செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

ஜீவா என்றோர் மானிடன் - ஆகஸ்ட் 21

தமிழகம் கண்ட தன்னலம் இல்லா தலைவர்களில் முக்கியமான தோழர் ஜீவா என்ற ப ஜீவானந்தத்தின் பிறந்தநாள் இன்று. காந்தியவாதியாகத் தொடங்கி பொதுவுடைமை போராளியாக பரிணமித்த தலைவர் ஜீவா. இந்த நாடுதான் எனது சொத்து என்று காந்தியிடம் ஜீவா கூற, இல்லை நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்று காந்தியால் புகழப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர். பிறப்பின் அடிப்படையில் பாரதியையும், அறியாமையால் கம்பனையும் திராவிட இயக்கங்கள் அவதூறு செய்த காலத்தில், மேடைதோறும் பாரதியையும் கம்பனையும் முழங்கி அவர்களை மக்களிடம் சேர்த்த இலக்கியவாதி தோழர் ஜீவா.நாகர்கோவில் மாவட்டத்தில் பூதப்பாண்டி நகரில் பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதியரின் மகனாக 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் பிறந்தவர் இவர். சிறுவயதிலேயே காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பள்ளிக்காலத்திலேயே தனது எழுத்தின் மூலம் காந்தியைப் பற்றியும் கதர் பற்றியும் கவிதைகளும் நாடகங்களும் எழுதி அதனை மேடையேற்றவும் செய்தார்.

ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்தார். அப்போதுதான் பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் தூக்கிலிடப்பட்டனர். போராளிகளின் மரணம் நாட்டில் பெரும் கிளர்ச்சியை உண்டு செய்தது. சிறையில் இருந்த ஜீவானந்தம் பொதுவுடைமை கருத்துக்களால் கவரப்பட்டார். பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன் ? என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தார். அதற்காக மீண்டும் சிறைப்பட்டார். புத்தகத்தை வெளியிட்ட ஈ வே ரா மன்னிப்பு கோரி சிறை தண்டனையில் இருந்து தப்பித்துக் கொண்டார். மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி ஜீவா சிறையில் இருந்தார்.

1938ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக ஜீவா தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது அவரோடு தேர்வானவர்கள் தீரர் சத்தியமூர்த்தி, ராஜாஜி, காமராஜ் ஆகியோர். வழக்கம் போல உள்கட்சி பூசலால் 1939ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இவரை கட்சியில் இருந்து நீக்கியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு ஜீவா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

அதன் பிறகு தனது வாழ்க்கை முழுவதும் பொது உடைமைவாதியாகவே ஜீவா வாழ்ந்தார். ஆங்கில அரசு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது. எனவே சில ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். 1952ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றினார்.

இலக்கியத்தின் பால் தீராக தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதி காலத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை துவங்கினார். இலக்கியத்தை மையப்படுத்தி 'தாமரை' இலக்கிய இதழை தொடங்கினார். 'ஜனசக்தி'  நாளிதழையும் தொடங்கினார்.

இத்தனை மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்கு  பிடித்தமானவராக இருந்தாலும்,  துாய்மையான தலைவனாக எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா. 

உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18- ம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா.

கருத்துரீதியில் எதிரணியில் இருந்தாலும் எளிமையும், தூய்மையும், தேசபக்தியும் இணைந்து வாழ்ந்த மாமனிதன் தோழர் ஜீவாவின் வாழ்வு பொதுவாழ்வில் ஈடுபடும் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடமாகும். 

கணினி உலகின் கதாநாயகன் - இன்போசிஸ் நாராயணமூர்த்தி - ஆகஸ்ட் 20

கல்வியும், உழைப்பும் ஒரு எளிய குடும்பத்தைச் சார்ந்த ஒருவனை எப்படி முன்னேற்றும் என்பதையும், அதன் பலன் எப்படி நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் என்பதையும், எப்படி பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் என்பதையும், எல்லா தடைகளையும் தாண்டி எப்படி பாரதம் உலகின் முக்கியமான சக்தியாக விளங்க முடியும் என்பதை நமது கண்களுக்கு முன்னே காட்டிய வரலாறு திரு நாராயணமூர்த்தி அவர்களின் வரலாறு.கர்நாடக மாநிலத்தில் ஒரு எளிய மத்தியதர குடும்பத்தில் 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்தவர் நாராயணமூர்த்தி. அவரது தந்தைக்கு அவர் இந்திய ஆட்சிப்பணிக்கு செல்ல வேண்டும் என்பது எண்ணம். ஆனால் அன்றய இளைஞர்கள் போல நாராயணமூர்த்தி பொறியியல் துறையில் சேரவே ஆர்வம் கொண்டு இருந்தார். புகழ்வாய்ந்த இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ( IIT )  இடம் கிடைத்து இருந்தாலும், பொருளாதார நெருக்கடியால் அங்கே சேர முடியாமல் பிராந்திய பொறியியல் கல்லூரியில் ( REC ) மின் பொறியியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். பின்னர் கான்பூர் இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் ( IIT Kanpur ) முதுகலை பட்டம் பெற்றார்.

அஹமதாபாத் நகரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பணி புரியத் தொடங்கிய நாராயணமூர்த்தி, கணினி துறையால் ஈர்க்கப்பட்டார். சிறிது காலம் புனா நகரில் இருந்த பத்னி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்தார். பிறகு தன் நண்பர்களோடு இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். 1981ஆம் ஆண்டு மிகச் சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. உலகம் முழுவதும் தொலைத்தொடர்பும் கணினிமயமாக்குதலும் அடுத்த இருபதாண்டுகளில் மிகப் பெரும் வளர்ச்சியை கண்டது. தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை குறைந்த செலவில் அளிப்பதில் இன்போசிஸ் நிறுவனம் முன்னணியில் இருந்தது. எனவே அதே துறையில் இருந்த பல நிறுவனங்களைக் காட்டிலும் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி பலமடங்கு அதிகமாக இருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகளில் நரசிம்ம ராவால் தொடங்கப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டது. மிகப் பெரும் இளைஞர் சமுதாயம், அதுவும் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் திறமையான இளைஞர் பட்டாளம் நாராயண மூர்த்திக்கு உறுதுணையாக அமைந்தது. இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி இந்த இளைஞர்களை பணக்காரர்களாக மாற்றியது. அதிகமான சம்பளம், நிறுவனத்தின் பங்குகளை அளித்தல் என்று திறமை வாய்ந்த இளைஞர்களை இன்போசிஸ் தக்க வைத்துக் கொண்டது.
வறுமைக்கோட்டுக்கு கீழேயும், மத்தியதர வர்க்கமாகவும் இருந்த பல குடும்பங்கள் பொருளாதாரத்தில் பெருமளவு முன்னேறின.  இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பலர் பிறகு தனியாக நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமான தொழிலதிபர்களாக விளங்குகின்றனர்.

நாராயணமூர்த்தி அவர்களின் மனைவி திருமதி சுதா மூர்த்தி இன்போசிஸ் அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். இதன் மூலம் கல்வி சுகாதாரம் போன்ற துறைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அவர் செய்து வருகிறார்.

பல்வேறு விருதுகளை பெற்ற நாராயணமூர்த்திக்கு பாரத அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷண் விருதுகளை வழங்கி மரியாதை செலுத்தி உள்ளது.

பாரத நாட்டின் அறிவின் கூர்மையை உலகமெங்கும் பறைசாற்றிய திரு நாராயணமூர்த்திக்கு ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறது.