செவ்வாய், 24 மார்ச், 2015

மருத்துவக் காப்பீடு - சில சிந்தனைகள்

வருடம் 1990. வரலாற்று காணாத பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கி இருந்தது. இறக்குமதி செய்யப் பட்ட பொருள்களுக்கு தருவதற்கு அரசிடம் பணம் இல்லை. அரசின்வசம் இருந்த தங்கத்தை அடகு வைத்து, அதன் மூலம் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு அரசு அந்த நிலையைச் சமாளித்து. பொதுவுடைமை, சோசலிசம் என்ற நிலை மாறி, உலகமயமாக்கல், தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற பொருளாதாரக் கொள்கைக்கு நாடு தன்னை மாற்றிக் கொண்டது. அதனால் ஏற்ப்பட்ட விளைவுகளைப் பற்றி விவாதிக்கும் இடம் இது இல்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஏற்ப்பட்ட சில மாறுதல்கள் நாம் பேசும் பொருளையும் நேரடியாகப் பாதிக்கும் என்பதால் அதனைப் பற்றி மட்டும் நாம் பேசுவோம்.

உலகமயமாக்கலைத் தொடர்ந்து இரண்டு முக்கியமான மாறுதல்கள் ஏறப்பட்டது. ஓன்று கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை அநேகமாக இல்லாமல் போனது. திரும்பும் இடமெல்லாம் முதியோர் இல்லங்கள் உருவாக ஆரம்பித்தன. வயதான காலத்தில் தன் பிள்ளைகள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லாமலே போய், உயிர்வாழும் காலம் வரைக்கும் தேவையான பணத்தைக் கையில் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற சிந்தனை உருவாகத் தொடங்கியது.

கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சை என்ற சேவைகளில் இருந்து அரசுகள் மெல்ல மெல்ல வெளியேறி, அங்கே தனியார்கள் உள்ளே வரத்தொடங்கினார்கள். தரமான கல்வியும், தரமான கனிவான மருத்துவச் சேவையும் சாதாரண மக்களுக்கு எட்டாத விசயங்களாக மாறத் தொடங்கின.

இதோடு இணைந்து மக்களின் சிந்தனையில் ஒரு மாற்றம் வர ஆரம்பித்தது. நமது பெற்றோர்கள் அநேகமாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கி, அங்கேயே இருபது அல்லது முப்பது வருடங்கள் பணியாற்றி, அங்கேயே ஓய்வு பெற்றுக் கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது நம்மில்பலர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறுவனம் விட்டு நிறுவனம் மாறிக் கொண்டு இருக்கிறோம். இதனால் ஓய்வுக்கான சேமிப்பு நிதி ( Pension &Provident Fund ) என்பன அநேகமாக இல்லாமலே போய்விடுகிறது. மாறிவிட்ட இந்தச் சூழ்நிலையில் ஒரே ஒரு அறுவைச் சிகிச்சை என்பது பல குடும்பங்களைத் தாங்கமுடியாத பொருளாதாரச் சிக்கல்களில் தள்ளிவிடுகின்றது.

மாறிவிட்ட வாழ்க்கைமுறை, தொற்றாத பல உடல்நலக்குறைவை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நீண்ட பயணம், வேலையில் உருவாகும் மன அழுத்தம், நேரம் கடந்த உணவு, உணவில் உள்ள ரசாயனங்கள் இவை எல்லாம் இந்தச் சிக்கல்களை இன்னும் விரைவுபடுத்துகின்றன. முப்பது வயது தாண்டிய பலரும் இன்று இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இதயநோய், எலும்பு தேய்மானம் என்ற பல உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பல அலுவலங்கள் தங்கள் ஊழியருக்கு மருத்துவக் காப்பீடைச் செய்து தந்து இருக்கின்றன. ஆனாலும், வேலை மாற்றம் என்று வரும்போது, சேருகின்ற புதிய நிறுவனத்தில் மருத்துவக்காப்பீடு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் இன்றைய நிலையில் பல நிறுவனங்கள் நாற்பது வயதிற்கு மேலே உள்ள ஊழியர்களை பணியில் இருந்து அனுப்பிவிட்டு, அந்த இடத்தைப் புதியவர்களை வைத்து நிரப்பும் போக்கும் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. அந்த நிலையில் கிடைக்கின்ற வேலையை எடுத்துக் கொள்ளவோ அல்லது தனியாகப் பணியாற்றவேண்டிய சூழலோ பலர் இன்று சந்திக்கும் யதார்த்தமாக இருக்கின்றது.

எனவே சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே, தனியாக நமக்காக ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது புத்திசாலிதனமான இருக்கும். சிறுவயதில் மருத்துவக் காப்பீடு செய்யும்போது, பொதுவாக பெரும் உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் இருக்காது என்பதால் காப்பீடு அளிக்கப்படுவதில் கேள்விகள் எதுவும் இருக்காது.

இன்றைய நிலையில் மிகச் செலவு வைக்கும் மருத்துவச் சிகிச்சை இதயநோயக்கான சிகிச்சைதான். எனவே அதனைச் சமாளிக்கும் வகையில் குறைந்தபட்சம் ஐந்துலட்ச ரூபாய் அளவில்லாவது காப்பீடு செய்துகொள்ளுங்கள்.

சில காப்பீடு நிறுவனங்கள் FLOATER POLICY என்ற முறையில் காப்பீடு வழங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட அளவிற்கான மருத்துவச் சிகிச்சைக்கான காப்பீடைக் குடும்பத்தில் உள்ள யாரும் பயன்படுத்திக்கொள்ளும் திட்டம் இது. குடும்ப உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக காப்பீடு செய்வதை விட, இந்தத் திட்டம் சிறப்பானது.

இதுவரை மருத்தவக் காப்பீடு செய்துகொள்ளவில்லை என்றால் உடனே செய்துவிடுங்கள்.

தொடர்புடைய  பதிவுகள்
1. ஒரு கோடி ரூபாய்க் கனவு. 
2. காப்பீடு, காப்பீடு, காப்பீடு 
3. ஆயள் காப்பீடு - எது சரியான அளவு ?
4. ஆயுள் காப்பீடு - இன்னும் கொஞ்சம்