வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மூத்த சங்க அதிகாரி மோரோபந் பிங்கலே நினைவுநாள் - செப்டம்பர் 21

தேசத்தின் பணிக்காக தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் முழுநேர ஊழியராகச் சேர்ந்து, சங்கத்தோடேயே வளர்ந்து, ஸ்வயம்சேவகர்களையே தங்கள் உறவினர்களாக அடைந்து, பாரத தாயின் பணிக்காகவே தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அளித்து, தாயின் பாதத்திலேயே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்த செய்து கொண்டு இருக்கின்ற தேசபக்தர்கள் பலர் உண்டு. அதில் முக்கியமான ஒருவர் மூத்த சங்க அதிகாரி மோரோபந் பிங்கலே அவர்கள்.1919ஆம் வருடம் டிசம்பர் மாதம் 30ஆம் நாள் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் நகரில் பிறந்த திரு மோரேஸ்வர் நீல்காந் பிங்கலே டாக்டர் ஹெட்கேவர் மற்றும் குருஜி கோல்வால்கர் ஆகியோரால் வார்த்தெடுக்கப்பட்டவர். 1941ஆம் வருடம் தனது ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்த பிங்கலே தனது 26ஆம் வயதில் 1946ஆம் ஆண்டு சங்கத்தின் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டார். ஏறத்தாழ அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சங்கப் பணியையே தனது வாழ்நாள் தவமாக மேற்கொண்டார். இருபதாண்டு காலத்திற்கும் மேலாக மஹாராஷ்டிர மாநிலத்தின் ஸஹ பிராந்த பிரச்சாரக் பொறுப்பை அவர் திறம்பட வகித்தார். பாரதத்தின் மேற்கு மாநிலங்களில் வேரூன்றி உள்ள ஹிந்துத்துவ ஒருமைப்பாடு அவரின் தளராத செயல்பாட்டின் விளைவுதான்.

1967ஆம் ஆண்டுக்குப் பிறகு பௌதிக் பிரமுக், பிரச்சாரக் பிரமுக் போன்ற பொறுப்புகளையும் பிங்கலே நிர்வகித்தார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஆரம்பகால தளகர்த்தராகவும் பிங்கலே இருந்தார். பரிஷத்தின் வழிகாட்டியாக ( மார்க்க தர்ஷக் ) அவர் இருந்தார். நெருக்கடி நிலையை அடுத்து சங்கம் தடை செய்யப்பட்ட சமயத்தில் சங்கத்தின் அறிவிக்கப்படாத ஆறு சர்சங்கசாலக்களில் பிங்கலே ஒருவர். ஏறத்தாழ இருபது மாத காலம், பாரதம் தனது ஜனநாயக உரிமைகளை இழந்து சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்த நேரத்தில், தலைமறைவாக இருந்து சர்வாதிகாரத்தை எதிர்க்கும் போராட்டத்தை பல்வேறு தளங்களில் பிங்கலே முன்னெடுத்தார்.

1980களின் ஆரம்ப வ வருடங்களில் தமிழகத்தில் தென்காசியை அடுத்த மீனாட்சிபுரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சகோதர்கள் மதம் மாறினார்கள். இந்த நிகழ்வு நாடெங்கும் அதிர்வலைகளை உண்டாக்கியது. ஜாதிகளைக் கடந்து ஹிந்துக்களாக ஒன்றிணைவோம் என்ற கோஷத்தோடும், தீண்டாமையை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் களைந்தெடுக்க வேண்டும் என்ற உறுதியோடு விஸ்வஹிந்து பரிஷத் நாடு தழுவிய ஒருமைப்பாடு யாத்திரையை ( ஏகாத்மதா யாத்ரா ) நடத்த முடிவு செய்தது. வடக்கே காட்மாண்டு முதல் தெற்கே ராமேஸ்வரம் வரை, கிழக்கே புனித கங்கை கடலில் கலக்கும் இடமான வங்காளத்தின் சாகர் தீவில் இருந்து மேற்கே சோமநாதபுரம் வரை, இமயமலையின் ஹரித்துவார் முதல் தென்கோடி கன்யாகுமரிவரை என்று மூன்று பிரிவாக இந்த யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரையை நிர்வகிக்கும் பொறுப்பு பிங்கலே வசம் ஒப்படைக்கப்பட்டது. நாடெங்கும் சுற்றி வந்து இந்த யாத்திரையை திட்டமிட்டு, மிகவும் செம்மையாக பிங்கலே நடத்திக்காட்டினார். சங்க பரிவாரங்களின் சேவையை புரிந்து கொள்ளவும், மதமாற்றம் ஒரு தேசிய அபாயம் என்பதை பொது மக்கள் அறிந்து கொள்ளவும் இந்த யாத்திரை பேருதவியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஞானரதம், சக்திரதம் என்ற யாத்திரைகள் முன்னெடுக்கப்பட்டன.

1983ஆம் ஆண்டு ராம் ஜானகி யாத்ராவை பிங்கலே ஒருங்கிணைத்தார். பூட்டிய கதவுக்குப் பின்னால் நடையில் நின்றுயர் நாயகன் ராமச்சந்திரன் சிறைப்பட்டு இருக்கும் காட்சிகளைக் கொண்ட ஏழு ரதங்கள் உத்திரப்பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலங்களில் வலம் வந்தன. ராமஜன்மபூமியை மீட்டெடுக்கும் போராட்டம் மீண்டும் நாடெங்கும் வலுப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1986ஆம் ஆண்டு வழிபாட்டுக்காக ராமர் கோவிலை திறந்து விட நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்தது.

மிகப் பெரும் காரியங்களை செய்து முடித்து விட்டு அதற்கான புகழைத் தேடாமல், செய்யும் பணியெல்லாம் பாரதத்தாயின் சேவைக்கே என்று அடுத்த பணியை நாடிச் செல்லும் உதாரண ஸ்வயம்சேவக் என்றே பிங்கலே அவர்களைக் கூறலாம்.

பாரத தாயின் பெருமைமிக்க இந்த மகன் 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் நாள் தாயின் காலடியிலேயே அர்ப்பணம் ஆனார். 

தோழர் பி ராமமூர்த்தி பிறந்தநாள் - செப்டம்பர் 20

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்  இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்  
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை - நீங்கி  வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை 

இன்று உலகத்தின் சீண்டப்படாத சித்தாந்தமாக, பாரத தேசத்தில் பெருவாரியான மக்களால் கைவிடப்பட சித்தாந்தமாக இருக்கும் பொதுவுடமை சித்தாந்தம் சென்ற நூற்றாண்டில் உலகத்தின் மூன்றில் ஒரு பங்குக்கு மேலான நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒன்றாகும். நேர்மையும் தியாகமும் பொருந்திய பலர் அந்த சித்தாந்தத்தின் தளகர்த்தார்களாக இருந்தனர். தமிழகத்தில் பிறந்து, பாரத நாட்டின் பொதுவுடமை சித்தாந்தத்தின் முக்கிய தலைவராக விளங்கிய தோழர் பி ராமமூர்த்தியின் பிறந்தநாள் இன்று.


1908ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தவர். இவருக்கு மூன்று வயதாகும் போது பஞ்சாபகேச சாஸ்திரி காலமாகிவிட்டார். சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். இளம் வயதில் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்து பாரதி பக்தரானார்.
  
1920இல் மகாத்மா காந்தி இந்திய இளைஞர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறி சுதந்திரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது, இவர் தனது படிப்பை நிறுத்திவிட்டு வட இந்தியா பயணமானார். வீட்டுக்குச் சொல்லாமல் வெளியேறி இவர் அலகாபாத் நகரத்தை அடைந்தார். வார்தா சென்று காந்திஜியைச் சந்தித்தார். அவருடைய ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார். அப்போது அங்கு இருந்த ராஜாஜி, இவரை ஊருக்குப் போய் படிப்பை முடித்துவிட்டு வா என்று திரும்ப அனுப்பி வைத்தார். ஊர் திரும்பிய ராமமூர்த்தி 1926இல் பள்ளி இறுதி வகுப்பு தேறினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். இவரது கவனம் அரசியலில் ஈடுபட்டதால் படிப்பு இவருக்குப் பிடிக்கவில்லை. மறுபடி இவர் வட இந்தியா சென்றார். காசியில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். மதன்மோகன் மாளவியா எனும் பெரும் காங்கிரஸ் தலைவர் தொடங்கிய இந்தப் பல்கலைக் கழகம் இவரது அரசியல் ஆர்வத்துக்கு இடமளித்தது.

பனாரஸ் பல்கலைக் கழகத்தில் படித்து முடித்த பின் ராமமூர்த்தி அயல்நாட்டுப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். 1932இல் சட்ட மறுப்பு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். அதில் ராமமூர்த்தி கலந்துகொண்டு ஒன்பது மாத சிறை தண்டனை பெற்றார்.

1929இல் லாஹூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில், 1933இல் கல்கத்தா நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டில், அதன் பின் பாட்னாவில் நடந்த அகில இந்திய காங்கிரசிலும் என்று பல்வேறு  கட்சியின் வருடாந்திர மாநாடுகளிலும் ராமமூர்த்தி கலந்து கொண்டார்.

காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரி சோஷலிச சிந்தனையாளர்களை ஒன்று திரட்டி ஜெயப்பிரகாஷ் நாராயண் ஒரு கூட்டம் நடத்தினார், அதில் இராமமூர்த்தி கலந்து கொண்டார். 1936இல் இரண்டாவது காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மகாநாடு மீரட் நகரில் நடந்தது. அதில் ராமமூர்த்தி கலந்து கொண்டார். 1934இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஆகையால் அந்த கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்ற பெயரில் செயல்படத் துவங்கினர். சென்னை மாகாண காங்கிரஸ் சோஷலிஸ்ட் இயக்கத்தை ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். அந்த இயக்கம் சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்கள் உருவாகின. மெல்ல மெல்ல இவரது தொழிற்சங்க, அரசியல் பணி தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

1937இல் இந்திய மாகாண சர்க்காருக்கு ஆங்காங்கே தேர்தல் நடந்தது. சென்னை மாகாண தேர்தலையொட்டி ஜவஹர்லால் நேரு சென்னை வந்தார். அவருடைய தேர்தல் கூட்டச் சொற்பொழிவை ராமமூர்த்தி மொழிபெயர்ப்பு செய்தார். அதற்காக அவர் கூட்டம் முடிந்த பின் கைது செய்யப்பட்டார். அந்தத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி பெரு வெற்றி பெற்றது. இங்கு ராஜாஜி தலைமையில் மந்திரிசபை அமைக்கப்பட்டது.

1937இல் இவர் காங்கிரசை விட்டு வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1939இல் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு சுபாஷ் சந்திர போசுக்கும் பட்டாபி சீதாராமையாவுக்கும் இடையே போட்டி. மகாத்மா காந்தி பட்டாபியை ஆதரித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஆதரவாக ராமமூர்த்தி சென்னை மாகாணத்தில் ஆதரவு திரட்டினார்.

1940இல் கம்யூனிஸ்டுகள் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். சென்னை சதி வழக்கு ((II): சென்னை சதி வழக்கு என்ற ஒன்று 1932இல் நடைபெற்றதுஇது இரண்டாவது சதி வழக்கு. வீட்டுக் காவலில் இருந்த ராமமூர்த்தி தப்பி தலைமறைவானார். அங்கிருந்தபடி இவர் கட்சிப் பணியாற்றி வந்தார். தலைமறைவான கம்யூனிச தோழர்களை  கண்காணித்த போலீஸ் அவர்களில் பலரை கைது செய்து சிறைக்கு அனுப்பியது. இவர்கள் மீது ஒரு சதி வழக்கு பதிவாகியது. இதில் பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானார்கள். .எஸ்.கே.ஐயங்கார், மோகன் குமாரமங்கலம், உமாநாத், ராமமூர்த்தி போன்றவர்கள் இதில் அடக்கம். 1941இல் இவர்கள் எல்லோரும் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்கள். பெல்லாரி சிறை கொடுமையான சிறையாக இருந்த போதிலும் அங்கு ராமமூர்த்தி மற்ற கைதிகளை உட்காரவைத்து மார்க்சிசம் பற்றிய வகுப்புகள் எடுத்து வந்தார்.

1941இல் ஜெர்மனியின் நாசி ஹிட்லர் சோவியத் யூனியன் மீது படையெடுத்தார். அது வரை ஏகாதிபத்திய யுத்தம் என்று வர்ணிக்கப்பட்ட யுத்தம் இப்போது மக்கள் யுத்தம் என்று கம்யூனிஸ்ட் கட்சியினரால் பிரகடனப் படுத்தப் பட்டது. இதையொட்டி இங்கிலாந்து நாடு ஜெர்மனிக்கு எதிராக நடத்தும் போருக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு கொடுத்தனர். அதனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

1946இல் கம்யூனிஸ்ட்டுகளை வெளியேற்ற காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. 1946இல் ராமமூர்த்தி மதுரையில் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்து போராடினார்.  மதுரை சதி வழக்கு என்று ஒன்றை இவர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தொடுத்தது. அதிலும் இவர் விடுதலையாகி விட்டார். சுதந்திரம் வரும் நேரம் இவரும் சுதந்திரமாக வெளிவந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது. ராமமூர்த்தி மறுபடியும் தலைமறைவானார். இவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார்.

1952இல் முதல் சுதந்திர இந்திய தேர்தல். ராமமூர்த்தி மதுரை வடக்கிலிருந்து போட்டியிட்டு சிறையில் இருந்தபடி வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் காங்கிரசுக்கு சென்னை மாகாண சட்டசபையில் மெஜாரிடி கிடைக்கவில்லை. உடனே காங்கிரசார் ராஜாஜியை அழைத்து மந்திரிசபை அமைக்கச் சொன்னார்கள். அவரும் அமைத்து, சில எதிர் கட்சி உறுப்பினர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு அரசு செய்யலானார். பி.ராமமூர்த்திதான் எதிர் கட்சித் தலைவர். மாகாண முதல்வராக ராஜாஜியும், எதிர்கட்சி வரிசையில் ராமமூர்த்தி முதலான பிரபல கம்யூனிஸ்டுகளும், அந்தக் கால சட்டசபை நடவடிக்கைகளும், விவாதங்களும் போல இனி இருக்க முடியுமா? சந்தேகம்தான்.

1952இல் இவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பொன்னி, வைகை என்று இரண்டு பெண்கள். பின்னர் பல சித்தாந்த போராட்டங்களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. இவர் மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். அங்கு தொழிற்சங்கம் அமைந்தது. சி..டி.யு. என்பது அது. அதன் தலைவர்களில் ஒருவரானார் ராமமூர்த்தி.


ஆரிய மாயையா - திராவிட மாயையா ? விடுதலை போராட்டத்தில் தமிழகம் என்று பி ராமமூர்த்தி ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார். விடுதலை போராட்ட காலத்தில் நடந்த பல்வேறு தகவல்களை இதில் காணலாம்.

முதிர்ந்த வயதின் காரணமாக இவர் 1987, டிசம்பர் 15 அன்று காலமானார்.