திங்கள், 30 டிசம்பர், 2019

குலபதி முன்ஷி பிறந்தநாள் - டிசம்பர் 30

வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், நாடாளுமன்ற உறுப்பினர், பாரத அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த குழுவின் உறுப்பினர், எழுத்தாளர், பாரதிய வித்யா பவன் கல்வி நிறுவனத்தைத் தொடங்கியவர் என்று பல்முக ஆளுமையாக விளங்கிய கனையாலால் மனேக்லால் முன்ஷி என்ற குலபதி முன்ஷியின் பிறந்தநாள் இன்று.குஜராத் மாநிலத்தின் பரூச் பகுதியைச் சேர்ந்த முன்ஷி 1887ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் பிறந்தவர். பரோடா கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியத்திலும், பின்னர் மும்பை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்த முன்ஷி மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். பரோடாவில் இவரது ஆசிரியராக இருந்தவர் மஹரிஷி அரவிந்த கோஷ் அவர்கள். முன்ஷியின் மனதில் தேசபக்தியை விதைத்தது அரவிந்தரே ஆவார்.

மும்பையில் பணியாற்றிக்கொண்டு இருந்த போது முன்ஷி, ஹோம் ரூல் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். 1920ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு அதன் பின்னர் காங்கிரஸ் இயக்கத்திலும் பணியாற்றினார். 1927ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பம்பாய் ராஜதானியின் சட்டசபை உறுப்பினராக முன்ஷி தேர்ந்ததெடுக்கப்பட்டார். பர்தோலி சத்தியாகிரஹப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்ஷி அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.

சட்ட மறுப்பு இயக்கம், தனிநபர் சத்தியாகிரஹம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு பல்வேறு முறை சிறையானார். அன்றய ஐக்கிய மஹாராஷ்டிரா பகுதியின் முக்கியமான தலைவராக காங்கிரஸ் கட்சியால் இனம் காணப்பட்ட முன்ஷிக்கு பல்வேறு கட்சிப் பொறுப்புகள் வரத் தொடங்கின. காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர், காங்கிரஸ் பாராளுமன்ற குழுவின் செயலாளர் என்ற பொறுப்புகளும், மஹாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பதவியும் முன்ஷியைத் தேடி வந்தது. சிறிதுகாலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருந்த முன்ஷியை, காந்தி வற்புறுத்தி மீண்டும் கட்சியில் இணைய வைத்தார்.

நாடு சுதந்திரம் அடையும் சமயத்தில், முன்ஷி அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய ஏழு உறுப்பினர் அடங்கிய குழுவின் உறுப்பினராகவும் முன்ஷி பணியாற்றனார். நாட்டின் அலுவல் மொழியாக தேவநாகரி எழுத்தில் எழுதப்படும் ஹிந்தி இருக்கும், பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலமும் இணைப்பு மொழியாக இருக்கும்  என்று வரையறை செய்த அரசியலமைப்பின் 17ஆவது பிரிவு என்பது முன்ஷி - கோபால்சாமி ஐயங்கார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அமைந்த ஒன்றாகும். அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கும் அடிப்படை உரிமைகள் பற்றிய பகுதிகள் முன்ஷியால் முன்னெடுக்கப்பட்டவைதாம்.

அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் இடிக்கப்பட சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் புதுப்பிக்க சர்தார் வல்லபாய் படேல் முடிவு செய்தார். ஆனால் அந்தப் பணி முடியும் முன்னரே படேல் இறந்து போக, அந்தப் பணியை முன்ஷி தொடர்ந்தார், இன்று சோமநாதபுரத்தில் சிவனின் ஆலயம் எத்தனை முறை ஆக்கிரமிக்கப்பட்டாலும் மீண்டும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் பாரத ஆன்மாவின் குறியீடாக கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

1950 - 1952 ஆண்டுகளில் இடைக்கால அரசின் விவசாயம் மற்றும் உணவுத்துறை மந்திரியாக முன்ஷி நியமிக்கப்பட்டார். நாடெங்கும் நடைபெறும் மரம் நடு விழாவான வனமஹோஸ்தவம் முன்ஷியின் திட்டமே ஆகும். 1952 முதல் 1957ஆம் ஆண்டு வரை உத்திரப்பிரதேசத்தின் ஆளுநராகவும் முன்ஷி பணியாற்றினார். நாட்டின் முன்னேற்றம் சோசலிசத்தின் மூலமாகவே நடைபெறும் என்று நேரு எண்ணினார். ஆனால் தாராள பொருளாதாரத் கொள்கைதான் பலன் அளிக்கும் என்று எண்ணிய முன்ஷி, ராஜாஜி தொடங்கிய ஸ்வதந்தரா கட்சியில் இணைந்து கொண்டார். ராஜாஜியின் மறைவுக்குப் பின்னர் ஸ்வதந்திரா கட்சி செயல்படாமல் போக, முன்ஷி ஜனசங் கட்சியில் இணைந்து செயல்பட்டார். சங்கத்தின் முக்கியமான சகோதர அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனர்களில் முன்ஷியும் ஒருவர்.

நெடுங்காலம் அரசியலில் இருந்தாலும், கல்விப் புலத்திலும், இலக்கியத்திலும் முன்ஷியின் பங்களிப்பு மகத்தானது. மும்பை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும், பல்வேறு கல்வி நிறுவனங்களின் வழிகாட்டியாகவும் முன்ஷி செயல்பட்டார். அவர் தொடங்கிய பாரதிய வித்யா பவன் நிறுவனம் இன்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழிகளில் பல்வேறு புத்தகங்களை முன்ஷி எழுதி உள்ளார். கிருஷ்ணாவதார் என்ற ஏழு பகுதிகள் கொண்ட மஹாபாரதம் பற்றிய தொகுப்பு அவர் எழுதியதில் முக்கியமான ஒன்றாகும்.

பல்வேறு ஆசிரியர்களைக் கொண்டு பல்லாயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் குருமார்களை குலபதி என்று பெருமையாக அழைப்பது நமது வழக்கம். அப்படியான கல்வி சேவையைச் செய்ததால் முன்ஷியை நாடு குலபதி முன்ஷி என்று கொண்டாடுகிறது.

எண்பத்தி மூன்று ஆண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கு பெரும் சேவையாற்றிய குலபதி முன்ஷி 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் காலமானார். சோமநாதபுர ஆலயம் உள்ளவரை, பாரதிய வித்யா பவன் கல்வி நிறுவனங்கள் உள்ளவரை முன்ஷியும் இருப்பார் என்பதில் ஐயமில்லை.