பழமையும் புதுமையும், இளமையும் கொண்ட செம்மார்ந்த தமிழ்மொழிக்கு தன்னலம் இல்லாமல் தொண்டாற்றியவர்களும் உண்டு, எங்களால்தான் தமிழ்மொழியே உயிர் வாழ்கிறது என்று தம்பட்டம் அடிப்பவர்களும் உண்டு. இருவேறு உலகத்து இயற்கை என்பது உண்மைதானே. தமிழின் கலைக்களஞ்சியத்தை தொகுப்பாசிரியராக இருந்து தொகுத்தவர், அதன் பின்னர் குழந்தைகள் கலைக்களஞ்சியத்தை தமிழில் உருவாக்கியவர், அப்பழுக்கற்ற தேசபக்தர், கல்விப் பணியில் ஈடுபட்டவர், மரபியல், உளவியல் பற்றி எளிய தமிழில் புத்தகங்களை இயற்றியவர், கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், கவிதை, குழந்தைகள் இலக்கியம் என்று தமிழின் எல்லா தளங்களிலும் இயங்கியவர், தமிழிசையில் பல்வேறு பாடல்களை இயற்றியவர், பத்திரிகை ஆசிரியர் என்ற பன்முகவித்தகர் திரு பெரியசாமி தூரனின் பிறந்தநாள் இன்று.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகே உள்ள மஞ்சக்காட்டு வலசு என்ற சிற்றூரில் பழனிவேலப்பக்க கௌண்டர் - பாவாத்தாள் தம்பதியினரின் மகனாக 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் இவர். கொங்குநாட்டின் தூரன் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர் பெரியசாமி தூரன் என்று அழைக்கப்பட்டார். தனது தொடக்கக் கல்வியை சொந்த கிராமத்திலும், உயர்நிலைப் படிப்பை ஈரோட்டிலும், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பையும் தொடர்ந்தார். புரட்சிவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரை ஆங்கில அரசு தூக்கில் இட்டதைத் தொடர்ந்து, கல்லூரியை விட்டு வெளியேறினார். பட்டப்படிப்பை முடிக்காமல் போனாலும் கோபிச்செட்டிபாளையம் வைரவிழா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து அவினாசிலிங்கம் செட்டியார் நடத்திவந்த ராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், பின்னர் தலைமையாசிரியராகவும் பணியாற்றினார். இவர் பணிபுரிந்த காலகட்டத்தில் அந்தப் பள்ளிக்கு மஹாத்மா காந்தி வருகை புரிந்து உள்ளார். அவினாசிலிங்கம் செட்டியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தபோது, செட்டியார் மனமுவந்து அளித்த முப்பது ரூபாய் மாதச் சம்பளத்தை அதிகம் என்று மறுத்து வெரும் பதினைந்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு பணியாற்றினார்
அவினாசிலிங்கம் செட்டியார் கல்வியமைச்சராகப் பணியாற்றிய போது, தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், கலைச்சொற்களை தமிழில் உருவாக்கவும் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். அந்த அமைப்பின் சார்பில் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாகும் முயற்சி தொடங்கியது. இந்த மகத்தான படைப்பை உருவாகும் பணிக்கு முதன்மை ஆசிரியராக தூரன் நியமிக்கப்பட்டார். பத்தொன்பது ஆண்டுகள் இடையறாது உழைத்து தூரன் கலைக்களஞ்சியத்தை வெளிக்கொண்டு வந்தார். அதன் பிறகு பத்து தொகுதிகள் கொண்ட சிறுவர்கள் கலைக்களஞ்சியத்தையும் அவர் உருவாக்கினார்.
தமிழ்மொழியே இசையானது, இசைபோல இனிமையானது. தமிழில் தேர்ச்சி பெற்ற தூரனுக்கு இசைப்பாடல்கள் புனையும் திறமை இயல்பாகவே இருந்தது. அந்த காலகட்டத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ராஜாஜி, ரசிகமணி டி கே சி ஆகியோர் தமிழிசை மீண்டும் தழைக்கப் பாடுபட்டுக்கொண்டு இருந்தனர். அறுநூறுக்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களை தூரன் இயற்றினார்.
திரு.தூரன் அவர்கள், நாட்டுபுறப் பாடல்களும், கர்னாடக இசைக் கீர்த்தனைகளும், ஸ்வரங்களும் இயற்றியுள்ளார். டி.கே.பட்டம்மாள், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், என்.சி.வசந்தகோகிலம், டி.வி.சங்கரநாராயணன், டைகர் வரதாச்சாரியார், முசிறி சுப்ரமணிய ஐயர், போன்ற இசையுலக ஜாம்பவான்கள், இவருடைய இசையறிவை மெச்சி, இவர் இயற்றிய பாடல்களுக்கு அடிமைகளாகவே இருந்து, தங்கள் கச்சேரிகளில் அவற்றைப் பாடாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம். ’சாரங்கா’ ராகத்தில் அமைந்த “ஞானநாதனே”, ‘பிருந்தாவன சாரங்கா’வில் அமைந்த “கலியுக வரதன்”, ‘மாண்ட்’ ராகத்தில் அமைந்த “முரளீதரா கோபாலா”, ‘சாவேரி’யில் அமைந்த “முருகா முருகா”, ‘காபி’யில் பாடிய “பழனி நின்ற”, ‘கீரவாணி’யில் அமைந்த “புண்ணியம் ஒரு கோடி”, ‘சுத்த சாவேரி’ ராகத்தில் அமைந்த “தாயே திரிபுரசுந்தரி” ஆகியவை இவர் இயற்றியுள்ள மயங்கவைக்கும் கீர்த்தனைகளில் சில.
தூரனின் சாதனைகளில் முக்கியமானது பாரதியார் 1904 முதல் 1921 வரை சுதேசமித்திரன் இதழில் எழுதிய படைப்புகளைத் தேடி எடுத்து ஆவணப்படுத்தி காலவரிசைப்படி தொகுத்து ‘பாரதி தமிழ்’ என்ற பேரில் வெளியிட்டது. பாரதி ஆய்வுகள் தமிழில் தொடங்கப்படுவதற்கான வழிகாட்டி முயற்சி என்பதுடன் பாரதி படைப்புகள் அழிந்துவிடாமலிருக்க தக்க நேரத்தில் செய்யப்பட்ட பெரும்சேவையுமாகும். திரு.வி.கவின் ஆலோசனைப்படி இதை தூரன் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
பாரம்பரியம், கருவில் வளரும் குழந்தை, பெற்றோர் கொடுத்த பெரும்கொடை என்று மரபியலிலும் , குழந்தை உள்ளம், தாழ்வு மனப்பான்மை, மனமும் அதன் விளக்கமும் என்று பல்வேறு புத்தகங்கள் உளவியலிலும் தூரன் எழுதி உள்ளார். இன்றுபோல அறிவியல் வளராத அம்பதுகளில், கலைச்சொற்கள் தமிழில் உருவாகாத காலத்தில் இப்படி எழுதவேண்டும் என்றால் அதற்காக தூரன் எவ்வளவு உழைத்து இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தாலே மலைக்க வைக்கிறது.
தமிழ் இசை சங்கத்தின் இசைப் பேரறிஞர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் பாரத அரசின் பத்மபூஷன் விருதுகள் இவர்க்கு வழங்கப்பட்டு உள்ளன.
வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காக அயராது பாடுபட்ட திரு பெரியசாமி தூரன் 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் காலமானார்.