செவ்வாய், 3 டிசம்பர், 2019

தொழிலதிபர் நவ்ரோஜி கோத்ரேஜ் பிறந்தநாள் டிசம்பர் 3

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பார்சி இனத்தைச் சார்ந்த இரண்டு சகோதர்கள் பூட்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் பட்டம் பெற்ற அர்தேஷிர் கோத்ரேஜும் அவர் சகோதரர் பிரோஷா கோத்ரேஜும் 1897ஆம் ஆண்டு தொடங்கிய அந்த முயற்சி இன்று பூட்டுகள், இரும்புப் பெட்டிகள், சோப் தயாரிப்பு, கால்நடைகளுக்கான உணவுவகைகள், விண்வெளி ஆராய்ச்சிக்கான உபகரணங்கள், நிறுவனங்களுக்கான மேசை, நாற்காலி என்று பல்வேறு துறைகளில் தங்கள் தரத்தினால் தனி இடத்தைப் பிடித்துள்ள கோத்ரேஜ் குழுமமாக மாறி உள்ளது. கோத்ரேஜ் குழுமத்தின் இரண்டாம் தலைமுறை வாரிசான நவ்ரோஜி கோத்ரேஜ் என்று அறியப்பட்ட நேவல் பிரோஷா கோத்ரேஜ் அவர்களின் பிறந்தநாள் இன்று. 

பிரோஷா கோத்ரேஜின் இளைய மகனாக 1916ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் பிறந்தவர் நவ்ரோஜி கோத்ரெஜ். தனது மூன்றாம் வயதிலேயே தாயாரை இழந்த நவ்ரோஜி மற்றும் அவர் சகோதர்களை கராச்சி நகரில் வசித்து வந்த அவரது பாட்டி பராமரித்து வளர்த்து வந்தார். சிறுவயதிலிருந்தே இயந்திரங்கள் மீது ஆர்வம் கொண்டிருந்த நவ்ரோஜி, பள்ளிப் படிப்பை முடித்த உடனேயே தந்தையின் தொழில்சாலைக்கு தொழில் கற்க வந்துவிட்டார். வருங்கால முதலாளியாக குளிர்பதன அறையில் அமர்ந்து கொண்டிருக்காமல், தொழிலாளிகளில் ஒருவராக பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் தளத்தில் அதிகநேரம் செலவிட்டதால் இயல்பாகவே நவ்ரோஜிக்கு உழைப்பின் மரியாதை தெரிந்ததோடு, பணியாளர்களை நிறுவனத்தின் வளர்ச்சியின் பங்குதாரர்களாகப் பார்க்கும் பக்குவமும் கைவசமானது. 

பல்வேறு இயந்திரங்களோடும் கருவிகளோடும் தன் மனதைப் பறிகொடுத்த நவ்ரோஜி, சுதேசித் தயாரிப்பில் தட்டச்சு இயந்திரத்தை ( Manual Typewriter ) தயாரிக்க முடிவு செய்தார். அன்றய காலகட்டத்தில் ஆசிய கண்டத்திலேயே எந்த நாட்டிலும் தட்டச்சு இயந்திரம் தயாரிக்கப்படவில்லை. ஆயிரத்திற்கும் அதிகமான உதிரிபாகங்களை இணைத்து தட்டச்சு இயந்திரத்தைத் தயாரிப்பது எனப்து மிகச் சவாலான வேலை. அதனை வெற்றிகரமாக செயலாக்கிக் காட்டியவர் நவ்ரோஜி கோத்ரேஜ். 1955ஆம் ஆண்டு ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்  பாரதம் சோசலிஸ பாதையில் செல்லும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த மாநாட்டில்தான் முதல்முதலாக பாரதத்திலேயே தயாரான கோத்ரெஜ் தட்டச்சு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை நேரு பார்வையிடும் படத்தை  இன்றும் பல்வேறு கோத்ரெஜ் அலுவலங்கங்களில் நாம் காணலாம். 


1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை கோத்ரெஜ் நிறுவனம் தயாரித்து வழங்கியது. பின்னர் முதல் இந்திய குளிர்சாதனப் பெட்டியை ( Refrigerator ) 1958ஆம் ஆண்டு கோத்ரெஜ் உருவாக்கியது. இதற்கெல்லாம் நவ்ரோஜியின் இயந்திரங்கள் மீதான புரிதல் பெரும் பங்காற்றியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்காக பல்வேறு துணைக்கருவிகளையும் 1976ஆம் ஆண்டு முதல் கோத்ரெஜ் தயாரித்து வருகிறது. இதற்கான தனிப் பிரிவையே நவ்ரோஜி உருவாக்கினார். 

தொழில் செய்வது, அதையும் சிறப்பாக, லாபகரமாகச் செய்வது என்பது ஓன்று. ஆனால் அதனை தர்மகர்த்தா முறையில் செய்வது என்பது வேறொன்று. கோத்ரெஜ் நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கு மூலதனம் கோத்ரெஜ் குழுமத்தின் அறக்கட்டளைகள் வசம் உள்ளன. ஆண்டுதோறும் நிறுவனம் ஈட்டும் லாபத்தில் இருந்து பல்வேறு சேவைகளை அவை செய்து வருகின்றன. மக்கள்தொகை கட்டுப்பாடு, இயற்கை வளங்களை காப்பாற்றுதல் ஆகியவை அறக்கட்டளையின் முக்கியப் பணிகளாக உள்ளன. தங்களுக்கு சொந்தமான விக்ரோலி பகுதியில் உள்ள சதுப்பு நிலக் காடுகளை அழிக்காமல் இன்றும் கோத்ரேஜ் நிர்வாணம் பராமரித்து வருகிறது. அநேகமாக இன்று மும்பை நகரின் நுரையீரலாக இந்தக் காடுகள் செயல்பட்டு வருகின்றன. 

சுத்தமும் சுகாதாரமும் வசதிகளும் கூடிய பணியாளர் குடியிருப்பை நவ்ரோஜி உருவாக்கினார். அவரின் தந்தை பெயரில் பிரோஷாநகர் என்ற பெயரில் அது  உருவானது.தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க உதயச்சால் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று பெருவாரியாகப் பேசப்படும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு, தொழிலாளர் மனித வள மேம்பாடு என்ற சொற்கள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னமே அவற்றை செயலாகிக் காட்டியவர் நவ்ரோஜி கோத்ரேஜ் அவர்கள். 

தொழில்துறை வளர்ச்சிக்கு நவ்ரோஜியின் பங்களிப்பை மரியாதை செலுத்தும் விதமாக அரசு அவருக்கு 1976ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கிச் சிறப்பித்தது. 

பாரத நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான நவ்ரோஜி பிரோஷா கோத்ரேஜின் பங்களிப்பை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது.