ஞாயிறு, 28 ஜூலை, 2019

கல்வித்துறையின் கதாநாயகன் H S S லாரன்ஸ் - பிறந்தநாள் 28 ஜூலை

கல்வித்துறையின் கதாநாயகன் H S S லாரன்ஸ் - பிறந்தநாள் 28 ஜூலை

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கல்வித்துறை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதில் பெரும்பங்காற்றி ஆனாலும் இன்று நினைவில் இல்லாமல் போன ஒரு அறிஞரைப் பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம். தமிழகத்தின் கல்வித்துறை என்றால் பொதுவாக  நாம் நினைவு கூறுவது காமராஜரைத்தான். கொஞ்சம் யோசித்தால் நெ து சுந்தரவடிவேலுவின் பெயர் நினைவுக்கு வரலாம், அவர்கள் அளவிற்கு தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு துணை நின்றவர்தான் திரு ஹாரிஸ் ஸாம் சகாயம் லாரன்ஸ் அவர்கள்.

1923ஆம் ஆண்டு நாகர்கோவில் நகரைச் சார்ந்த ஸாம் - அருளம்மாள் ஹாரிஸ் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர்  இவர்.இந்தியாவின் வைஸ்ராயாகப் பணியாற்றிய ஜான் லாரன்ஸ் நினைவாக இவருக்கு பெயரிடப்பட்டது. தனது பள்ளிப்படிப்பை நாகர்கோவில் நகரிலும், பின்னர் வரலாறு மற்றும் பொருளாதாரத்துறைகளில் தனது இளங்கலை பட்டத்தை திருவனந்தபுரத்தில் இவர் முடித்தார். பாரத அரசு இவரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புக்கு அனுப்பியது. அங்கே லாரன்ஸ் தனது முதுகலைப் பட்டத்தையும் கல்வித்துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

காலிகட் ஆசிரியர் பயிற்சி கல்லூரியிலும் பின்னர் வேலூர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியிலும் விரிவுரையாளராகவும் பின்னர் வேலூர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த லாரன்ஸ் 1976ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்விதுறையின் இயக்குநராகப் பணியாற்றினார். இவரது காலத்தில்தான் தமிழக கல்வித்துறையின் 150ஆவது ஆண்டு விழா 1977ஆம் ஆண்டு கொண்டாடப் பட்டது.

1976ஆம் ஆண்டு பள்ளிக்கல்வி சீரமைப்பு ஆணையத்தின் சிறப்பு அதிகாரியாக இவர் பணியாற்றியபோது அளித்த அறிக்கையின்படிதான் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முடித்தபின் பள்ளி வளாகத்திலேயே உயர்நிலை வகுப்புகள் பின்னர் கல்லூரிப் படிப்பு என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது. அதுவரை பள்ளி வளாகத்தில் பதினோராம் வகுப்பு வரை, பின்னர் கல்லூரியில் ஓராண்டு பின்னர் பட்டப்படிப்பு என்ற முறைதான் இருந்து வந்தது. கல்வித்துறையின் இந்த மாற்றத்தால் உருவான உயர்நிலைப் பள்ளி இயக்குநரகத்தின்  முதல் இயக்குனராக  திரு லாரன்ஸ் நியமிக்கப்பட்டார். அப்போதுதான் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த மெட்ரிகுசேஷன் பள்ளிகளை நிர்வகிக்க தனி அமைப்பு உருவாக்கப்பட்டது.

1969ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு வரை ஐநா நிறுவனத்தின் சார்பில் ஆப்கானிஸ்தான் நாட்டின் கல்வித்துறையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு  அந்த நாட்டின் கல்வித்துறையை நவீனமயமாக்கினார்.

பள்ளிகல்விதுறையில் லாரன்ஸின் பங்களிப்பு மகத்தானது. அகில இந்திய வானொலி நிலையத்தின் கல்வி ஒலிபரப்பை மாணவர்கள் அனைவரும் கேட்கும் விதமாக 31,000 பள்ளிகளுக்கு பொதுமக்கள் பங்களிப்போடு வானொலிப்பெட்டிகள் வழங்க வழிவகுத்தது, அதுவரை அங்கீகாரம் பெறாத பள்ளிகள் பற்றிய அறிக்கையை அரசுக்கு வழங்கியது, 1977ஆம் ஆண்டு முதல் அரசு பொதுதேர்வுகளில் முதலிடம் வாங்கும் மாணவர்களுக்கு பாராட்டு  பட்டயம் வழங்குவது, பொறியியல் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேரும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவது, பள்ளிகளில் மாணவர்களுக்கு நல் ஒழுக்கத்திற்கான பரிசு வழங்குதல், பள்ளிகளில் புத்தக வங்கிகளை உருவாக்குவது என்று பல்வேறு முன்னெடுப்புக்களை திரு லாரன்ஸ் மேற்கொண்டார்.

பள்ளி மாணவர்களைக் கொண்டு பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துதல், ஒரு கிராமத்தைத் தத்தெடுத்தல் என்று மாணவர்களுக்கு பள்ளிகளை, பாடங்களைத் தாண்டி சமுதாய கடமைகளை மேற்கொள்ளும் எண்ணத்தை விதைக்க இவர் முயற்சிகளை மேற்கொண்டார்.

ஒரு மேல்நிலைப் பள்ளியைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து நடுநிலைப் பள்ளிகள், பத்து முதல் இருபது தொடக்கப்பள்ளிகள் என்ற பள்ளித் தொகுதிகள் ( School Complex ) என்ற முறையை லாரன்ஸ் உருவாக்கினார். தமிழக அரசின் இந்த புதுமையான முயற்சிகளை பாரத அரசு பாராட்டியது. இன்று 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள கல்விக்கொள்கையில் உள்ள இதே கருத்தை தமிழக்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது.

பள்ளித்துறையில் இருந்து ஓய்வு பெற்றபின் வங்கி பணியாளர் தேர்வாணையத்திலும் திரு லாரன்ஸ் திறம்படப் பணியாற்றினார்.

இவர் தனது 85ஆவது வயதில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் நாள் காலமானார்.