செவ்வாய், 14 ஜூலை, 2020

தொழிலதிபர் சிவநாடார் பிறந்தநாள் - ஜூலை 14


கணினி மென்பொருள்துறையில் முக்கிய நிறுவனமான HCL நிறுவன அதிபரான திரு சிவ நாடார் அவர்களின் பிறந்தநாள் இன்று. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரின் அருகே உள்ள மூலைப்பொழி என்ற கிராமத்தைச் சார்ந்தவர் திரு சிவநாடார். இவரது தந்தை சிவசுப்பிரமணிய நாடார் தாயார் வாமசுந்தரிதேவி. இவர் தாய்வழி தாத்தா வழக்கறிஞர் சிவந்தி ஆதித்தன், இவரது தாய் மாமன் தினத்தந்தி பத்திரிகை நிறுவனர் திரு சி பா ஆதித்தனார்.

தனது தொடக்க கல்வியை கும்பகோணம் நகரிலும், பின்னர் மதுரையிலும் பயின்ற சிவநாடார் தனது பொறியியல் படிப்பை கோவை பி எஸ் ஜி கல்லூரியில் முடித்தார். டெல்லியில் உள்ள DCM நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றிய சிவ்நாடார் தனது நண்பர்களோடு இணைந்து 1976ஆம் ஆண்டு மைக்ரோகம்ப் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அவர்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வடிவில் வந்தது. 1977ஆம் ஆண்டு பதவியேற்ற ஜனதா அரசு இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று சட்டமியற்றியது. இதனை ஏற்காத கோகோகோலா ஐ பி எம் போன்ற நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறிட முடிவு செய்தன.

எதிர்காலம் கணினித்துறையில்தான் உள்ளது என்பதை மிகச் சரியாக கணித்த சிவநாடார் கணினி தயாரிப்பில் இறங்க முடிவு செய்தார். ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் நிறுவனம் ஏறத்தாழ இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. எண்பதுகளின் தொடக்கத்தில் பாரத நாட்டில் விற்பனையான கணினிகளில் பெரும்பான்மையானவை ஹெசிஎல் நிறுவனத்தின் தயாரிப்புகளே.

மென்பொருள்துறையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிவரும் ஹெசிஎல் நிறுவனத்தில் இன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். கணினி துறையில் பெரும் வேலை வாய்ப்பு இருக்கும் என்பதை கணித்து, அதற்கான பணியாட்களை உருவாக்க சிவநாடார் தன் நண்பர்களோடு இணைத்து NIIT என்ற பயிற்சி நிறுவனத்தையும் உருவாக்கினார். பாரத நாட்டில் கணினி விற்பன்னர்கள் பலர் உருவானதற்கு இந்த நிறுவனத்தின் பயிற்சி மிக முக்கியமான காரணமாகும்.

தான் நிறுவிய சிவநாடார் அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கான இரண்டு இலவசப் பள்ளிகள், அறக்கட்டளை மானியத்தில் இயங்கும் மூன்று பள்ளிகள், ஒரு பல்கலைக்கழகம் ஆகியவற்றை உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடத்தி வருகிறார். சென்னையில் சிவநாடார் அறக்கட்டளை நடத்தும் எஸ் எஸ் என் பொறியியல் கல்லூரி தமிழகத்தில் உள்ள தரமான கல்லூரிகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. தற்போது சென்னையில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைத் தொடங்க தமிழக அரசு சிவநாடாருக்கு அனுமதி வழங்கி உள்ளது.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்காருக்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப, பொருளை உருவாக்குவதிலும், அப்படி உருவாக்கிய பொருளை தேவை உடையவர்களுக்கு அளிப்பதிலும் முன்னுதாரணமாக விளங்கும் திரு சிவநாடார் அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.