திங்கள், 30 மார்ச், 2020

புரட்சியாளர் பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா நினைவுநாள் - மார்ச் 30

நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது சிறப்பானது, அதிலும் சிறந்தது நாட்டுக்காக உயிரோடு இருப்பது. அதிலும் சிறப்பு நாட்டை அடிமைப்படுத்தியவர்கள் நாட்டில் இருந்து கொண்டே தாய்நாட்டின் விடுதலைக்கு உழைப்பது, அதற்கான தேசபக்தர்களை உருவாக்குவது. அப்படி உழைத்த தியாகி பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவின் நினைவுநாள் இன்று.


பாரத நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஆயுதம் தாங்கிய போராளிகளை லண்டன் நகரில் உருவாக்கிய நிறுவனம் இந்தியா ஹவுஸ். வீர சாவர்க்கர், வ வே சு ஐயர், மதன்லால் திங்ரா, மண்டயம் பார்த்தசாரதி திருமலாச்சாரியா, வீரேந்திரநாத் சட்டோபாத்யாய, காமா அம்மையார், லாலா ஹர்தயாள் என்று புகழ்பெற்ற வீரர்களை உருவாக்கி, தேசசேவைக்கு அளித்த இடம் அது. அதனை நிறுவியவர்தான் பண்டிட் ஷயாமாஜி கிருஷ்ண வர்மா.

1857ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் நாள் நூற்பாலை ஒன்றில் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றிக்கொண்டு இருந்த கிருஷ்ணதாஸ் பானுஷாலிக்கும் கோமதிபாய் அம்மையாருக்கும் மகனாக இன்றய குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின் மாண்டவி பகுதியில்  பிறந்தவர் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா. தனது சிறு வயதிலேயே தாயாரை இழந்ததால் இவர் தன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். தனது ஆரம்பிக் கல்வியை புஜ் நகரத்தில் முடித்த கிருஷ்ண வர்மா மேற்படிப்புக்காக மும்பைக்கு வந்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சமிஸ்க்ரித மொழியில் புலமையை வளர்த்துக்கொண்டார்.

ஆர்ய சமாஜத்தை நிறுவிய ஸ்வாமி தயானந்தரின் சீடராக, வேதாந்த தத்துவத்தை கிருஷ்ண வர்மா கற்றுக்கொண்டார். வடநாட்டில் பல்வேறு இடங்களில் வேதாந்த ஞானத்தைப் பற்றிய சொற்பொழிவுகளை அவர் நடத்தலானார். அவரது மேதைமையைப் பாராட்டி அதனை அங்கீகரிக்கும் விதமாக வாரணாசி நகரத்தில் உள்ள ப்ராஹ்மணர்கள் கிருஷ்ண வர்மாவுக்கு பண்டிட் என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தனர். இவரது சமிஸ்க்ரித அறிவைக் கண்டு வியந்த மோனிர் வில்லியம்ஸ் என்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிருஷ்ண வர்மாவை தன் உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார்.

1879ஆம் ஆண்டு லண்டன் சென்ற கிருஷ்ண வர்மா 1883ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1885ஆம் ஆண்டு நாடு திரும்பிய கிருஷ்ண வர்மா வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். இவரது மேதமைக் கேள்விப்பட்டு மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரத்தினபுரி அரசு இவரை தங்கள் திவானாக நியமித்தது. சிறிது காலத்தில் உடல்நிலை காரணமாக அந்தப் பதவியை ராஜினாமா செய்த கிருஷ்ண வர்மா அஜ்மீர் நகருக்குக் குடியேறி அங்கே வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் உதய்ப்பூர் மன்னரின் அமைச்சராகவும் ஜூனாகாட் அரசின் திவானாகவும் பணியாற்றினார். ஆனால் அன்றய அரசர்களுக்கு வரையறை செய்யப்பட்ட அதிகாரங்கள் இருந்தன. பெரும்பான்மையான அதிகாரங்கள் ஆங்கிலேயர் வசமே இருந்தது. இதனால் மனம் நொந்த கிருஷ்ண வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இங்கிலாந்து திரும்பினார்.

ஹிந்து ஞானமரபு வேறு ஹிந்து அரசியல்மரபு வேறு என்று இப்போது சில அறிஞர்கள் பேசத்தொடங்கி உள்ளனர். ஆனால் எப்போதெல்லாம் ஹிந்து அரசியல்மரபு ஹிந்து ஞானமரபோடு இணைந்து செயல்பட்டதோ அப்போதுதான் பாரதம் தலைசிறந்து இருந்தது என்பதுதான் வரலாறு. விஷ்ணுகுப்த சாணக்யனும் சந்திரகுப்த மௌரியன், சமர்த்த ராமதாசரும் சத்ரபதி சிவாஜியும், வித்யாரண்ய ஸ்வாமிகளும் ஹரிஹர புக்கரும், குரு நானக் தொடங்கி குரு கோவிந்தசிம்மன் வழியாக குரு கிரந்த சாஹேப் என்று தேவை ஏற்படும்போதெல்லாம் ஹிந்து ஞானமரபு ஹிந்து அரசியல்மரபிற்கு வழிகாட்டியாக இருந்துள்ளது.

அதன் நீட்சிதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு பல்வேறு ஹிந்து தர்மத்தின் காவலர்களாக ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது சீடர்களின் வரிசை ஒருபுறமும் சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் மறுபுறமும் என்று இந்த நாட்டை வழிநடத்த அவதரித்தார்கள். இங்கிலாந்து நாட்டுக்கு படிக்க வரும் பாரத மாணவர்களுக்காக அவர்கள் வசதிக்காக லண்டன் நகரில் வசதி செய்து கொடுக்கும்படி ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவுக்கு தயானந்த சரஸ்வதி அறிவுறித்தினார். அதன்படிதான் லண்டன் நகரில் ஒரு பெரிய கட்டடத்தை விலைக்கு வாங்கி இந்தியா ஹவுஸ் என்ற பெயரில் அவர் நிறுவினார். இதன் தொடக்க விழாவில் தாதாபாய் நௌரோஜி, மேடம் காமா ஆகியோர் கலந்து கொண்டனர். லண்டன் வரும் பாரத மாணவர்கள் தங்கிப் படிக்கும் இடமாக லண்டன் ஹவுஸ் விளங்கியது. அதிலும் தேசிய சிந்தனை உள்ள மாணவர்கள் ஓன்று கூடி, நாட்டின் விடுதலைக்காக என்ன செய்யலாம் என்று திட்டமிடும் இடமாகவும் அது விளங்கியது.

அரசியல் சிந்தனைநீட்சியில் கிருஷ்ண வர்மா திலகரின் வழியைப் பின்பற்றுபவராக இருந்தார். மீண்டும் மீண்டும் ஆங்கில அரசுக்கு விண்ணப்பம் அளிக்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அவருக்கு உவப்பாக இல்லை. லண்டன் நகருக்கு வருகை தரும் பல்வேறு தலைவர்கள் லண்டன் ஹவுஸுக்கு வந்து, அங்குள்ள மாணவர்களிடம் உரையாடுவது வழக்கமாக இருந்தது. லாலா லஜபதி ராய், காந்தி போன்றவர்கள் அங்கே வந்துள்ளார்.

ஆயுதம் தாங்கிப் போராடும் எண்ணமுடைய பல்வேறு புரட்சியாளர்களை லண்டன் ஹவுஸ் உருவாக்கியது. அதில் முக்கியமானவர் வீர சாவர்க்கர், வ வே சு ஐயர், மதன்லால் திங்ரா போன்றவர்கள் முக்கியமானவர்கள். ஆங்கில அரசின் கண்கள் இந்தியா ஹவுஸ் மீது படிந்ததைத் தொடர்ந்து கிருஷ்ண வர்மா 1907ஆம் ஆண்டு யாரும் அறியாமல் பாரிஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். முதலாம் உலகப் போர் தொடங்கும் சாத்தியக்கூறுகளை யூகித்து அறிந்த கிருஷ்ணவர்மா அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் நல்லுறவு ஏற்படும் என்று எதிர்பார்த்து ஜெனீவா நகருக்கு சென்றுவிட்டார்.

ஏறத்தாழ முப்பதாண்டு காலம் நாட்டை விட்டுப் பிரிந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா 1930ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் காலமானார். தேசபக்தரின் மரணச் செய்தியை வெளியில் தெரியாமல் வைத்திருக்க ஆங்கில அரசு முயற்சி செய்தது. ஆனாலும் செய்தி கசிந்து லாகூர் சிறையில் தூக்குத் தண்டனைக்காக காத்துகொண்டு இருந்த பகத்சிங் மற்றும் அவர் தோழர்களும், திலகர் தொடங்கிய மராத்தா போன்ற பத்திரிகைகளும் அவரின் புகழைப் பேசி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

வாழ்நாளின் பெரும்பகுதியை வெளிநாட்டில் கழிந்த கிருஷ்ண வர்மா தனது அஸ்தியும், தன் மனைவி பானுமதியின் அஸ்தியும் பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு பாரத நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கேதான் கரைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து, நூறாண்டுகளுக்கு அவர்கள் அஸ்தியை ஜெனீவாவில் உள்ள தூய ஜார்ஜ் கல்லறைத் தோட்டத்தில் அதற்கான பணத்தைக் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தார்.

1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே சகல மரியாதைகளோடும் அவரின் அஸ்தி பாரத நாட்டுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் வரலாற்றை மறைத்து, மாற்றி எழுத முனைப்பாக இருந்த அரசியல்வாதிகளால் அது நடைபெறவில்லை. இறுதியாக 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அன்றய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோதி, பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவின் அஸ்தியையும் அவர் மனைவி பானுமதியின் அஸ்தியையும் பெற்றுக்கொண்டு பாரதம் வந்தார். மும்பையில் இருந்து அவரின் சொந்த ஊரான மாண்டவி நகருக்கு பெரும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட அந்த தியாகியின் அஸ்தி கிராந்தி தீர்த் என்ற நினைவிடத்தில் மரியாதையோடு வைக்கப்பட்டு உள்ளது. லண்டன் நகரில் உள்ள இந்தியா ஹவுஸ்  நினைவிடம் உருவாக்கப்பட்டு உள்ளது. கட்ச் நகரில் அருகே உருவான புது நகரம் ஷ்யாமாஜி கிருஷ்ணவர்மா நகர் என்றும், கட்ச் பல்கலைக்கழகத்திற்கு ஷ்யாமாஜி கிருஷ்ணவர்மாவின் பெயரைச் சூட்டி நாடு அந்தத் தியாகிக்கு மரியாதை செலுத்தியது.

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாது நாட்டுக்காக தங்களை முழுவதும் அர்ப்பணம் செய்த பல்லாயிரம் தியாகிகளின் உதிரத்தால் கிடைத்தது நமது சுதந்திரம். அதனைக் காப்பாற்றுவதும், நாட்டின் பெருமைக்காக நமது திறமைகளை அர்ப்பணம் செய்வதுதான் அந்தத் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும்.