சனி, 13 ஜூன், 2020

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பிறந்தநாள் - ஜூன் 13

மோதி தலைமையிலான அரசின் ரயில்வே மற்றும் வர்த்தகத்துறையின் மத்திய அமைச்சரான திரு பியூஸ் கோயல் அவர்களின் பிறந்தநாள் இன்று.


வேத்பிரகாஷ் கோயல் சந்திரகாந்தா தம்பதியரின் மகனாக 1964ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் நாள் பிறந்தவர் திரு பியூஸ் கோயல் அவர்கள்.  லாகூர் நகரைச் சார்ந்த வேதபிரகாஷ் கோயல் பாரதநாட்டின் ராஜ்யசபை உறுப்பினராகவும், வாஜ்பாய் தலைமையிலான அரசில் கப்பல் போக்குவரத்து துறையின் அமைச்சராகவும் பணியாற்றியவர். அவர் பாஜகவின் தேசியப் பொருளாளராகவும் பதவி வகித்தவர். திருமதி சந்திரகாந்தா மூன்று முறை மும்பை மாதுங்கா தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பியூஸ் கோயல் பட்டயக் கணக்காளர் தேர்வில் நாட்டிலேயே இரண்டாவது இடத்திலும்,  சட்டப் படிப்பில் மும்பை பல்கலைக்கழகத்தில் இரண்டாவது இடத்திலும் தேர்ச்சி பெற்றவர். முதலீட்டுத் துறையில் மிகுந்த அனுபவம் பெற்ற பியூஸ் கோயல் தனியார் துறையில் வேலை செய்த போது, பல்வேறு நிறுவனங்களுக்கு யுத்திகள் வகுப்பதிலும், நிறுவனங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது பற்றியும் ஆலோசகராக விளங்கினார்.

பாஜக சார்பில் 2010ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்குத் தேர்வான பியூஸ் கோயல், பாஜகவில் தேசியப் பொருளாளர் உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார்.

2014ஆம் ஆண்டு அமைந்த மோதியின் அரசின் மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மற்றும் நிலக்கரி ஆகிய துறைகளின் அமைச்சராகச் செயலாற்றினார். அதுவரை மின்சார இணைப்பே இல்லாமல் இருந்த 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்தது இவரின் சாதனை. அது போல மிகக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் எல் ஈ டி விளக்குகளை குறைந்த விலையில்  விற்பனை செய்து, மின் பயன்பாட்டைக் குறைத்து, மரபு சாரா எரிசக்தி தயாரிப்பில் பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவந்தது, எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் நிலக்கரி சுரங்கத்தை குத்தகைக்கு விட்டது என்று பல்வேறு சாதனைகளை பியூஸ் கோயல் செய்தார்.

2017ஆம் ஆண்டு ரயில்வே  துறையின் அமைச்சராக கோயல் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ உடல்நிலை குன்றி இருந்த போது, தற்காலிக நிதியமைச்சர் என்ற முறையில் 2019ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கோயல் தாக்கல் செய்தார்.

2019ஆம் ஆண்டு அமைந்த மோதியின் இரண்டாவது அரசின் ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக கோயல் பணியாற்றிவருகிறார். பேங்க் ஆப் பரோடா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் கோயல் பணியாற்றி உள்ளார்.

பாஜகவின் அடுத்த தலைமுறை தலைவர்களில் முக்கியமானவரான திரு பியூஸ் கோயல் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற பிரார்தனைகளோடு அவருக்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.