வியாழன், 2 ஜூலை, 2020

விண்வெளிக்கு பாதை அமைத்த மயில்சாமி அண்ணாதுரை பிறந்தநாள் - ஜூலை 2


தமிழகத்திற்கு புகழ் சேர்த்த அறிவியல் அறிஞர்களுள் முக்கியமான திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாள் இன்று.

1958ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி அருகே உள்ள கொத்தவாடி கிராமத்தில் பிறந்தவர் இந்த அறிஞர். தனது கல்வியை தமிழ்வழி மூலம் அதே கிராமத்தில் முடித்த திரு அண்ணாதுரை தனது பொறியியல் இளங்கலை படிப்பை கோவை அரசு பொறியியல் கல்லூரியிலும், முதுகலை படிப்பை கோவை PSG கல்வி நிலையத்திலும் முடித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்ற திரு அண்ணாதுரை தனது 24ஆவது வயதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைத்தார். தந்து நெடிய பணிக்காலத்தில் அவர் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு தலைவராகப் பணியாற்றினார்.

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்று மஹாகவி பாரதி முரசு கொட்டியது போல, சந்திரனுக்கும் பின்னர் செவ்வாய் கிரகத்திற்கும் ஆராய்ச்சிப் பணிக்காக செயற்கைகோள்களை அனுப்பும் பணியில் திரு அண்ணாதுரையின் பங்கு மகத்தானது.

2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சீறிப் பாய்ந்த சந்திராயன் I, நவம்பர் 8ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் நிலை கொண்டது. 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் நாள் சந்திரனில் இறங்கிய ஆராய்ச்சி விண்கலம் வான்வெளியை வெற்றிகொள்வதில் யாருக்கும் பாரத விஞ்ஞானிகள் சளைத்தவர்கள் இல்லை என்று அறிவித்தது. சந்திரனில் இறங்கிய நான்காவது தேசம் என்ற பெருமை நாட்டிற்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சந்திராயன் II என்ற விண்வெளி ஆராய்ச்சி முயற்சியும் வெற்றிகரமாக நிறைவேறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை வெற்றிகொள்ளும் பணிக்கு அரசு அனுமதி அளித்தது. 2013ஆம் வருடம் அக்டோபர் 28ஆம் தேதி  ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கிளம்பிய மங்களாயன், ஏறத்தாழ ஒருமாத காலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்தது. அதன் பின்னர் ஏழு நிலைகளில் வெவ்வேறு நீள்வட்டப் பாதைகளுக்கு தன்னை உயர்த்திக்கொண்டு 2014ஆம் செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த முதலாவது ஆசிய நாடு மற்றும் முதல் முறையிலேயே வெற்றி அடைந்த முதல் நாடு என்ற பெருமையை நாடு அடைந்தது.

வறுமைக்கோட்டுக்கு கீழே மக்கள் வசிக்கும் நாட்டிற்கு இவையெல்லாம் தேவையா என்று  சில போராளிகள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் விண்ணை வெற்றிகொள்வதன் மூலம் அடையும் பலங்கள் பல. தொலைத்தொடர்பு, மழை, புயல் ஆகியவற்றை அறிந்துகொள்ளுதல் போன்ற மக்களுக்கு பயன்படும் பல்வேறு துறைகளுக்கு விண்வெளி ஆராய்ச்சி பயன்படுகிறது.

திரு அண்ணாதுரையின் பங்களிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆகியவை கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

இந்திய அரசு அண்ணாதுரைக்கு 2016ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி சிறப்பு செய்துள்ளது.

அறிஞர்களின் வாழ்வு நமது மாணர்வர்களை பல்வேறு ஆராய்ச்சி துறையில் ஈடுபடுத்தும், மேலும் பலப்பல திறமைசாலிகளை உருவாக்க பயனாகும் என்பதில் ஐயமில்லை.