சனி, 13 ஜூலை, 2013

1.புத்தாண்டுப் பரிசு

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் மொழிபெயர்ப்பு 

     ------------------------------------------------------------------------------------------------

புத்தாண்டு தினம் 1931

ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்னால், நான் அலஹாபாத் நகரிலும் நீ முசோரி நகரிலும் இருந்த போது நான் உனக்கு எழுதிய கடிதங்கள் உனக்கு நினைவு இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்தக் கடிதங்களை நீ விரும்பியதாக எனக்குச் சொல்லி இருக்கிறாய். நமது உலகத்தைப் பற்றிய விஷயங்களை உன்னோடு நான் ஏன் பகிர்ந்து  கொள்ள வில்லை என்று நான் அடிக்கடி யோசிப்பது உண்டு. ஆனால் ஏனோ எனக்கு ஒரு தயக்கம். பழங்காலத்தைப் பற்றியும், மகத்தான மனிதர்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டு இருப்பது நன்றாகத் தான் இருக்கும். வரலாற்றைப் பற்றிப் படிப்பது உற்சாகமான  ஒரு பொழுதுபோக்குத்தான், ஆனால் அதை விட முக்கியமானது வரலாற்றை உருவாக்குவது. இன்று நமது நாட்டின் வரலாறு உருவாகி  வருகிறது என்பதை நீ அறிவாய்.

நமது நாட்டின் வரலாறு என்பது மிகப் பழமையானது, பல நேரங்களில் அது அந்தப் பழமையில் மறைந்தும் போய் விடுகிறது. வருத்தம் தரக் கூடிய, நாம் கேவலமாக எண்ணக் கூடிய நிகழ்சிகள் பல நம் வரலாற்றில் உண்டு, ஆனால் முழுமையான ஒரு சித்திரம் என்பது நாம் பெருமையோடு எண்ணும் வகையில் தான் நமது சரித்திரம் இருக்கிறது. ஆனால் இன்று நாம் நமது பழம்பெருமைகளைப் பற்றி நினைக்கும் நிலையில் இல்லை, நமது சிறப்பான எதிர்காலமே நாம் இன்று நினைக்க வேண்டிய ஓன்று. வருங்காலத்தை உருவாகும் பணியில் நமது நிகழ்காலம் கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. 

இந்த நைனிடால் சிறையில் படிக்கவும், எழுதவும் எனக்கு நேரம் நிரம்ப இருக்கிறது. ஆனால் எனது மனம் வெளியே சுற்றித் திரிகிறது, பெருமை வாய்ந்த விடுதலைப் போராட்டமும், அதில் பங்கெடுக்கும் மக்களின் வீரச் செயல்களும் என் மனதில் நிறைந்து உள்ளன.  நான் இப்போது வெளியே இருந்தால் என்ன செய்து கொண்டு இருப்பேன் என்ற எண்ணமும் எனக்கு உள்ளே ஓடிக் கொண்டு இருக்கிறது. நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் நான் முழுமையாக ஆழ்ந்து இருப்பதால் கடந்த காலத்தைப் பற்றி எண்ண எனக்கு நேரம் இருப்பது இல்லை. ஆனால் நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுக்காத போது அதனைப் பற்றி எண்ணி என்ன பயன் ? 

ஆனால் நான் எழுதாமல் இருந்ததற்கான உண்மையான காரணம் எது என்று உனக்குச் சொல்லவா ! உனக்கு கற்றுக் கொடுக்கும் அளவு எனக்கு வரலாறு தெரியுமா என்ற ஐயம் எனக்கு உள்ளது. நீ வளர்ந்து கொண்டு இருக்கிறாய் கண்மணி, நான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்றுக் கொண்டவைகளைத் தாண்டி நீ வளர்ந்து விட்டாய், இப்போது நான் கற்றுக் கொண்டவைகளும், நான் உனக்கு சொல்லுவதும் உனக்கு உற்சாகம் ஊட்டுவதாக இருக்குமா என்ற ஐயம் எனக்கு இருக்கிறது. இன்னும் சில காலத்தில் நீயே எனக்கு ஆசிரியராக மாறி பலவற்றை எனக்கு கற்றுக் கொடுப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உன் பிறந்த நாளில் நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட உலகின் மிக அறிவாளியான மனிதனைப் போல நான் என்னை எண்ணிக் கொள்ள ஒருநாளும் மாட்டேன். 

உலகின் ஆதி நாட்களின் கதையை நீ முசோரியில் இருந்த போது எழுதியது மிக எளிது. ஏன் என்றால் அந்த நாட்களைப் பற்றிய நமது அறிவு என்பது மிகக் குறைவு. ஆனால் அந்த நாட்களைத் தாண்டிய பின்னர், வரலாறு உருவாகும் போது மனிதன் தனது இருப்பைத் தக்க வைக்கும் பயணங்களை ஆரம்பிக்கிறான். சில நேரங்களில் சவாலான, பல நேரங்களில் முட்டாள்தனமான அந்தப் பயணத்தைப் பின்தொடர்வது என்பது  கடினமான ஓன்று. ஒரு வேளை சரியான புத்தகங்கள் இருந்தால் அதனை முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் இங்கே நைனிடால் சிறையில் நூலகம் என்பது இல்லை. ஆகையால் நான் விரும்பினாலும் ஒரு முழுமையான ஒரு உலக வரலாற்றை உனக்கு சொல்ல முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

ஒரே ஒரு நாட்டின் வரலாற்றையோ அல்லது சில நாட்களையும் சில மனிதர்களையும் பற்றிப் படிப்பதை வரலாற்றைத் தெரிந்து கொள்வது என்று நினைக்கும் மாணவர்கள் என்னைக் கவருவது இல்லை. வரலாறு என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடைய நிகழ்சிகளைக் கொண்டது, உலகத்தின் பல பகுதிகளில் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளாமல், ஒரு நாட்டின் வரலாற்றிப் புரிந்து கொள்ள முடியாது என்பது தான் என் எண்ணம். நீ வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுவது என்றால் அப்படி முழுமையாகப் படித்து அறிய வேண்டும், ஓன்று இரண்டு நாட்டின் சரித்திரத்தைப் பற்றி மட்டும் தெரிந்து கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.

நாம் நினைப்பது போல மனிதர்கள் இடம் மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பது இல்லை. உலக வரைபடங்கள் நாடுகளைப் பல வண்ணங்களில் காட்டலாம். மனிதர்கள் பிறர்களிடம் இருந்து மாறுபட்டு இருந்தாலும், அவர்கள் மற்றவர்கள் போலவே மிக அதிகமாக இருக்கிறார்கள். ஆகவே நாடுகளின் எல்லைக்கோடுகளைக் கொண்டோ அல்லது வரைபடங்கள் காட்டும் நிறங்களின் மூலமோ மனிதர்களை நாம் வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது.

நான் எழுத நினைக்கும் வரலாற்றை நான் உனக்கு எழுதப் போவது இல்லை, அதற்கு  நீ இன்னும் பலப் பல புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் கடந்த காலத்தைப் பற்றியும், அப்போது இருந்த மனிதர்கள் பற்றியும், அவர்கள் செய்த சிறப்பான செயல்களைப் பற்றும் நாம் எழுதுகிறேன்.

நான் எழுதும் இந்தக் கடிதங்கள் உனக்கு கிடைக்குமா என்பதும், அப்படிக் கிடைத்தாலும் அவை உனக்கு ருசிகரமாக இருக்குமா என்பதையும்  நான் அறியேன். மிக அருகில் இருந்தாலும் நாம் மிகத் தொலைவில் தான் இப்போது இருக்கிறோம். பல நூறு மைல்களுக்கு தொலைவில் நீ முசோரி நகரில் இருந்த போது, நான் நினைத்த நேரம் எல்லாம் உனக்கு எழுத முடிந்தது, தோன்றிய நேரம் எல்லாம் உன்னைக் காண என்னால் விரைந்து வர முடிந்தது.

ஆனால் நைனிடால் சிறையின் இந்த உயர்ந்த மதில்கள், யமுனை நதியின் இரு கரையிலும் இருக்கும் நம்மைப் பிரித்து வைத்து உள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உன்னிடம் இருந்து எனக்கு ஒரு கடிதமும், ஒரு முறை என்னிடம் இருந்து ஒரு கடிதமும், இருபது நிமிட நேர்காணலும் மட்டுமே இப்போது சாத்தியம். ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளும் நல்லதுதான், ஏன் என்றால் எளிதாகக் கிடைக்கும் எதனையும் நாம் மதிப்பது இல்லை. படிக்கும் பழக்கம் இருக்கும் எவருக்கும் சிறைவாழ்க்கை என்பது நன்மை செய்யக் கூடிய ஒன்றுதான், ஆனால் என்ன, இன்று இந்த வாய்ப்பு இந்தியாவில் பலருக்கு கிடைத்து உள்ளது.

இந்தக் கடிதங்களை நீ விரும்புவாயா என்பதை நான் அறியேன், ஆனால் எனது மகிழ்ச்சிக்காக நான் இவைகளை எழுதத் தொடங்கி விட்டேன். இந்த முயற்சி என்னை உன்னுடன் நெருக்கமாக இருக்க வைக்கிறது, உன்னுடன் பேசுவது போலவே நான் இப்போது உணர்கிறேன்.  நான் உன்னை அடிக்கடி நினைத்துக் கொள்வது உண்டு, ஆனால் இன்று முழுவதும் உன் எண்ணம் தான் என்னை ஆக்கிரமித்துக் கொண்டு உள்ளது. இது புதுவருடப் பிறப்பு. இன்று அதிகாலையில் நான் படுக்கையில் இருந்தவாறே கடந்து சென்ற வருடத்தைப் பற்றி எண்ணிக் கொண்டு இருந்தேன். நம்பிக்கைகளும் வருத்தங்களும், வீர தீரச் செயல்களும் கலந்த  ஒரு வருடம் அது.

நான் பாபுஜியைப் பற்றி எண்ணிக்கொண்டு இருந்தேன், ஏர்வாடா சிறையில் இருந்தவாறே அவர் இந்த பழமையான தேசத்தை இளமையான துடிப்புமிக்க ஒன்றாக மாற்றி வருகிறார்.நான் உன் தாத்தாவைப் பற்றியும் மற்ற பலரைப் பற்றியும் நினைத்துப் பார்த்தேன். முக்கியமாக உனது தாயார். பகல் பொழுதில் உன் தாயார் கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப் பட்டார் என்ற செய்தி கிடைத்தது. ஒரு மகிழ்வான புத்தாண்டுப் பரிசு அது. முன்னமே எதிர்பார்க்கப் பட்ட ஓன்று தான் அது, இந்த சிறைவாசம் உன் தாயாருக்கு சந்தோசத்தை தான் தரும்.

ஆனால் நீ தான் தனியாக இருப்பாய். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நீ உன் தாயையும் என்னையும் பார்க்க முடியும். எங்கள் இருவரின் செய்திகளையும் நீ தாங்கிச் செல்லுவாய். கையில் எழுதுகோலும், தாளும் வைத்துக் கொண்டு நான் உன்னை நினைத்துக் கொண்டு இருக்கிறேன். அப்போது சத்தமே இல்லாமல் நீ என் அருகில் வருகிறாய், நாம் இருவரும் பேச ஆரம்பித்து விடுகிறோம். நமது நாட்டின் சிறப்பான கடந்தகாலம் பற்றியும், அதை விடச் சிறப்பான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவது பற்றியும் நாம் பேசிக் கொண்டு இருப்போம்.

இந்த ஆண்டு முடியும் போது, நமது கனவிற்கு அருகில்  நாம் இருப்போம் என்ற ஒரு உறுதியை நாம் இப்போது எடுத்துக் கொள்வோம். சிறப்பான நமது நாட்டின் வரலாற்றிற்கு ஒரு பிரகாசமான பங்களிப்பை நாம் செய்யோம் என்ற உறுதிமொழியை நாம் எடுக்க வேண்டும்.

அன்புடன்