புதன், 23 அக்டோபர், 2019

சுபேதார் ஜோகிந்தர் சிங் - நினைவுநாள் அக்டோபர் 23.

இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரமவீர்சக்ரா விருது பெற்ற சுபேதார் ஜோகிந்தர்சிங் அவர்களின் நினைவுநாள் இன்று. 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனாவுடனான போரில் பெரும் வீரத்தைக் காட்டி, உச்சகட்டமாக தன உயிரைத் தியாகம் செய்து வீரமரணம் அடைந்தவர் திரு ஜோகிந்தர்சிங் அவர்கள்.பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த ஷேர்சிங் சஹனான் - கிருஷ்ணன் கவுர் தம்பதியரின் மகனாக 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் நாள் பிறந்தவர் திரு ஜோகிந்தர் சிங். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் அவர் அன்றய பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்தார். அவர் அன்றய ராணுவத்தின் சீக்கிய பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். ராணுவத்தில் சிறப்பு பயிற்சிகளை முடித்து அவர் வீரர்களின் பயிற்சியாளராகவும் விளங்கினார். இரண்டாம் உலகப் போரிலும், பின்னர் 1947ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் போரிலும் ஜோகிந்தர் கலந்துகொண்டார்.

1962ஆம் ஆண்டு சீனா இந்தியாமீது படையெடுத்தது. களநிலவரம் தெரியாமல் கற்பனையில் மூழ்கி இருந்த தலைமையால் இந்திய ராணுவம் தோல்வியைச் சந்தித்தது. ஆனாலும் எல்லா இடர்களுக்கு நடுவிலும், இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் துணிச்சலைக் காட்டி பெரும் சாகசங்களை நிகழ்த்தினர்.

அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள நம்கா சூ என்ற ஆற்றின் அருகே உள்ள தளத்தைக் காக்க சீக்கியப் படை பிரிவு களம் இறங்கியது. மிகக் குறைவான தளவாடங்களையும் அதைவிடக் குறைவான வீரர்களையும் கொண்ட ஒரு சிறு படைப்பிரிவு முழுவதுமாக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்து, முடிந்தவரை சீனப் படைகளைத் தடுத்து நின்றனர். ஆனாலும் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்த சீனப் படை எல்லா இந்திய வீரர்களையும் கொன்று அந்தத் தளத்தைக் கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து முன்னேறிய சீனப்படையை பும்லா கணவாய் அருகே சீக்கியப் படையின் இன்னொரு பிரிவு எதிர்கொண்டது. அந்த படைக்கு தலைமை வகித்தவர் சுபேதார் ஜோகிந்தர் சிங். மொத்தம் இருபது வீரர்கள் கொண்ட படை அது. கேந்த்ர முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தளத்தை கைப்பற்ற அடுத்தடுத்து மூன்று முறை தலா 200 வீரர்கள் கொண்ட படையை சீனா அனுப்ப வேண்டி வந்தது. இரண்டு முறை வந்த படையெடுப்பை வெற்றிகரமாக முறியடித்து, எதிரிகளை முழுவதுமாக சீக்கியப் படைப்பிரிவு கொன்றது. ஆனால் அதில் நமது படையின் பாதி வீரர்கள் மரணமடைந்தார். மூன்றாம் முறை அடுத்த 200 சீன வீரர்கள் தாக்குதலை பத்தே இந்திய வீரர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதற்கிடையில் இந்தியப் படையின் குண்டுகள் எல்லாம் காலியாகி விட்டது.

கையில் துப்பாக்கியோடு 200 சீன வீரர்கள் ஒருபுறம், தாயகத்தைக் காக்கும் பணியில் எந்த தளவாடங்களும் இல்லாத பத்து இந்திய வீரர்கள் மறுபுறம். ஆனாலும் போரில் பின்வாங்குவது என்பது சீக்கிய வீரர்களின் வரலாற்றிலேயே இல்லாத ஓன்று. துப்பாக்கியில் குண்டு இல்லாவிட்டால் என்ன ? துப்பாக்கி முனையில் சொருகப்பட்ட கத்தி உள்ளதே. 'ஜெய் போலோ ஸோ நிஹால் ஸத் ஸ்ரீ அகால்' இதுதான் சீக்கியப் படைப்பிரிவின் போர் முழக்கம். குரு கிரந்த சாஹிபின் புனித மந்திரமான ஸத் ஸ்ரீ அகால் என்ற முழக்கத்தோடு துப்பாக்கியில் உள்ள கத்தியை ஆயுதமாக கையில் ஏந்தி சுபேதார் ஜோகிந்தர்சிங் தலைமையில் மீதம் இருந்த பத்து வீரர்களும் எதிரிகளை நேருக்கு நேராக எதிர்கொண்டனர். எதிரியின் படையில் பெரும் சேதத்தை உருவாக்கி, அவர்கள் பாரத வீரத்தை பாரெங்கும் பறை சாற்றினர்.

எண்ணிக்கையிலும், தளவாடத்திலும் அதிகமாக இருந்த சீனர்கள் அந்தப் போரில் வெற்றி அடைந்தனர். ஆனால் அதற்காக அவர்கள் அளிக்க வேண்டிய விலை மிக அதிகமாக இருந்தது. சுபேதார் ஜோகேந்தர்சிங் போர் கைதியாக சீனர்களால் சிறை பிடிக்கப்பட்டார். ஆனால் சண்டையில் ஏற்பட்ட காயங்களால் அவர் மரணம் அடைந்தார்.

பிரமிக்கத் தக்க வீரத்தைக் காட்டி, மிகப் பெரும் தியாகத்தைச் செய்து பலிதானியான சுபேதார் ஜோகேந்தர்சிங் அவர்களுக்கு பாரத ராணுவத்தின் மிகப் பெரும் விருதான பரம்வீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது. முழுமரியாதையோடு ஜோகிந்தர்சிங்கின் அஸ்தியை சீனா பாரத நாட்டிடம் ஒப்படைத்தது.

எண்ணற்ற ராணுவ வீரர்கள் நாட்டின் எல்லையைக் காத்து நிற்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்கள்.