புதன், 1 ஏப்ரல், 2020

ஆர்எஸ்எஸ் ஸ்தாபகர் ஹெட்கேவர் பிறந்தநாள். ஏப்ரல் 1

நேரடியான அரசியலில் ஈடுபடாது, ஆனால் தேசிய அரசியலை நிர்ணயம் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தைத் ( இனி சுருக்கமாக சங்கம் ) தொடங்கிய ஸ்ரீ கேசவ பலிராம் ஹெட்கேவர் அவர்களின் பிறந்தநாள் இன்று.

இன்றய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கண்டகுர்தி என்னும் கிராமத்தில் வசித்து வந்த தேஷ்ஸ்த ப்ராமண சமுதாயத்தைச் சார்ந்த பல குடும்பங்கள் முஸ்லீம் மன்னர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மஹாராஷ்டிராவிற்கு இடம் பெயர்ந்தனர். அது போன்ற ஒரு குடும்பத்தில் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி பிறந்தார் ஹெட்கேவர். அன்று  குடி பட்வா என்னும் புத்தாண்டு நாளாகும். இவரது தந்தை வேதமூர்த்தி பலிராம் பந்த் ஹெட்கேவர், தாயார் ரேவதிபாய். இவரது  13ஆம் வயதிலேயே பெற்றோர் இருவரும்  ப்ளேக் நோயால் இறந்து விடுகின்றனர். வறுமை வாட்டியபோதிலும் படிப்பில் சிறந்த மாணவனாகவே விளங்கினார் ஹெட்கேவர்.

ஹிந்து மகாசபையின் தலைவரான Dr B S மூஞ்சியின் அறிவுரைப்படி ஹெட்கேவர் மருத்துவப்படிப்பை 1915ஆம் ஆண்டு வெற்றிகரமாக முடித்தார். எல்லோரையும் போல முழுவதுமாக மருத்துவ சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருந்தால் அவரும் பணக்காரராக மாறி இருக்கலாம். ஆனால் சிறுவயதில் இருந்து பொதுசேவையில் தன்னை இணைத்துக்கொண்ட ஹெட்கேவர் அந்தப் பாதையையே தொடர முடிவு செய்தார்.

அந்தக் காலகட்டத்தில் அவர் பால கங்காதர திலகரை, வீர சவர்க்கரை  தன் முன்மாதிரியாகக் கொண்டிருந்தார். 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் தொண்டர்கள் படையின் உதவித் தலைவராகப் பணியாற்றினார். காந்தி அறைகூவல் விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு ஓராண்டு கடுங்காவல் சிறைவாசம் அனுபவித்தார்.

சிறையில் இருந்தபோது மீண்டும் மீண்டும் இந்தியா ஏன் பிறநாட்டு ஆக்கிரமப்பாளர்களிடம் அடிமைப்பட நேர்ந்தது என்பதை பற்றி சிந்திக்கத் தொடங்கினார். ஜாதிவாரியாகவும் மொழிவாரியாகவும் பிரிந்து இருக்கும் மக்களால் தேசநலனுக்காக ஓன்று சேர முடியவில்லை என்பதைக் கொண்டுகொண்ட ஹெட்கேவர் தேசநலனை முன்னெடுக்கும் ஒரு அமைப்பை உருவாக்குவது என்று தீர்மானித்தார்.

அதன்படி 1925ஆம் ஆண்டு விஜயதசமி திருநாள் அன்று நாக்பூர் நகரத்தில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் உருவானது. மிக எளிதானதும், பொருளாதார ரீதியில் எளிதானதுமான ஒரு வழியை டாக்டர் ஹெட்கேவர் கண்டுபிடித்தார். தினம் ஒருமணி நேரம் ஏதாவது ஒரு திறந்தவெளி மைதானத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள் ( ஸ்வயம்சேவகர்கள் ) இணைத்து நாட்டு நலனைப் பற்றி சிந்திப்பார்கள். அப்போது அவர்கள் உடல்பயிற்சி செய்து, தேசபக்தி பாடல்களைப் பாடி ஒரு இணக்கமான மனநிலைக்கு வருவார்கள். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் சிறப்பான கடந்தகாலத்தைப் பற்றியும், எதனால் இந்த நாடு பிற நாட்டவரின் ஆட்சிக்கு உள்ளாக நேர்ந்தது என்பது பற்றியும், அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்ற மாவீரர்கள் பற்றியும் பேசப்படும். முக்கியமாக எந்த சங்க ஷாஹாவிலும் யார் என்ன ஜாதி என்ற கேள்வி ஒருபோதும் எழுப்பப்பட மாட்டாது. அனைவரும் இந்தியர்கள் அனைவரும் சகோதர்கள் என்ற பேச்சு மட்டுமே இருக்கும். அங்கே எந்த தனிநபர் துதியும் இருக்காது. தன்னலத்தைக் காட்டிலும் சமுதாய நலனும் தேசநலனும்தான் முக்கியம் என்ற கருத்து விதைக்கப்படும்.

சிறு விதையாக உருவான சங்கம் இன்று இந்தியா முழுவதும் கிளை பரப்பி விஸ்வ ஹிந்து பரிஷத், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், ஸ்வதேசி ஜக்ரன் மஞ்ச், பாரதீய கிசான் சங், பாரதீய மஸ்தூர் சங், பாரதீய ஜனதா கட்சி என்று தனது பரிவார் அமைப்புகள் மூலம் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.

லட்சக்கணக்கான சங்க பிரச்சாரகர்கள் நாட்டிற்க்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்து தேசம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர். பாரதம் முழுவதும் சங்க ஸ்வயம்சேவகர்கள் தேசிய புனர்நிர்மாணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளனர். இன்று சங்கம் பாரத நாடு மட்டுமல்லாது உலகத்தில் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது.

முதலில் இருந்தே சங்கம் நேரடி அரசியலில் கலந்து கொள்வது இல்லை. ஆனால் சங்க உறுப்பினர்கள் அரசியலில் ஈடுபடுவது தடை செய்யப்படுவதும் இல்லை. 1930 ஆம் ஆண்டு சத்தியாகிரக போராட்டத்தில் தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டு ஹெட்கேவர் கைதானார்.

சங்கத்தின் முதல் சர்சங்கசாலக் ஆக டாக்டர்ஜி தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றினார். பதினைந்து ஆண்டுகளுக்கு தலைமைப் பொறுப்பை வகித்த ஹெட்கேவர் 1940 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி பாரத மாதாவின் திருவடிகளில் கலந்தார்.
அவருக்குப் பின் குருஜி கோல்வாக்கர், தேவரஸ், ராஜேந்திர சிங், சுதர்சனம் ஆகியோர் சர்சங்கசாலக் பொறுப்பை வகித்தனர். தற்போது மோகன் பாகவத் சங்கத்தின் சர்சங்கசாலக் பொறுப்பில் இருக்கிறார்.

டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர் உருவாக்கிய சங்க ஸ்வயம்சேவகர்கள் இன்று இந்தியாவின் மிக உயரிய பதவிகளில் அமர்ந்து பாரதத் தேசத்தின் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.