திங்கள், 6 ஜூலை, 2020

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் - டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜீ பிறந்தநாள் - ஜூலை 6.


கல்வியாளரும், கொல்கத்தா பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தரும், வழக்கறிஞரும், இன்றய பாஜகவின் முன்னோடியான பாரதிய  ஜனசங்கத்தை நிறுவியவருமான திரு சியாமா பிரசாத் முகர்ஜீயின் பிறந்ததினம் இன்று.

வங்காளத்தைச் சேர்ந்த கணிதவியலாளர் திரு அஷுதோஷ் முகேர்ஜீ. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய இரண்டு துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் மாணவர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தர், வழக்கறிஞர், கொல்கத்தா நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். இப்படி புகழ்வாய்ந்த அஷுதோஷ் முகர்ஜீயின் மகனாக 1901  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் நாள் பிறந்தவர்தான் டாக்டர் சியாம பிரசாத் முகேர்ஜீ.

இயல்பிலேயே படிப்பில் சூடிப்பாக இருந்த சியாம பிரசாத் வங்காள மொழியில் முதுகலைப் பட்டமும், சட்டப் படிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து தனது பாரிஸ்டர் பட்டத்தை இங்கிலாந்து நாட்டில் பெற்றார். 1934ஆம் ஆண்டு தனது 33ஆம் வயதில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இன்று வரை மிக இளையவயதில் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரே அறிஞராக சியாம பிரசாத் முகர்ஜீயே ஆவார். நான்கு வருடங்கள் அவர் இந்தப் பொறுப்பை வகித்தார். இவரது காலத்தில்தான் முதல்முறையாக பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் வங்காள மொழியில் உரையாற்றினார். அந்த விருந்தினர் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர். முகேர்ஜியின் சேவையைப் பாராட்டி கொல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு 1938ஆம் ஆண்டு கவுரவ டாக்டர் பட்டத்தை அளித்தது.

1929ஆம் ஆண்டு தனது 29ஆவது வயதில் முகர்ஜீ வங்காள சட்ட மேல்சபைக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினராக கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அடுத்த வருடமே சட்டமன்றங்களைப் புறக்கணிக்க காங்கிரஸ் தீர்மானிக்க, முகர்ஜியும் பதவி விலகினார். உடனடியாக சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மீண்டும் 1937ஆம் ஆண்டு தேர்தலில் சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1941 - 42 ஆம் ஆண்டுகளில் வங்காள மாநிலத்தின் நிதியமைச்சராகப் பதவி வகித்தார்.

1939ஆம் ஆண்டு ஹிந்து மஹாசபையில் தன்னை இணைத்துக் கொண்ட முகர்ஜி அந்த ஆண்டே ஹிந்து மகாசபையின் தாற்காலிகத் தலைவராகவும், அடுத்த ஆண்டு செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

சுதந்திரத்தை அடுத்து ஜவாஹர்லால் நேரு தலைமையில் உருவான அரசாங்கத்தில் தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் உடன் நேரு 1950ஆம் ஆண்டு செய்து கொண்ட தில்லி ஒப்பந்தத்தை ஏற்காமல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அன்றய கிழக்கு பாகிஸ்தானில் இருந்த ஹிந்துக்கள் பாகிஸ்தான் கீழே நிம்மதியாக வாழமுடியாது, எனவே பாரதம் - பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் உள்ள மக்களை மதத்தின் படி மாற்றிக்கொள்வதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று சியாம பிரசாத் முகர்ஜி கோரினார். வரலாற்றின் பக்கங்களில் இருந்து பாடம் படிக்காது, கனவுலகில் வாழ்ந்த நேரு அதனை நிராகரித்தார். ஆனால் முகர்ஜி கூறியது தான் நடந்தது. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரான ஹிந்துக்களும், சீக்கியர்களும் அங்கே வாழ்வுரிமை இல்லாமல்தான் இன்றும் இருக்கிறார்கள். அப்படித் துன்பப்படும் சகோதர்களுக்கு உதவத்தான் மோதி அரசு குடியுரிமைச் சட்டத்தை இப்போது திருத்தி, அவர்களுக்கு பாரத நாட்டின் குடியுரிமை வழங்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. 

நேருவோடு உருவான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் அன்றய சர்சங்கசாலக்கான குருஜி கோல்வால்கர் அறிவுரையின் பேரில், முகர்ஜி பாரதிய ஜன் சங்கம் என்ற கட்சியை உருவாக்கினார். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் ஜன்சங் கட்சி மூன்று தொகுதிகளைக் கைப்பற்றியது.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அதிகாரங்களை அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவை முகர்ஜி எதிர்த்து நாடாளுமண்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து போராடிக் கொண்டு இருந்தார். " ஒரு நாட்டில் இரண்டு அரசியலமைப்பு சட்டங்கள், இரண்டு பிரதமர்கள், இரண்டு தேசிய சின்னங்கள் இருக்க முடியாது" என்பது அவரின் போர் முழக்கமாக இருந்தது. ஹிந்து மஹாசபா மற்றும் ஜம்மு பிரஜா பரிஷத் ஆகிய கட்சிகளோடு இணைந்து ஜன்சங் 370ஆவது சட்டப் பிரிவை நீக்கக் கோரி சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்தது.
எந்தவிதமான அடையாள அட்டையைக் காட்டாமல் காஷ்மீருக்கு செல்லும் போராட்டத்தை முகர்ஜி தொடங்கினார். காஷ்மீர் மாநிலத்துக்கு உள்ளே நுழையும் போது 1953ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி முகர்ஜி கைது செய்யப்பட்டார். 1953ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறையில் முகர்ஜி மரணமடைந்தார்.
முகர்ஜியின் மரணம் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நேரு நிராகரித்தார். 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் முகர்ஜியின் மரணத்திற்கு பின்னர் நேருவின் சூழ்ச்சி இருந்தது என்று குற்றம் சாட்டினார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரு கல்லூரி, அஹமதாபாத் நகரில் ஒரு பாலம், டெல்லியில் ஒரு சாலை, கோவா பல்கலைக்கழகத்தில் ஒரு உள்ளரங்க விளையாட்டு அரங்கம், ராய்ப்பூர் நகரில் இந்திய தகவல் தொழில்நுட்ப கல்லூரி என்று பல்வேறு இடங்களுக்கு சியாம பிரசாத் முகர்ஜியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

370ஆவது சட்டப்பிரிவை நீக்கி, எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவோடு முழுமையாக இணைத்து மோதி அரசு முகர்ஜியின் பலிதானத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளது.