புதன், 24 ஜூன், 2020

இசைக்கும் கவிக்கும் பிறந்தநாள் இன்று - ஜூன் 24


தமிழ்த்திரை உலகில் தங்கள் முழு முத்திரையைப் பதித்த கவியரசு கண்ணதாசனுக்கும் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வனாதனனுக்கும் இன்று பிறந்தநாள்.

காரைக்குடி அருகே உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் 1927ஆம் ஆண்டு சாத்தப்பன் செட்டியார் - விசாலாக்ஷி அம்மையார் தம்பதியினருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தவர் கவிஞர் கண்ணதாசன். இவரது இயற்பெயர் முத்தையா. குழந்தைகள் அற்ற தம்பதியினருக்கு இவர் தத்து கொடுக்கப்பட்டார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூரிலும் பெற்றார்.

பத்திரிகைகளில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்தார். கடுமையான வறுமையில் வாடியபோதும், தனது முயற்சியை விடாது திருமகள் என்ற பத்திரிகையில் வேலை பார்க்க ஆரம்பித்தார். பின்னர் திரை ஒலி, சண்டமாருதம், தென்றல் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்றே ஒரு பத்திரிகையையும் நடத்தினார்.

பத்திரிகையில் கிடைத்த தொடர்பு திரையுலகில் அவர் கால் பதிக்க உதவியது. ஜுபிடர் நிறுவனத்தின் கள்வனின் காதலி படத்திற்காக " கலங்காதிரு மனமே .... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே'' என்ற பாடலோடு அறிமுகமானார். அதிலிருந்து அடுத்த முப்பதாண்டுகளுக்கு மேலாக திரையுலகில் தனி அரசாங்கமே நடத்தினார் கவிஞர்.

இதனிடையில் அரசியலிலும் ஈடுபடலானார். கலைஞர் கருணாநிதி உடனான பழக்கம் அவரை திராவிட இயங்கங்களின் பால் ஈர்த்தது.
அண்ணாதுரை, ஈ வே கி சம்பத் என்று அன்றய திராவிட இயங்கங்களின் மூத்த தலைவர்களோடு நெருக்கமாக இருந்தார். தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். திமுகவில் இருந்து விலகி சம்பத் தொடங்கிய கட்சியில் இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
திரையுலகில் அவர் கொடிகட்டிப் பறந்த காலத்தில் செல்வத்தில் திளைத்தார். ஆனாலும் பணத்தை சேர்த்து வைக்கும் பழக்கம் இல்லாதாலும், சொந்தமாக படங்கள் தயாரித்து அவை தோல்வியைத் தழுவியதால் வறுமையிலும் வாடினார்.

கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்து அடியோடு மாறி தீவிர இறை நம்பிக்கையாளராக மாறினார். ஐயாயிரத்திற்கும் மேலான திரைப்பாடல்கள், நாலாயிரத்துக்கும் அதிகமான கவிதைகள், ஒன்பது காப்பியங்கள், தனது சுய வரலாறு சிற்றிலக்கியங்கள், புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று வாழ்க்கை முழுவதும் எழுதிக் குவித்தார்.
எம்ஜியார் முதலமைச்சராக இருந்தபோது கண்ணதாசனை அரசவைக் கவிஞர் என்று நியமித்தார். சேரமான் காதலி என்ற புதினத்திற்காக இவருக்கு சாஹித்ய அகாடெமி விருது வழங்கப்பட்டது.

இவை அனைத்துக்கும் மகுடம் போல விளங்குவது பத்து தொகுதிகளாக கவிஞர் எழுதிய அர்த்தமுள்ள ஹிந்து மதம் என்ற தொகுப்புதான். மிக எளிய மொழியில் ஹிந்து மத தத்துவங்களை இதில் கவிஞர் விளக்கி இருப்பார்.

உடல்நல சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற கவிஞர் அங்கே சிகாகோ நகரத்தில் 1981ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் காலமானார்.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று அவரே பிரகடனம் செய்தது போல இன்றும் தமிழர் நெஞ்சில் கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

அற்புதமான கவிதை வரிகளுக்கு இசை அமைத்து பாலில் தேன் கலந்ததுபோல கேட்பவர்களை மயக்க கவியரசர் பிறந்த அடுத்த வருடம் 1924ஆம் ஆண்டு பிறந்தவர் M S விஸ்வநாதன் அவர்கள். கேரள மாநிலத்தை தாயகமாகக் கொண்ட விஸ்வநாதனின் திறமையை உலகிற்கு காட்டியது தமிழகம்.

நடிகராகவும் பாடகராகவும் விளங்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த விஸ்வநாதன் 100 படங்களுக்கு மேல் ராமமூர்த்தி அவர்களோடு இணைத்து இசை அமைத்தார். அதன் பிறகு தனியாக பல்வேறு படங்களுக்கு இசை அமைத்தார். கண்ணதாசனும் விஸ்வநாதனும் இணைந்து காலத்தால் அழியாத பல்வேறு பாடல்களை உருவாக்கி இசையமைத்து தமிழ் மக்களை மயங்கினர்.

மற்ற தென்னக மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். பல பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

தனது 87ஆவது வயதில் 2015ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி சென்னையில் விஸ்வநாதன் காலமானார்.

தமிழ் திரையுலக வரலாற்றை எழுதும்போது கவியரசருக்கும் மெல்லிசை மன்னருக்கும் சிறப்பான இடம் ஓன்று உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.