வெள்ளி, 5 ஜூன், 2020

அரசாளும் துறவி - யோகி ஆதித்யநாத் ஜூன் 5

நாடாளும் அரசர்கள் பற்றற்று துறவிகள் போல இருக்கவேண்டும் என்பது பாரத சித்தாந்தம். ஆனால் ஒரு துறவியே அரசாள்வது என்பது ஒரு புதிய பார்வை. அப்படி நாட்டின் மிகப்பெரும் மாநிலமான உத்திரப்பிரதேசத்தை ஆட்சி செய்யும் கோரக்பூர் மடத்தின் பீடாதிபதியான யோகி ஆத்யநாத் அவர்களின் பிறந்ததினம் இன்று.


உத்திரப்பிரதேச வனத்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த ஆனந்த்சிங் பிஷ்ட் என்பவரின் மகனாக 1972ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பிறந்தவர் அஜய்மோகன் பிஷ்ட். ஆம் இதுதான் யோகியின் இயற்பெயர். நான்கு சகோதர்களும் மூன்று சகோதரிகளும் கொண்ட பெரிய குடும்பத்தின் இரண்டாவது மகன் யோகி. ஹேமாவதி நந்தன் பகுகுணா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெட்ரா அஜய்மோகன் ராம்ஜன்மபூமி இயக்கத்தில் கலந்து கொண்டார். அப்போது கோரக்பூர் மடத்தின் அன்றய பீடாதிபதியாக மஹந்த் அவைத்யநாத் அவர்களின் சீடரானார். உலக வாழ்வைத் துறந்தது துறவியான அஜய்மோகனுக்கு ஆதித்யநாத் என்ற யோகபட்டம் அளிக்கப்பட்டது.

கோரக்பூர் மடத்தின் அதிபதிகள் பல்லாண்டுகளாகவே ராமஜன்ம பூமியை விடுவிக்கும் இயக்கத்தில் பெரும்பங்காற்றியவர்கள். அந்தப் பாதையை யோகி ஆதித்யனாத்தும் பின்தொடர்ந்தார். மஹந்த் அவைத்யநாத் மஹாசமாதி அடைந்த பிறகு யோகி கோரக்பூர் மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். கோரக்பூர் மடம் கல்வி நிலையங்கள் நடத்துவது, மருத்துவமனைகளை நடத்துவது போன்ற பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறது. உத்திரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் நடைபெறும் அந்த சமூகப் பணிகளை இன்னும் யோகி விரிவுபடுத்தினார்.

தீவிரமான ஹிந்துத்துவ சிந்தனை கொண்ட கோரக்பூர் மடாதிபதிகள் திக்விஜயநாத், அவைத்யநாத் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்திருக்கிறார்கள். யோகியும் தனது 26ஆம் வயதில் கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 1998ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஐந்து முறை தொடர்ச்சியாக அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக யோகி பணியாற்றினார். 16ஆவது நாடாளுமன்றத்தில் யோகி 77% கூட்டங்களில் கலந்து கொண்டு 284 கேள்விகளை எழுப்பி 56 விவாதங்களில் கலந்து கொண்டு தன் தொகுதியின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி உள்ளார்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற உத்திரப்பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. பாஜக யோகி ஆதித்யநாத்தை உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக நியமித்தது. பல ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, வளர்ச்சிப் பணிகளில் பின்தங்கி இருந்த மாநிலத்தை மாற்ற யோகி பல்வேறு கடினமான முடிவுகளை எடுக்கத் தொடங்கினார். சட்ட விரோதமாக நடைபெற்று வந்த இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டன. பல்வேறு சமூக விரோதிகள் இரும்புக்கரம் கொண்டு அடைக்கப்பட்டனர். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கல்வி மட்டும்தான் தொடர்ச்சியான மாறுதலைக் கொண்டு வரும் என்பதை முழுமையாக அறிந்த யோகி, கல்வித்துறையில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தார். மாநிலத்தில் உள்ள ஒருலட்சத்து அறுபதாயிரம் பள்ளிகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் காயகல்ப் திட்டம் அறிவிக்கப்பட்டது. சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள், மின் இணைப்பு, புதிய வகுப்பறைகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றை உருவாகும் திட்டம் இது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இவை முன்னெடுக்கப்பட்டது.  பல்வேறு அமைச்சர்களும் அதிகாரிகளும் எதிர்பாராத நேரங்களில் பள்ளிகளைப் பார்வையிட்டு போதுமான வசதிகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள். இதுவரை நாற்பத்தி ஆறாயிரம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் எழுபதாயிரம் ஆசிரியர்களை நியமிக்கும் திட்டமும் உள்ளது. அதுபோல மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் வழிகளும் அதற்கான முன்னெடுக்களும் பெரும் அளவில் நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய்த்தோற்று உத்திரப்பிரதேசத்திற்கு புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் ஒரே நேரத்தில் அளித்துள்ளது. பாரதம் முழுவதும் பரவியுள்ள பல லட்சம் தொழிலார்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பெரும் பணி யோகியின் முன் உள்ளது. அதே நேரத்தில் சீனாவில் இருந்து வெளியேறும் யோசனையில் உள்ள பல்வேறு நிறுவனங்களை உத்திரப்பிரதேசத்திற்கு வரவழைக்கும் வாய்ப்பையும் இந்த நோய்தோற்று யோகிக்கு தந்துள்ளது. அதற்கான முயற்சியில் யோகி முழு மூச்சாக இயங்கிக்கொண்டு உள்ளார்.

உத்திரப்பிரதேசத்தை முன்னேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள யோகி ஆதித்யநாத் வெற்றி அடையட்டும் என்ற வாழ்த்துகளை ஒரே இந்தியா தளம் தெரிவித்துக்கொள்கிறது.