செவ்வாய், 17 செப்டம்பர், 2019

நவபாரதத்தின் நாயகன் நரேந்திர மோதி - செப்டம்பர் 17

எப்போதெல்லாம் பாரத நாட்டின் பாதையை முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மிகப்பெரும் தலைவர்கள் பிறப்பார்கள். காலங்கள்தோறும் கவிஞர்களாக, தத்துவ ஞானிகளாக, ஆச்சாரிய புருஷர்களாக, மன்னர்களாக, மஹாவீரர்களாக அவர்கள் பிறந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அதுபோல நாட்டின் பாதையை முழுவதுமாக மாற்றி அமைத்துக்கொண்டு இருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோதியின் பிறந்தநாள்  இன்று.



மிக எளிய, எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்து, மிகச் சிறுவயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கத்தில் இணைந்து, பின்னர் நாடெங்கும் அலைந்து திரிந்து இந்த நாட்டின் இயல்பான நிலையை நேரில் பார்த்து அறிந்துகொண்டு, நெருக்கடி நிலை காலத்தில் சர்வாதிகாரத்திற்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றி, சங்கத்தின் ஆணைக்கிணங்க பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி, படிப்படியாக உயர்ந்து குஜராத் மாநில முதல்வராக, அதன் பின்னர் பிரதமராக, உலக தலைவர்கள் எல்லோரும் மதிக்கும் ஆளுமையாக விளங்கும் பிரதமரின் வாழ்க்கையை நாம் எல்லோருமே அறிவோம். ஆனால் எந்த விதத்தில் மோதி மற்ற பிரதமர்களிடம் இருந்து, மற்ற அரசியல் தலைவர்களிடம் இருந்து வேறுபடுகிறார் ?

பாரத நாட்டின் பெருவாரியான அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் மேற்கத்திய கண்ணோட்டத்தில்தான் நாட்டின் பிரச்சனைகளை நோக்குகிறார்கள். பல ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட நாட்டுக்கு சில பிரத்தியேகமான சவால்கள் இருக்கும், அதற்கான தீர்வுகளை நமது பாரம்பரிய வேர்களில் இருந்து தேடுவதுதான் சரியாக இருக்குமே அன்றி, இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தங்கள் நமக்கான தீர்வைத் தராது. இதனை முழுவதுமாகப் புரிந்தவர் மோதி. அதற்கு பல ஆண்டுகள் ஒரு சந்நியாசி போல இந்த நாட்டை அவர் அலைந்து திரிந்து தரிசனம் செய்த அனுபவம் கை கொடுக்கிறது.

அரசாங்கத்தின் கைகள் தொடாத பகுதிகள் நாட்டில் பல உண்டு, பல மக்களுக்கு அவர்கள் பாதுகாப்பாக வாழ, நிம்மதியாக வருமானம் ஈட்ட  அரசு வழிவகை செய்து கொடுத்தால் போதும், மற்றவற்றை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அதை சரியாக கண்டு கொண்டதால்தான் மோதி அடிப்படை வசதிகளை மக்களுக்கு அளிக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தினார். அனைவருக்கும் வங்கி கணக்கு உருவாக்குதல், வீடுகள் தோறும் கழிப்பறை வசதி, நாட்டில் எல்லா பகுதிகளுக்கும் மின்சார வசதி, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு உருளைகள் என்று மக்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரும் திட்டங்களை உருவாக்கினார். மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு உருவானதால், பல்வேறு நலத்திட்டங்களில் பொதுமக்களுக்கான பங்கு நேரடியாக அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊழல் மிகப்பெரும் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களை மயக்கும் பேச்சுவன்மை இயல்பாகவே மோதிக்கு அமைந்துள்ளது. பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி, அல்லது மனதின் குரல் என்று பிரதமர் நாட்டு மக்களோடு வானொலியில் உரையாற்றும் தொடர் நிகழ்ச்சிகளாகட்டும், மிக இயல்பாக மக்களோடு இணைந்து ஒரு மூத்த சகோதரன் பேசுவது போலதான் தோன்றும். உள்ளத்தில் உண்மை உண்டானதால் வாக்கில் ஒளி உருவாகி அது மற்றவர்களுக்கும் தெரிகிறது.

அதிகாரத்தின் நிழலில் தனது உறவினர்களை நெருங்க விடாதது, பல்லாண்டு காலம் அதிகாரத்தில் இருந்தாலும் ஊழல் குற்றச்சாட்டின் கறை படியாமல் இருப்பது, அதிகார வர்க்கத்தில் ஊழலை குறைத்தது என்ற எண்ணம் மக்களும் உண்டானதால் தான், பிரதமர் கேட்டுக்கொண்ட உடன் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை விட்டுக் கொடுத்ததாகட்டும், அல்லது உயர் மதிப்பு பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்த பின்னர், பெரும் கேள்வி இல்லாமல் வங்கிகளில் வரிசையில் நின்றதாகட்டும் என்று அவரின் பல்வேறு முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கும், அதன் பின்னர் தீவிரவாதத்தை கண்டிக்கிறோம், இது கோழைத்தனமான தாக்குதல் என்று அரசின் அறிக்கை வெளியாகும், இந்த சூழலில் இருந்து தீவிரவாத தாக்குதல்களை பெருமளவு கட்டுப்படுத்தியும், ஒன்றுக்கு பத்து என பதிலடி கொடுத்ததும் என்று நடைபெற்ற நடவடிக்கைகள் பெருவாரியான மக்களின் ஆதரவை பிரதமருக்கு அளித்துள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதில், பல்வேறு அயல்நாடுகளோடு உறவுகளை சீர்படுத்துவதில், அதோடு ஏதாவது இந்திய குடிமகன் வெளிநாட்டில் பிரச்சனைக்கு உள்ளானால், அவனை காப்பாற்றுவதில் என்று பல்வேறு தளங்களில் அரசு செயல்பட்டுக்கொண்டு வருகிறது. வழக்கமாக சுதந்திரத்தினத்தன்று செங்கோட்டையில் கொடி ஏற்றி எழுதிக் கொடுத்த உரைகளை பிரதமர் படிப்பதுதான் வழக்கம். ஆனால் ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் பங்குதார் கூட்டத்தில் அந்த நிறுவனத்தின் தலைவர் அளிக்கும் உரை போல, சென்ற ஆண்டு என்ன இலக்குகளை வைத்தோம், அதில் எதனை அடைந்தோம், எதனை அடையவில்லை, இதனால் கிடைத்த படிப்பினை என்ன, அடுத்த ஆண்டு எதனை நோக்கி நமது பயணம் இருக்கும் என்று ஒரு தொழில்முறையான அறிக்கை போல சமர்ப்பிப்பது என்பது மோதி கொண்டுவந்த பெரும் மாறுதல்.

மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சிகளும், பத்திரிகைகளும் அவர் கூறியதை எல்லாம் திரித்துக் கூறினாலும், அவர் கொண்டு வந்தார் என்பதாலேயே எல்லாவற்றையும் எதிர்த்தாலும், தனது நேர்மறை சிந்தனையால், செயலூக்கத்தால் அதனை எல்லாம் தாண்டிச் செல்கிறார் மோதி.

இயல்பாகவே மக்களிடம் உள்ள தாய்நாட்டைப் பற்றிய பெருமித்தத்தைத் தூண்டி, நாடு முன்னேற உழைக்கும் பிரதமருக்கு, சங்கத்தின் மூத்த பிரச்சாரகருக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

வாழ்க பல்லாண்டு