திங்கள், 11 மே, 2020

தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி - மே 11

அறியாமை இருள் மனிதகுலத்தைச் சூழும்போதெல்லாம் உலக ஆசான் ஒருவர் தோன்றி உலகை வழிநடத்துவார் என்பது அநேகமாக இறைநம்பிக்கை உடைய அனைவருக்கும் பொதுவான நம்பிக்கை. அதுபோன்ற ஒரு உலக குரு ஒருவரைத்தான் தியாசபிக்கல் சொசைட்டி என்ற ப்ரம்மஞானசபையினரும் தேடிக்கொண்டு இருந்தார்கள். அவ்வாறு அவர்களால் கண்டறியப்பட்ட உலக குருதான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.


ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் 1895-ல், ஒரு தாசில்தாரின் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார் ‘ஜிட்டு’ கிருஷ்ணமூர்த்தி. அவரது பத்தாவது வயதில் தாயார் மரணம் அடையவே, தந்தை நாராயணய்யா சென்னைக்குக் குடி பெயர்ந்து,அடையாறில் அப்போது அன்னிபெசன்ட் அம்மையாரின் தலைமயில் இயங்கி வந்த பிரம்ம ஞான சபையில் வேலைக்குச் சேர்ந்தார். கிருஷ்ணமூர்த்தியும் அவரது தம்பி நித்யாவும் சபைக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலேய முறைப்படி கல்வியும், பல்வேறு நாடுகளில் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. குண்டலினி யோக முறையைக் கற்றுத் தேர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.

1925-ம் ஆண்டு தம்பி நித்யாவின் மரணம், கிருஷ்ணமூர்த்திக்கு முழுமையான விழிப்பு உணர்வைக் கொடுத்தது. ‘ நெருங்கியவரின் மரணத்தின்போது நாம் கண்ணீர் வடிப்பது, உண்மையில் இறந்தவருக்காக அல்ல; நாம் முன்பு போல் வலிமையாக இயங்க முடியாது, அவர் மூலம் நமக்கு இனி சந்தோஷமோ, உதவிகளோ கிடைக்காது என்பதாலேயே அழுகிறோம்’ என்பதைக் கண்டுகொண்டார். 1929-ம் வருடம் ‘அனைத்துலக ஆசான்’ என்ற பட்டத்தையும், கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களையும் தூக்கி எறிந்த கிருஷ்ண மூர்த்தி, ‘‘நான் யாருக்கும் குருவாக இருக்க விரும்பவில்லை. எந்த அமைப்பிலும் கட்டுப்படாமல் சுதந்திரமாக இருந்தால்தான், மக்களுக்குச் சுதந்திரம் பற்றி என்னால் விளக்கிச் சொல்ல முடியும்’’ என்றார்.

பாரதம் உலகிற்கு அளித்த தத்துவ ஞானிகளில் பெரிதும் மாறுபட்டவர் ஜே கே. தொடர்ச்சியான சொற்பொழிவுகள் மூலம் அவர் அறியப்படலானார். ஒருபோதும் அவர் எந்த நூல்களையோ அல்லது அவருக்கு முந்தய குருமார்களையோ தனது பேச்சில் குறிப்பிட்டதே இல்லை. நூல்களோ குருமார்களையோ அவர்கள் கண்டடைந்த பாதையைச் சொல்லுவார்கள். ஆனால் உங்களுக்கான பாதையை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும், உங்கள் பயணத்தை நீங்களேதான் பயணிக்க வேண்டும். அதற்கு முழுமையான விழிப்புணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும். ஜேகேயின் அறிவுரையின் சாரம் இதுதான்.

கடவுள்கள், கோவில்கள், நூல்கள், சாதி, மத மொழி மற்றும் நாட்டோடு உங்களுக்கு உண்டான பற்று என்பது மனித ஒருமைப்பாட்டுக்கு  எதிரானது. மனிதர்க்கு தேவை மாற்றமல்ல, விழிப்புணர்வே என்று உலகம் முழுவதும் சுற்றி வந்து மக்களிடம் அவர் கூறினார். தனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ தன்னை வழிபடுங்கள், உங்களை நான் கடையேற்றுகிறேன் என்றோ அவர் சொன்னதே இல்லை. யோசியுங்கள், விவாதியுங்கள், விழிப்புணர்வோடு வாழ்க்கையை நடத்துங்கள் என்றுதான் அவர் கூறினார்.

கேள்வி, கேள்விக்கு மேல் அடுத்த கேள்வி இதுதான் ஜேகேயின் உரையாடலின் பாணி. உதாரணமாக கோபம் ஏன் வருகிறது?' என்று அவரிடம் கேள்வி கேட்டால், 'கோபம் என்பது என்ன?' என்று நம்மிடம் திருப்பிக் கேட்பார். கோபம் எங்கிருந்து வருகிறது? அது தொடங்கும் இடம் எது? முடியும் இடம் எது? அதனால் வரும் விளைவுகள் என்ன? இதுபோன்ற எதிர்க் கேள்விகளுடன் உரையாடத் தொடங்குவார். அந்த உரையாடலின் முடிவில் கேள்விக்கான பதில், கேள்வி கேட்டவருக்குக் கிடைக்கும். இதுதான் ஜே.கே. என்கிற ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ பலம்.

எந்தத் தத்துவத்தையும் உருவாக்காமல், 20ஆம் நூற்றாண்டின் தத்துவ ஞானிகளில் ஒருவராக அவர் மதிக்கப்படக் காரணம் வாழ்க்கை பற்றியும் அதன் பொருள் பற்றியும் பேசியதுதான். இவரது சிந்தனைகள் நூல்களிலும் ஒலிப் பேழைகளிலும் கிடைக்கின்றன. அதன் மூலம் வாழ்க்கை பற்றிய தேடலின் உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.

“சந்தோஷமாக இருப்பதற்கு, நமக்கு மதங்கள் வேண்டுமா? அன்பாக இருப்பதற்கு, நாம் கோவில்களை நிறுவ வேண்டுமா? கோவில்களின் இருண்ட கருவறையிலோ, பெரிய அமைப்புக்களின் வெளிச்சமிக்க அரங்குகளிலோ சத்தியத்தை கண்டறிய முடியாது. புத்தகங்களிலிருந்தோ சடங்குகளிலிருந்தோ சத்தியத்தை கண்டறிய முடியாது. கடற்கரைக்கு சென்று பாருங்கள். அங்கு, வீசுகின்ற காற்றில் அலைகள் ஒன்றுக்கொன்று முட்டிமோதிக் கொள்கின்றன. அவ்வழகு அனைத்தையும் ஒரு குறுகிய கோவிலுக்குள் சேர்த்து கட்டிவைக்க விரும்புகிறீர்களா? உங்கள் மனதையோ இதயத்தையோ எதனாலும், எவராலும் எல்லைக்குட்படுத்த அனுமதிக்காதீர்கள். அப்படி அனுமதித்தால், நீங்கள் மற்றொரு மதத்தையோ, மற்றொரு கோவிலையோ நிறுவுவீர்கள். நீங்கள் சிறிய தெய்வங்களை உருவாக்கி, அதனை சிறிய கோவில்களில் வைத்து வணங்குதலாகாது. சூரியனே நமக்கிருக்கும்போது, யார் ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியை வணங்குவர்?” இப்படியான கேள்விகளோடு இணைந்த பேச்சு அனைவரையும் அதிரவைத்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

இளமைப்பருவத்திலேயே வியக்கத்தக்க வகையில் புகழடைந்த கிருஷ்ணமூர்த்தி, துக்கத்திலிருந்து மீட்பவர் என்றும், உலக ஆசான் (World Teacher) என்றும், புத்தர் என்றும், ஏசு கிருஸ்து என்றும், இன்னும் பலவாறாகவும் போற்றப்பட்டார். அவர் ஒரு சிறந்த ஞானி, தத்துவமேதை, சிறந்த சொற்பொழிவாளர், இலக்கிய கர்த்தா, கவிஞர், கல்வியாளர், ஆன்மீகத்தில் தனித்து பயணித்த யாத்ரீகர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பயணித்து, பிற ஒளியை நாடாமல், தானே தனக்கு ஒளியாக திகழ வேண்டியதின் அவசியத்தை, தன் உரையைக் கேட்க வருபவர்களுக்கு சுட்டிக் காட்டி வலியுறுத்தி வந்தார்.

காலத்தாலோ சூழ்நிலைகளாலோ தேய்ந்துவிடாமல், அப்பணியின் வேகம் மற்றும் தீவிரத்தன்மையானது குறையாமல் நீடித்தது. சொல்லப்போனால், கிருஷ்ணமூர்த்தியின் வயது கூடிக்கொண்டுப்போகையில், அப்பணியில் புதிய சக்தியாற்றலும் வேகமும் அதிகரித்து வெளிப்பட்டது. ‘சொற்பொழிவாற்றுவதை நிறுத்திவிட்டால், தனது உடல் மடியும், உடலின் ஒரே நோக்கம் போதனைகளை வெளிப்படுத்துவதே’ என்று தனது இறுதி காலத்தில் கிருஷ்ணமூர்த்தி கூறியதுண்டு.

சென்னையில் ஆற்றிய கடைசி சொற்பொழிவிற்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு, தனது 91-ஆம் (17.02.1986) வயதில் ஓஹாயில் கிருஷ்ணமூர்த்தி அமரரானார்.

இறுதி நாட்கள் வரையிலும், உலகின் பற்பல நாடுகளுக்கும் நகரங்களுக்கும் பயணித்து சொற்பொழிவுகள் செய்து வந்தார். மும்முரமான நிகழ்ச்சி நிரலாக இருந்த அவர் பயணங்களில், பொது கூட்டங்களில் பேசினார்; நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்தினார். அவரின் வாழ்வியல் சிந்தனைகளை கைப்பட எழுதி வைத்தார். துக்கத்தை சுமந்துகொண்டு தன்னை நாடி வரும் ஆண்களோடும் பெண்களோடும் ஆறுதலாக மௌனத்தில் அமர்ந்திருக்கவும் செய்தார். படிப்பறிவின் அடிப்படையில் பிறந்ததல்ல அவரின் போதனைகள். வாழ்வைப் பற்றிய அவரின் உள்ளார்ந்த உணர்வில், அக நோக்கில் மலர்ந்தவை அவை.

ஜே.கே வைப் புரிந்துகொள்ளவும், பின்பற்றி நடக்கவும் மிகக் கடினமானவர் என விமர்சனங்கள் உண்டு. ஆனால், ‘மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’ என்ற அவரது மந்திரச் சொல்லுக்கு இன்றுவரை மாற்றுக் கருத்து இல்லை.