வெள்ளி, 22 மே, 2020

சமூக சீர்திருத்தவாதி ராஜா ராம்மோகன்ராய் - மே 22



அது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டம். பாரதம் முழுவதும் ஆட்சி செய்த முகலாய வம்சம் வலிமை இழந்து இருந்தது. பெரும்பலத்தோடு எழுந்து வந்த மராத்தியப் பேரரசு மூன்றாம் பானிபட் போரில் ஆப்கானியர்களிடம் தோற்று, நாடு முழுவதும் அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் இருந்த காலம் அது. ஆங்கில ஆட்சிக்கு ராபர்ட் கிளைவ் வலுவான அடித்தளம் இட்டிருந்தார். பாரதத்தில் தழைத்திருந்த சனாதன தர்மமும், அரேபியாவில் இருந்து வந்த இஸ்லாமிய கருத்துக்களும், ஐரோப்பாவில் இருந்து இறக்குமதியான கிருஸ்துவ சிந்தனைகளும், அதோடு ஆங்கிலப் படிப்பும் என்று ஒரு புதிய காலத்திற்கு பாரதம் தயாராகிக்கொண்டு இருந்த காலம் அது.  பல்வேறு சிந்தனையாளர்கள், கவிஞர்கள், தத்துவ ஞானிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு பாரதத்தை வழிநடத்தும் முக்கியமானவர்கள் தோன்றிய காலமும் இதுதான். இந்த புகழ்வாய்ந்த முன்னோடிகளில் முக்கியமானவரான ராஜா ராம்மோகன்ராய் பிறந்தநாள் இன்று.

வங்காளத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் ராதாநகர் கிராமத்தில் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் நாள் ராம்காந்தோராய் - தாரணிதேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் ராம்மோகன்ராய். முகலாய ஆட்சியாளர்களின் சார்பாக வரிவசூலிக்கும் வேலையில் ராம்காந்தோராய் ஈடுபட்டு இருந்தார். அன்றய வழக்கத்தின்படி ராம்மோகன்ராய் வங்காள மொழியையும் பாரசீக மொழியையும் கற்றுத் தேர்ந்தார். மேற்படிப்புக்காக பாட்னா சென்ற ராம்மோகன் அங்கே அரபு மொழியைக் கற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வாரணாசியில் சமிஸ்க்ரித மொழியையும் கற்றார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஹீப்ரு, லத்தீன் என்று மேலைநாட்டு மொழிகள் பலவற்றையும் அவர் கற்றார். பல மொழி தெரிந்து இருந்ததால், பல்வேறு சமயங்களின் மூலநூல்களை அந்தந்த மொழிகளில் ராம்மோகன் படிக்கத் தொடங்கினார்.

ஆழமான படிப்பு அவரிடம் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியது. தொடர்ந்த விவாதங்கள் அவருக்கும் அவர் தந்தைக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகளை உருவாக்கியது. வீட்டை விட்டு வெளியேறிய ராம்மோகன்ராய், இமயமலை சாரல்களிலும் பின்னர் திபெத்திலும் அலைந்து திரிந்து பின்னர் சில காலம் கழித்து வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். 1803ஆம் ஆண்டு அவர் தந்தை இறந்து விட ராம்மோகன்ராய் கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய்துறையில் சிறுது காலம் பணியாற்றினார்.

சமுதாயத்தில் நிலவிவந்த பல்வேறு மூடநம்பிக்கைகளை மாற்றும் பணியில் ஆத்மீய சபை என்ற அமைப்பை நிறுவினார். உருவ வழிபாடு, இறுக்கமான ஜாதியமுறை ஆகியவற்றை எதிர்த்தும், பெண்களுக்கு சொத்துரிமை அளிக்க வேண்டும் என்றும், பலதார மணம், சதி ஆகியவற்றை எதிர்த்தும் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  ரபீந்த்ரநாத் தாகூரின் தந்தையான தேவேந்த்ரநாத் தாகூரோடு இணைந்து ப்ரம்ம சமாஜ் என்ற அமைப்பை உருவாக்கினார்.

பாரதத்தின் கடைசி முகலாய மன்னராக இருந்த பகதூர்ஷா ஜாபரின் தந்தையான இரண்டாம் அக்பர் ராம்மோகன்ராய்க்கு ராஜா என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தார். முதன்முதலாக பாரத நாட்டின் செல்வதை ஆங்கிலேயர்கள் எடுத்துச் செல்கிறார்கள் என்று பதிவு செய்தது ராஜா ராம்மோகன்ராய்தான்.

மாணவர்களுக்கு ஆங்கில கல்வி அளிக்கப்படவேண்டும் என்பதுதான் ராம்மோகன்ராயின் எண்ணமாக இருந்தது. இதற்காக கொல்கத்தா நகரில் அவர் 1817ஆம் ஆண்டே ஹிந்து கல்லூரியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ஆங்கிலோ ஹிந்து பள்ளி, ஸ்காட் சர்ச் கல்லூரி, வேதாந்தா கல்லூரி  ஆகிய நிறுவனங்கள் உருவாகவும் ராம்மோகன் உதவியாக இருந்தார். பத்திரிகை சுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார்.

பாரதத்தின் மறுமலர்ச்சி காலத்தை தொடங்கி வைத்த ராஜா ராம்மோகன்ராய் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் நாள் இங்கிலாந்து நாட்டில் காலமானார்.