிதைக்கு சமர்ப்பணம் செய்து எழுதியிருந்தார்.

1909 ஆம் ஆண்டு ’’ஸ்வதேச கீதங்கள்’ நூலின் இரண்டாம் பாகமான ’ஜன்ம பூமி’யையும் நிவேதிதைக்கு சமர்ப்பணம் செய்தார். "எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் சொல்லி உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என்று எழுதியிருந்தார்.

அரவிந்தருடன் இணைந்து இந்திய விடுதலை இயக்கத்திலும் பங்கேற்றார். தனது இந்த ஈடுபாட்டினால் ஆங்கில அரசு இராமகிருஷ்ண இயக்கத்தை முடக்காமல் இருக்க அவ்வியக்கத்தில் இருந்து தன் அதிகாரபூர்வ பிணைப்பை விலக்கிக் கொண்டார். வங்காளத்தின் அனுசீலன் சமிதி முதலான புரட்சி இயக்கங்களுடனும் தொடர்பிலிருந்தார்.

1902 டிசம்பர் 19ஆம் தேதி சென்னைக்கு வந்த சகோதரி நிவேதிதை இந்து இளைஞர் சங்கம் சார்பில் பச்சையப்பா அரங்கத்தில் டிசம்பர் 20ஆம் தேதி ’இந்தியாவின் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். சென்னையில் பல்வேறு உரையாடல், சொற்பொழிவுகள் மற்றும் பேட்டிகளிலும் கலந்து கொண்டார். சித்தாரிப்பேட்டையில் நிவேதிதை நிகழ்த்திய சொற்பொழிவு குறித்து 1902 ஆம் ஆண்டு டிசம்பர் மாத ’த மெட்ராஸ் மெயில்’ பத்திரிக்கை மிகவும் புகழ்ந்திருந்தது. 1903 ஜனவரி 20 ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்பட்ட சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி விழாவிலும் வந்து கலந்து கொண்டு மறுநாள் கல்கத்தா திரும்பினார் சகோதரி நிவேதிதை.

உபநிடதத்தில் இருக்கும் ருத்ரப் பிரார்த்தனைப் பாடல் ஒன்று சகோதரி நிவேதிதாவுக்கு விருப்பமானது `அஸதோ மா ஸதகமய தமஸோ ம ஜ்யோதிகமய ம்ருத்யோர் மா அம்ருதம் கமய’ என்ற இந்தப் பாடலை மனமுருகிக் கேட்பார். 1911-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், டார்ஜிலிங் சென்றிருந்த சகோதரி நிவேதிதா அங்கு தட்பவெப்பநிலை ஒப்புக்கொள்ளாமல் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

தனது இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்த நிவேதிதா, அக்டோபர் 7-ம் நாள் தனது சொத்துகள், படைப்புகள் எல்லாவற்றையும் இந்தியப் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கென எழுதி வைத்துவிட்டார். அக்டோபர் 13-ம் நாள் அதிகாலை சூரியனைக் கண்டு மகிழ்ந்து தனக்கு விருப்பமான ருத்ரப் பிரார்த்தனைப் பாடலைப் பாடி முடித்துவிட்டு 'என்னால் சூரிய உதயத்தைப் பார்க்க முடிகிறது' என்று சொல்லியவாறே தனது 44-வது வயதில் சமாதியானார் சகோதரி நிவேதிதா.

இந்திய விடுதலைப்போராட்ட வீராங்கனையாக, பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக, ஆன்மிகத் தேடலில் ஒரு வழிகாட்டியாக, இந்திய கல்வி முறையை சீர்திருத்திய கல்வியாளராக, பெண் விடுதலைப் போராளியாக, சிறந்த எழுத்தாளராக விளங்கியவர் சகோதரி நிவேதிதா. 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், இந்திய சரித்திரத்தில் அழுத்தமாக தன் தடத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

எங்கோ அயர்லாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, இந்திய தேசம் வந்த இந்தச் சிறகில்லாத தேவதை எத்தனை எத்தனை சேவைகளை ஆற்றி இருக்கிறது! எத்தனையோ கலைஞர்களை உருவாக்கி, அவர்களின் வழியே இந்தியாவின் பெருமைகளை ஓங்கச் செய்த சகோதரி நிவேதிதாவின் நினைவு நாள் இன்று. கலை, கல்வி, போராட்டம், சமூக சேவை என பலவித தளங்களில் நின்று இந்தியாவைப் போற்றிய இந்த தெய்வீகத் துறவியை இந்த நாளில் போற்றுவோம்.