ஞாயிறு, 31 மே, 2020

ராஜமாதா மஹாராணி அஹல்யாபாய் ஹோல்கர் - பிறந்தநாள் மே 31.


மெக்காலே முறையில் கல்வி கற்றவர்களால் இந்தியாவில் பெண்களும் அரசாட்சி செய்திருக்கிறார்கள், ஆயுதம் ஏந்தி நாட்டைக் காக்க போராடியிருக்கிறார்கள், மக்களின் குறைகளைத் தீர்த்திருக்கிறார்கள் என்பதை நம்பமுடியாது, ஏனென்றால் நமது உண்மையான வரலாற்றை அறிந்துகொண்டால் அவர்களுக்கு தாங்கள் பாரதீயர்கள் என்று பெருமிதம் வந்துவிடும், அப்படி இல்லாத மக்களை உருவாக்குவதே தங்களுக்கு நலம் பயக்கும் என்று உருவானதுதான் ஆங்கிலேயர்கள் வகுத்த பாடத் திட்டம். அடிமை விலங்கை உடைத்தெறிந்து எழுவது ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அதனை மாற்றி நமது உண்மையான வரலாற்றை எழுதாமல் இருப்பது நமது வரலாற்று சோகம்.

அஹல்யாபாய் அரச குடும்பத்தில் பிறவாதவர். அவர் தந்தை மன்கோஜி ஷிண்டே ஒரு கிராமத்தின் தலைவராக மஹாராஷ்டிரா பேஷ்வாக்களின் கீழ் பணியாற்றிவந்தார். வீட்டில் வைத்தே அஹல்யாபாய் கல்வி கற்றார்.
இன்றய மத்திய பிரதேசத்தின் மேற்கு பகுதிகள் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் தென் கிழக்கு பகுதிகள் உள்ளடங்கிய மால்வா பகுதியின் அரசரும் பேஷ்வாக்களின் தளபதியுமான மால்ஹர் ராவ் ஹோல்கர் ராவ் ஹோல்கர் கண்களில் அஹல்யாபாய் பட, அஹல்யாவின் கருணையையும் நடவடிக்கைகளையும் கண்ட மால்ஹர் அஹல்யாவை தனது மகன் காந்தேராவுக்கு மணம் முடிக்கிறார். அப்போது அஹல்யா மிகவும் சிறு பெண்.

1754ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பேர் யுத்தத்தில் கந்தராவ் மரணமடைகிறார். அப்போது கணவனோடு தானும் இறந்துவிடலாம் என்று நினைக்கும் அஹல்யாவின் மனதை அவர் மாமனார் மால்ஹர் ராவ் மாற்றி அவரை நாடாளுவதற்கு பயிற்சி அளிக்கிறார். 1766ஆம் ஆண்டு மால்ஹர் ராவும் இயற்கை எய்தி விட, அஹல்யாவின் மகன் மாலே ராவ் மன்னனாகிறார். ஆனாலும் துரதிர்ஷ்டம் அஹல்யாவை துரத்துகிறது. அவரது மகனும் ஒரே வருடத்தில் இறந்து போகிறார்.

அடுக்கடுக்கான துயரங்கள் சாதாரண மனிதர்களை நிலைகுலைய வைத்துவிடும். ஆனால் வரலாற்றில் இடம் பெரும் நாயகர்கள் சொந்த சோகங்களை கடந்து சென்று விடுவார்கள். மஹாராணி அஹல்யாபாயும் தனது சோகங்களை கடந்து சென்றார். மராட்டியத்தை ஆண்டு கொண்டு இருந்த பேஷ்வாக்களின் ஒப்புதலோடு அரசுப் பொறுப்பை ஏற்றார். ஹோல்கர் வீரர்கள் அவர்பின் அணிவகுத்தனர். திறமைவாய்ந்த துக்கோஜி ஹோல்கரை படைத்தளபதியாக நியமித்து, திறம்பட ஆட்சி செய்தார்.
மஹாராணியே ஒரு சிறந்த போர்வீரரும் ஆவார். அவரது பட்டத்து யானையின் அம்பாரியின் நான்கு புறமும் பொருத்தப்பட்ட அம்பராத்தூளியோடு யானை மீதேறி கையில் வில்லோடு போர்க்களம் புகும் ராணியை மக்கள் துர்க்கையின் வடிவமாகவே பார்த்தனர். தனது அரசின் எல்லைகளைக் காப்பதிலும், படையெடுத்து வரும் அரசர்களை தோற்கடிப்பதிலும் ராணி அஹல்யாபாய் வெற்றியை மட்டுமே கண்டார்.

ஏறத்தாழ முப்பதாண்டு காலம் ஆட்சி செய்த ராணி, மக்களின் குறைகளை தீர்த்து வைத்தார். நாடெங்கும் சாலைகள் அமைத்தல், ஆங்காங்கே வழிப்போக்கர்கள் தங்க சத்திரம் அமைத்தல், கலைஞர்களை ஆதரித்தல், தினம் தினம் தர்பாரில் அமர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்கான நிவாரணத்தை அளித்தல் என்று மக்களால் விரும்பப்படும் ஆட்சியை அளித்தார். கணவன் இறந்த பிறகு விதவையான மனைவி கணவனின் சொத்துக்கு உரிமையாளர் ஆகிறார் என்றும் கணவன் இறந்த பிறகு தத்தெடுக்கும் உரிமை மனைவிக்கு உண்டு என்று சட்டம் இயற்றினார்.

இன்றய இந்தோர் நகரம் என்பது அவராலேயே விரிவாக்கப்பட்டது. அதுபோக இந்தியாவெங்கும் கோவில்களை திருப்பணி செய்து விரிவாக்கியது அவரது முயற்சியால்தான். தற்போதுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், சோம்நாத்தில் உள்ள ஆலயம், கயாவில் உள்ள ஆலயம் மற்றும் கேதார்நாத், ப்ரயாக், குருஷேத்திரம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களை புதுப்பித்து, விரிவாக்கம் செய்து அவைகளுக்கு பல்வேறு மானியங்களை அவர் வழங்கினார்.
முப்பதாண்டு காலம் ஆட்சி நடத்திய மஹாராணி தனது எழுபதாவது வயத்தில் காலமானார். இந்தோர் விமானநிலையம் மற்றும் இந்தோர் பல்கலைக்கழகம் இன்று மஹாராணி அஹல்யாபாய் பெயராலே அழைக்கப்படுகிறது.

பாரத தாய்க்கு எத்தனையோ புகழ்வாய்ந்த மகள்கள், அவர்கள் அத்தனை பேருக்கும் எங்கள் வணக்கம்